3
பிறநாடுகள் நியாயந்தீர்க்கப்படுதல் 
 1 “அந்நாட்களிலும் அவ்வேளையிலும், 
யூதாவையும் எருசலேமையும் முன்னிருந்த நிலைக்கு நான் திரும்பவும் கொண்டுவருவேன். 
 2 நான் எல்லா நாடுகளையும் ஒன்றுசேர்த்து, 
அவர்களை யோசபாத்தின் பள்ளத்தாக்கிற்குக் கொண்டுவருவேன். 
அங்கே நான் என் உரிமைச்சொத்தான இஸ்ரயேல் மக்களை முன்னிட்டு 
அவர்களுக்கு விரோதமாய் நியாயந்தீர்பேன்; 
ஏனெனில் அவர்கள் என் மக்களை பிறநாடுகள் மத்தியில் சிதறடித்து, 
என் நாட்டையும் தங்களிடையே பங்கிட்டுக்கொண்டார்கள். 
 3 என் மக்கள்பேரில் சீட்டுப்போட்டார்கள், 
வேசிகளுக்கான கூலியாக ஆண்பிள்ளைகளைக் கொடுத்தார்கள், 
தாங்கள் திராட்சை இரசம் குடிப்பதற்காக பெண்பிள்ளைகளை விற்றார்கள். 
 4 “தீரு, சீதோன் பட்டணங்களே, பெலிஸ்தியரின் எல்லா பிரதேசங்களே, எனக்கு விரோதமாய் உங்களுக்கு என்ன இருக்கிறது? நான் ஏதாவது செய்ததற்காகவா நீங்கள் என்னைப் பழிவாங்குகிறீர்கள்? அப்படி நீங்கள் என்னைப் பழிவாங்கினால், நான் தாமதமின்றி விரைவாக நீங்கள் செய்தவற்றை உங்கள் சொந்த தலைமேலேயே திருப்புவேன்.  5 என் வெள்ளியையும் என் தங்கத்தையும் நீங்கள் எடுத்து, என் சிறந்த திரவியங்களையும் அள்ளிக்கொண்டு, உங்கள் கோயில்களுக்குப் போனீர்கள்.  6 யூதா, எருசலேம் மக்களை அவர்கள் தாய்நாட்டிலிருந்து தூரமாய் அனுப்புவதற்காக அவர்களைக் கிரேக்கருக்கு நீங்கள் விற்றுவிட்டீர்கள். 
 7 “இதோ, நீங்கள் விற்ற இடங்களிலிருந்து அவர்களை மீண்டும் எழுப்பப்போகிறேன். நீங்கள் செய்ததை உங்கள் தலைகள் மேலேயே திருப்புவேன்.  8 உங்கள் மகன்களையும் மகள்களையும் யூதா மக்களுக்கு விற்பேன். அவர்கள் அவர்களை தூரதேசத்திலுள்ள நாட்டாரான சபேயருக்கு விற்பார்கள்.” இதை யெகோவாவே சொன்னார். 
 9 பிற நாடுகளிடையே இதை அறிவியுங்கள்; 
யுத்தத்திற்குத் தயாராகுங்கள்; 
இராணுவவீரரை எழுப்புங்கள்; 
போர்வீரர்கள் அனைவரும் நெருங்கிப்போய் தாக்கட்டும். 
 10 உங்கள் மண்வெட்டிகளை வாள்களாகவும், 
உங்கள் வெட்டுக்கத்திகளை ஈட்டிகளாகவும் அடியுங்கள். 
பெலவீனன், 
“நான் பெலனுள்ளவன்!” என்று சொல்லட்டும். 
 11 சுற்றுப்புறம் எங்குமுள்ள நாடுகளே, நீங்கள் எல்லோரும் விரைந்துவந்து, 
அங்கே ஒன்றுகூடுங்கள். 
யெகோவாவே உமது படைவீரர்களைக் கொண்டுவாரும்! 
 12 “பிறநாடுகள் எழும்பட்டும்; 
யோசபாத்தின் பள்ளத்தாக்கை நோக்கி முன்னேறிப் போகட்டும். 
அங்கே நான், சுற்றுப்புறம் எங்குமுள்ள பிறநாடுகள் அனைத்தையும் 
நியாயந்தீர்ப்பதற்காக உட்காருவேன். 
 13 விளைச்சல் முதிர்ந்துள்ளது, 
அரிவாளை நீட்டி அறுங்கள். 
திராட்சைப்பழ ஆலைகள் நிரம்பியுள்ளன, 
வந்து திராட்சைப் பழங்களை மிதியுங்கள்; 
இரசத் தொட்டிகளும் நிறைந்து பொங்கி வழிகின்றன; 
இவ்வளவாய் அவர்களின் கொடுமை பெரியது!” 
 14 தீர்ப்பு வழங்கும் பள்ளத்தாக்கில் 
மக்கள் கூட்டங்கூட்டமாய் இருக்கின்றனர். 
தீர்ப்பு வழங்கும் பள்ளத்தாக்கில் 
யெகோவாவின் நாள் சமீபித்துள்ளது. 
 15 சூரியனும் சந்திரனும் இருளடையும், 
நட்சத்திரங்கள் இனி வெளிச்சம் கொடாதிருக்கும். 
 16 யெகோவா சீயோனிலிருந்து கெர்ச்சித்து, 
எருசலேமிலிருந்து முழங்குவார்; 
வானமும் பூமியும் அதிரும். 
ஆனால் யெகோவா தம் மக்களுக்குப் புகலிடமும் 
இஸ்ரயேல் மக்களுக்கு அரணான கோட்டையுமாய் இருப்பார். 
இறைவனின் மக்களுக்கு ஆசீர்வாதம் 
 17 “அப்பொழுது என் பரிசுத்த மலையாகிய சீயோனில் வாழ்கிற 
உங்கள் இறைவனாகிய யெகோவா நான் என்று அறிவீர்கள். 
எருசலேம் பரிசுத்தமாயிருக்கும்; 
பிறநாட்டார் இனி ஒருபோதும் அதைக் கடந்து செல்லமாட்டார்கள். 
 18 “அந்நாட்களில் மலைகளில் புதிய திராட்சை இரசம் பொழியும், 
குன்றுகள் பாலாய் வழிந்தோடும்; 
யூதாவின் நீரோடைகளிலெல்லாம் தண்ணீர் நிரம்பியோடும். 
யெகோவாவின் ஆலயத்திலிருந்து நீரூற்று ஒன்று கிளம்பி, 
சித்தீம் பள்ளத்தாக்கிற்கு தண்ணீர் பாய்ச்சும். 
 19 யூதா நாட்டில் குற்றமற்ற இரத்தம் சிந்தி, 
அவர்களுக்குச் செய்த கொடுமையின் நிமித்தம் 
எகிப்து பாழாகும், 
ஏதோம் பாழடைந்து பாலைவனமாகும். 
 20 யூதா என்றென்றும், எருசலேம் தலைமுறை தலைமுறையாகவும் 
குடியிருக்கும் இடமாகும். 
 21 அவர்களுடைய இரத்தப்பழியை நான் தண்டியாமல் விடுவேனோ? 
நான் தண்டிப்பேன்.” 
யெகோவா சீயோனில் குடியிருக்கிறார்.