60
சீயோனின் மகிமை 
 1 “எழும்பிப் பிரகாசி, ஏனெனில் உன் ஒளி வந்துவிட்டது, 
யெகோவாவின் மகிமை உன்மேல் உதிக்கிறது. 
 2 இதோ, பூமியை இருள் மூடியிருக்கிறது, 
காரிருள் மக்கள் கூட்டங்களைச் சூழ்ந்திருக்கிறது. 
ஆனால் யெகோவா உன்மேல் உதிக்கிறார், 
அவரின் மகிமை உன்மேல் தோன்றுகிறது. 
 3 பிறநாடுகள் உன் வெளிச்சத்திற்கும், 
அரசர்கள் உன்மேல் வரும் விடியற்காலையின் பிரகாசத்திற்கும் வருவார்கள். 
 4 “உன் கண்களை உயர்த்தி சுற்றிலும் பார்; 
யாவரும் ஒன்றுகூடி உன்னிடம் வருகிறார்கள்; 
உன் மகன்கள் தொலைவிலிருந்து வருகிறார்கள், 
உன் மகள்கள் தோளில் சுமந்துகொண்டு வரப்படுகிறார்கள். 
 5 அப்பொழுது நீ பார்த்து முகமலர்ச்சி அடைவாய்; 
உன் இருதயம் மகிழ்ந்து பூரிப்படையும்; 
கடல்களின் திரவியம் உனக்குக் கொண்டுவரப்படும்; 
நாடுகளின் செல்வமும் உன்னிடம் சேரும். 
 6 ஒட்டகக் கூட்டம் நாட்டை நிரப்பும், 
மீதியா, ஏப்பாத் நாடுகளின் இளம் ஒட்டகங்கள் உன்னிடம் வரும். 
சேபாவிலிருந்து வரும் அனைவரும் 
தங்கமும் நறுமண தூபமும் கொண்டுவந்து, 
யெகோவாவின் புகழை அறிவிக்க வருவார்கள். 
 7 கேதாரின் மந்தைகள் எல்லாம் உன்னிடம் சேர்க்கப்படும், 
நெபாயோத்தின் கடாக்கள் உனக்குப் பணிபுரியும்; 
அவை என் பலிபீடத்தில் பலிகளாக ஏற்றுக்கொள்ளப்படும், 
நான் என் மகிமையான ஆலயத்தை அலங்கரிப்பேன். 
 8 “மேகங்களைப் போலவும், 
தம் கூட்டுக்குப் பறந்தோடும் புறாக்களைப்போலவும் பறக்கும் இவர்கள் யார்? 
 9 தீவுகள் எனக்குக் காத்திருக்கின்றன; 
தர்ஷீசின் கப்பல்கள் முன்னணியில் வருகின்றன. 
தொலைவிலுள்ள உங்கள் மகன்களை 
அவர்களுடைய வெள்ளியோடும் தங்கத்தோடும் கொண்டுவருகின்றன. 
இஸ்ரயேலின் பரிசுத்தரும் உன் இறைவனுமாகிய யெகோவாவை 
கனம் பண்ணுவதற்காக இவை வருகின்றன. 
ஏனெனில் அவர் உன்னைச் சிறப்பால் அலங்கரித்திருக்கிறார். 
 10 “அந்நியர் உன் மதில்களை மீண்டும் கட்டியெழுப்புவார்கள், 
அவர்களுடைய அரசர்கள் உனக்குப் பணிசெய்வார்கள். 
என் கோபத்தினால் நான் உன்னை அடித்தபோதிலும், 
தயவுடன் நான் உனக்குக் கருணை காட்டுவேன். 
 11 உங்கள் வாசல்கள் எப்பொழுதும் திறந்தே இருக்கும், 
பகலோ இரவோ, அவை ஒருபோதும் மூடப்படுவதில்லை; 
நாடுகளின் செல்வத்தை மனிதர் கொண்டுவருகையில், 
அவைகளோடு அரசர்களை வெற்றிப் பவனியுடன் நடத்தி வருவதற்காகவே 
இவ்வாறு திறந்திருக்கும். 
 12 உனக்குப் பணி செய்யாத நாடோ அல்லது அரசோ அழிந்துபோகும்; 
அது முற்றிலும் பாழாகிவிடும். 
 13 “எனது பரிசுத்த இடத்தை அலங்கரிப்பதற்கு 
லெபனோனின் மகிமையாகிய தேவதாரு, 
சவுக்கு, புன்னை மரங்கள் ஒன்றுசேர்ந்து உன்னிடம் வந்துசேரும்; 
நான் எனது பாதபடியை மகிமைப்படுத்துவேன். 
 14 உன்னை ஒடுக்கியோரின் பிள்ளைகள் தலைகுனிந்தபடி உனக்குமுன் வருவார்கள்; 
உன்னை இகழ்ந்த யாவரும் உன் பாதத்தண்டையில் தலைகுனிந்து நிற்பார்கள். 
அவர்கள் உன்னை யெகோவாவின் பட்டணம் என்றும், 
இஸ்ரயேலின் பரிசுத்தரின் சீயோன் என்றும் அழைப்பார்கள். 
 15 “ஒருவரும் உன் வழியே நடவாமல் 
நீ வெறுக்கப்பட்டு கைவிடப்பட்டிருந்தபோதும், 
எல்லாத் தலைமுறைக்கும் நான் உன்னை 
நித்திய பெருமையாயும் மகிழ்ச்சியாயும் ஆக்குவேன். 
 16 நீ நாடுகளின் பாலைக் குடித்து, 
அரச குடும்பத்தவர்களின் மார்பகங்களில் பாலைக் குடிப்பாய். 
அப்பொழுது நீ யெகோவாவாகிய நானே உன் இரட்சகர், உன் மீட்பர், 
யாக்கோபின் வல்லவர் என்பதை அறிந்துகொள்வாய். 
 17 வெண்கலத்திற்குப் பதிலாக தங்கத்தையும், 
இரும்புக்குப் பதிலாக வெள்ளியையும் நான் உன்னிடம் கொண்டுவருவேன். 
மரத்துக்குப் பதிலாக வெண்கலத்தையும், 
கற்களுக்குப் பதிலாக இரும்பையும் உன்னிடம் கொண்டுவருவேன். 
சமாதானத்தை உங்கள் ஆட்சித் தலைவனாகவும் 
நீதியை உங்கள் ஆளுநனாகவும் நான் ஆக்குவேன். 
 18 உன் நாட்டில் இனியொருபோதும் வன்முறைகளின் சத்தம் கேட்கப்படமாட்டாது; 
உன் எல்லைகளுக்குள் அழிவும் பாழாக்குதலும் ஏற்படமாட்டாது. 
ஆனால் நீ உன் மதில்களை இரட்சிப்பு என்றும், 
உன் வாசல்களைத் துதி என்றும் அழைப்பாய். 
 19 இனிமேல் பகலில் சூரியன் உனக்கு வெளிச்சமாய் இருக்கமாட்டாது; 
அல்லது சந்திரனின் வெளிச்சம் உன்மேல் பிரகாசிக்கமாட்டாது. 
ஏனெனில் யெகோவாவே உன்னுடைய நித்திய ஒளியாக இருப்பார்; 
உன் இறைவனே உன் மகிமையாயிருப்பார். 
 20 உன் சூரியன் ஒருபோதும் மறைவதுமில்லை, 
உன் சந்திரன் இனிமேல் தேய்வதுமில்லை. 
யெகோவாவே உன் நித்திய ஒளியாய் இருப்பார், 
உன் துக்க நாட்களும் முடிவடையும். 
 21 அப்பொழுது உன் மக்கள் யாவரும் நீதியானவர்களாய் இருந்து, 
நாட்டை என்றென்றைக்கும் உரிமையாக்கிக்கொள்வார்கள்; 
அவர்களே எனது மகிமை வெளிப்படும்படியாக 
என் கரங்களின் வேலையாகவும் 
நான் நட்ட முளையாகவும் இருக்கிறார்கள். 
 22 உங்களில் சிறியவர் ஆயிரம் பேர்களாவர், 
அற்பரும் வலிய நாடாவர். 
நானே யெகோவா; 
அதன் காலத்தில் அதை நானே தீவிரமாகச் செய்வேன்.”