3
தலைவர்களும் தீர்க்கதரிசிகளும் கண்டிக்கப்படுதல் 
 1 அப்பொழுது நான் சொன்னதாவது: 
“யாக்கோபின் தலைவர்களே; 
இஸ்ரயேல் குடும்பத்தின் ஆளுநர்களே கேளுங்கள். 
நீதியை நிலைநாட்டுவது உங்கள் கடமையல்லவா, 
 2 ஆனால் நீங்களோ நன்மையை வெறுத்துத் தீமையையே நேசிக்கிறீர்கள். 
என் மக்களின் தோலையும், 
அவர்கள் எலும்புகளிலிருந்து சதையையும் கிழித்து எடுக்கிறீர்கள். 
 3 என் மக்களின் சதையைச் சாப்பிட்டு, 
அவர்களின் தோலையெல்லாம் உரித்து, 
எலும்புகளைத் துண்டுகளாக நொறுக்குகிறீர்கள். 
சட்டியில் போடும் இறைச்சியைப் போலவும், 
பானையில் போடும் சதையைப் போலவும் அவர்களை வெட்டுகிறீர்கள்.” 
 4 ஆனாலும், நாட்கள் வருகின்றன. 
அப்பொழுது நீங்கள் யெகோவாவிடம் கூக்குரலிடுவீர்கள். 
ஆனால் அவர் பதிலளிக்கவே மாட்டார். 
அக்காலத்தில் நீங்கள் செய்த தீமைக்காக 
அவர் தமது முகத்தை உங்களுக்கு மறைத்துக்கொள்வார். 
 5 யெகோவா சொல்வது இதுவே: 
எனது மக்களைத் தவறான வழியில் நடத்துகிற 
“பொய்த் தீர்க்கதரிசிகளைக் குறித்துச் சொல்கிறதாவது, 
ஒருவன் அவர்களுக்குச் சாப்பிடக் கொடுத்தால், 
‘சமாதானம்’ என்று பிரசித்தப் படுத்துகிறார்கள். 
அப்படிக் கொடுக்காவிட்டால், 
அவனுக்கு எதிராக யுத்தம் செய்ய ஆயத்தமாகிறார்கள். 
 6 ஆதலால் தரிசனங்கள் அற்ற இரவும், 
குறிபார்க்க முடியாத இருளும் அவர்கள்மேல் வரும். 
பொய்த் தீர்க்கதரிசிகளுக்குச் சூரியன் மறைந்து, 
பகலும் அவர்களுக்கு இருண்டுபோகும். 
 7 தரிசனங்கள் காண்பவர்கள் வெட்கமடைவார்கள். 
குறிசொல்பவர்கள் அவமானம் அடைவார்கள். 
இறைவனிடமிருந்து பதில் கிடைக்காதபடியால், 
அவர்கள் எல்லோரும் தங்கள் முகங்களை மூடிக்கொள்வார்கள்” என்று யெகோவா சொல்கிறார். 
 8 ஆனால் நானோ யாக்கோபுக்கு அவன் மீறுதலையும், 
இஸ்ரயேலுக்கு அவன் பாவங்களையும் அறிவிக்கும்படி, 
யெகோவாவின் ஆவியானவரால் வல்லமையுடன் நிரப்பப்பட்டிருக்கிறேன். 
அவர் என்னை நீதியினாலும், 
பெலத்தினாலும் நிறைத்திருக்கிறார். 
 9 ஆகவே யாக்கோபு குடும்பத்தின் தலைவர்களே, 
இஸ்ரயேல் குடும்பத்தின் ஆளுநர்களே, 
நீதியை உதாசீனம்பண்ணி, 
நியாயமானவற்றையெல்லாம் புரட்டுகிற நீங்கள் இதைக் கேளுங்கள். 
 10 இரத்தம் சிந்துதலினால் சீயோனையும், 
கொடுமையினால் எருசலேமையும் கட்டுகிறவர்களே கேளுங்கள். 
 11 உங்கள் தலைவர்கள் இலஞ்சத்திற்காக நியாயந்தீர்க்கின்றார்கள். 
உங்கள் ஆசாரியர்கள் கூலிக்குக் போதிக்கின்றார்கள். 
உங்கள் தீர்க்கதரிசிகள் பணத்திற்குக் குறிசொல்கிறார்கள். 
ஆயினும் அவர்கள் யெகோவாவிடம் சார்ந்துகொண்டு, “யெகோவா நம் மத்தியில் இல்லையோ? 
பேராபத்து நமக்கு உண்டாகாது” 
என்றும் சொல்லிக்கொள்கிறார்கள். 
 12 ஆகையால் இஸ்ரயேல் ஆளுநர்களே, 
உங்கள் செயல்களின் நிமித்தம், 
சீயோன் வயலைப்போல உழப்படும், எருசலேம் மண்மேடுகளாகும், 
ஆலயம் அமைந்துள்ள மலை, புல் அடர்ந்த காடாகும்.