சங்கீதம் 104
 1 என் ஆத்துமாவே, யெகோவாவைத் துதி. 
என் இறைவனாகிய யெகோவாவே, நீர் எவ்வளவு பெரியவர்; 
மேன்மையையும், மகத்துவத்தையும் நீர் அணிந்திருக்கிறீர். 
 2 யெகோவா ஆடையைப்போல ஒளியை அணிந்துள்ளார்; 
அவர் வானங்களை ஒரு கூடாரத்தைப்போல் விரித்துள்ளார். 
 3 அவர் தமது மேலறைகளை மழைமேகங்களின் மேலாக அமைக்கிறார்; 
அவர் மேகங்களைத் தமது தேராக்கி, 
காற்றின் சிறகுகள்மேல் செல்கிறார். 
 4 அவர் காற்றுகளைத் தமது இறைத்தூதுவர்களாவும், 
நெருப்பு ஜூவாலைகளைத் தம்முடைய ஊழியர்களாகவும் ஆக்குகிறார். 
 5 அவர் பூமியை அதின் அடித்தளங்கள்மீது அமைத்தார்; 
அது ஒருபோதும் அசைக்கப்படாது. 
 6 உடையினால் மூடுவது போல் நீர் அதை ஆழ்கடலினால் மூடினீர்; 
வெள்ளம் மலைகளுக்கு மேலாய் நின்றது. 
 7 ஆனாலும் உமது கண்டிப்பின்முன் வெள்ளம் விலகி ஓடியது; 
உமது முழக்கத்தின் சத்தத்தைக் கேட்டு அது விரைந்து ஓடியது. 
 8 அவைகள் மலைகளுக்கு மேலாய் ஓடி, 
பள்ளத்தாக்குகளில் இறங்கி, 
நீர் அவைகளுக்கு ஏற்படுத்திய இடத்தில் நின்றன. 
 9 அவைகள் கடக்கமுடியாத ஓர் எல்லையை நீர் ஏற்படுத்தினீர்; 
அவை இனி ஒருபோதும் பூமியை மூடிக்கொள்ளாது. 
 10 அவர் நீரூற்றுகளை பள்ளத்தாக்குகளுக்கு தண்ணீர் பாய்ச்சும்படி செய்கிறார்; 
அது மலைகளுக்கிடையே ஓடுகின்றது. 
 11 அவை வெளியின் மிருகங்கள் அனைத்திற்கும் தண்ணீர் கொடுக்கின்றன; 
காட்டுக் கழுதைகளும் அங்கே தங்களுடைய தாகத்தைத் தீர்த்துக்கொள்கின்றன. 
 12 ஆகாயத்துப் பறவைகள் நீர்நிலைகளின் அருகே கூடு கட்டுகின்றன; 
கிளைகளின் மத்தியிலே அவை பாடுகின்றன. 
 13 அவர் தமது மேலறைகளிலிருந்து மலைகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுகிறார்; 
பூமி அவருடைய செய்கையின் பலனால் திருப்தியடைகிறது. 
 14 அவர் மந்தைகளுக்காகப் புல்லையும், 
மனிதன் பயிரிடும் தாவரங்களையும் வளரச்செய்கிறார், 
அவர் பூமியிலிருந்து அவர்களுக்கு உணவு கிடைக்கச் செய்கிறார்: 
 15 மனிதனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சை இரசத்தையும், 
அவனுக்கு முகக்களையை உண்டுபண்ணும் எண்ணெயையும், 
அவர்களைப் பெலப்படுத்தும் உணவையும் விளைவிக்கிறார். 
 16 யெகோவாவினுடைய மரங்களுக்கு, அவர் நாட்டிய லெபனோனின் கேதுரு மரங்களுக்கு 
நல்ல நீர்ப்பாய்ச்சலை கொடுக்கிறார். 
 17 அங்கே பறவைகள் தம் கூடுகளைக் கட்டுகின்றன; 
கொக்குகள் தேவதாரு மரங்களில் குடியிருக்கின்றன. 
 18 உயர்ந்த மலைகள் காட்டாடுகளுக்குச் சொந்தமாயும், 
செங்குத்தான பாறைகள் குழிமுயல்களுக்குப் புகலிடமாயும் இருக்கின்றன. 
 19 காலங்களைக் குறிக்க அவர் நிலவைப் படைத்தார்; 
சூரியன் தான் எப்போது மறையவேண்டும் என்பதை அறியும். 
 20 நீர் இருளைக் கொண்டுவருகிறீர், அப்பொழுது இரவாகின்றது; 
காட்டு மிருகங்கள் எல்லாம் பதுங்கித் திரிகின்றன. 
 21 சிங்கங்கள் தங்கள் இரைக்காகக் கர்ஜிக்கின்றன; 
இறைவனிடமிருந்து அவை தங்களுடைய உணவைத் தேடுகின்றன. 
 22 சூரியன் உதித்ததும் அவை ஒளிந்து ஓடுகின்றன; 
அவை திரும்பிப்போய் தங்கள் குகைகளில் படுத்துக் கொள்கின்றன. 
 23 அப்பொழுது மனிதன் தன் வேலைக்குப் போகிறான்; 
மாலையாகும்வரை தன் தொழிலில் ஈடுபடுகின்றான். 
 24 யெகோவாவே, உமது செயல்கள் எண்ணற்றவை! 
அவை அனைத்தையும் நீர் ஞானத்தில் படைத்திருக்கிறீர்; 
பூமி நீர் படைத்த உயிரினங்களால் நிறைந்திருக்கின்றது. 
 25 அங்கே விரிந்து பரந்த கடல் உண்டு; 
பெரிதும் சிறிதுமான எண்ணிலடங்கா 
வாழும் உயிரினங்கள் அங்கே உண்டு. 
 26 அங்கே கப்பல்கள் இங்குமங்கும் போகின்றன; 
நீர் உருவாக்கிய லிவியாதானும் அங்கே துள்ளி விளையாடும். 
 27 நீர் அவைகளுக்கு உரிய நேரத்தில் உணவு கொடுப்பீர் என்று 
அவைகளெல்லாம் உம்மையே பார்த்திருக்கின்றன. 
 28 நீர் அதை அவர்களுக்கு வழங்கும்போது, 
அவை சேகரித்துக்கொள்கின்றன; 
நீர் உமது கரத்தைத் திறக்கும்போது, 
அவை நன்மைகளால் திருப்தியடைகின்றன. 
 29 நீர் உமது முகத்தை மறைக்கும்போது, 
அவை திகைக்கின்றன; 
நீர் அவைகளின் சுவாசத்தை எடுத்துவிட, 
அவை இறந்து தூசிக்குத் திரும்புகின்றன. 
 30 நீர் உமது ஆவியை அனுப்புகையில், 
அவை படைக்கப்படுகின்றன; 
நீர் பூமியின் மேற்பரப்பைப் புதுப்பிக்கிறீர். 
 31 யெகோவாவின் மகிமை என்றென்றும் நிலைத்திருப்பதாக; 
யெகோவா தமது செயல்களில் மகிழ்வாராக. 
 32 அவர் பூமியைப் பார்க்கும்போது அது நடுங்குகின்றது; 
மலைகளைத் தொடும்போது அவை புகைகின்றன. 
 33 நான் என் வாழ்நாளெல்லாம் யெகோவாவைப் பாடுவேன்; 
நான் உயிரோடிருக்குமட்டும் என் இறைவனுக்குத் துதி பாடுவேன். 
 34 நான் யெகோவாவிடம் களிகூரும்பொழுது, 
என் தியானமும் அவருக்கு மகிழ்ச்சியாய் இருப்பதாக. 
 35 ஆனால் பாவிகள் பூமியிலிருந்து இல்லாமல் போவார்களாக; 
கொடியவர்கள் இனி இல்லாமல் போவார்கள். 
என் ஆத்துமாவே யெகோவாவைத் துதி. 
அல்லேலூயா.