சங்கீதம் 8
கித்தீத் வாத்தியத்தில் வாசிக்க பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். 
 1 எங்கள் ஆண்டவராகிய யெகோவாவே, 
பூமியெங்கும் உமது பெயர் எவ்வளவு புகழ் உடையதாய் இருக்கிறது! 
நீர் வானங்களுக்கு மேலாக 
உமது மகிமையை வைத்திருக்கிறீர். 
 2 உமது எதிரிகளையும் பழிவாங்குபவர்களையும் ஒடுக்க, 
உமது பகைவர்களின் நிமித்தம் பிள்ளைகள் மற்றும் குழந்தைகளின் 
உதடுகளிலிருந்து வரும் துதியின் மூலமாக 
வல்லமையை உறுதிப்படுத்தினீர். 
 3 உமது விரல்களின் வேலைப்பாடான வானங்களையும் 
அவற்றில் நீர் பதித்து வைத்த 
சந்திரனையும் நட்சத்திரங்களையும் பற்றி 
நான் சிந்திக்கும்போது, 
 4 மனுக்குலத்தில் நீர் கரிசனை கொள்வதற்கும், 
மனிதரில் நீர் அக்கறை கொள்வதற்கும் அவர்கள் எம்மாத்திரம்?* 8:4 எபிரெய மொழியில் மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷக்குமாரனை நீர் கவனிப்பதற்கும் அவன் எம்மாத்திரம்? 
 5 நீர் அவர்களை இறைத்தூதர்களைப் பார்க்கிலும் சற்று சிறியவர்களாகப் படைத்து, 
அவர்களை† 8:5 அவர்களை அல்லது அவனை மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டினீர். 
 6 உமது கைகளின் வேலைப்பாடுகளின்மேல் அவர்களை ஆளுநர்களாக்கினீர்; 
அனைத்தையும்: 
 7 எல்லா ஆட்டு மந்தைகளையும் மாட்டு மந்தைகளையும் 
காட்டு மிருகங்களையும் 
 8 ஆகாயத்துப் பறவைகளையும் 
கடல் மீன்களையும் 
கடற்பரப்பில் நீந்தும் அனைத்தையும் அவர்களுடைய பாதங்களுக்குக்கீழ் வைத்தீர். 
 9 எங்கள் ஆண்டவராகிய யெகோவாவே, 
பூமியெங்கும் உமது பெயர் எவ்வளவு மாட்சிமை உடையதாய் இருக்கிறது! 
*சங்கீதம் 8:4 8:4 எபிரெய மொழியில் மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷக்குமாரனை நீர் கவனிப்பதற்கும் அவன் எம்மாத்திரம்?
†சங்கீதம் 8:5 8:5 அவர்களை அல்லது அவனை