116
கர்த்தர் எனது ஜெபங்களைக் கேட்பதை
நான் நேசிக்கிறேன்.
நான் உதவிக்காகக் கூப்பிடும்போது அவர் எனக்குச் செவிகொடுப்பதை
நான் நேசிக்கிறேன்.
நான் மரித்தவன் போலானேன்!
மரணக் கயிறுகள் என்னைச் சூழ்ந்துக்கொண்டன, கல்லறை என்னை மூடிற்று.
நான் அஞ்சிக் கலங்கினேன்.
அப்போது நான் கர்த்தருடைய நாமத்தைக் கூப்பிட்டேன்.
நான்: “கர்த்தாவே, என்னைக் காப்பாற்றும்!” என்று கூறினேன்.
கர்த்தர் நல்லவரும், இரக்கம் நிறைந்தவருமாவார்.
தேவன் தயவுள்ளவர்.
கர்த்தர் திக்கற்ற ஜனங்களைக் கவனித்துக்கொள்கிறார்.
நான் உதவியற்றவனானேன், கர்த்தர் என்னைக் காப்பாற்றினார்.
என் ஆத்துமாவே, நீ இளைப்பாறு!
கர்த்தர் உன்னைக் கவனித்துக்கொள்கிறார்.
தேவனே, நீர் என் ஆத்துமாவை மரணத்திலிருந்து காப்பாற்றினீர்.
நீர் என் கண்ணீரை நிறுத்தினீர்.
நான் விழாதபடி பார்த்துக்கொண்டீர்.
நான் உயிருள்ளோரின் தேசத்தில்
தொடர்ந்து கர்த்தருக்குச் சேவைசெய்வேன்.
10 “நான் அழிந்துபோனேன்!”
என்று கூறியபோதும் நான் தொடர்ந்து நம்பிக்கை வைத்தேன்.
11 நான் பயப்பட்டபோதும்
“மனிதர்கள் எல்லோரும் பொய்யர்களே!” என்றேன்.
12 நான் கர்த்தருக்கு எதைக் கொடுக்க முடியும்?
என்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் கர்த்தரே கொடுத்தார்.
13 அவர் என்னைக் காப்பாற்றினார்.
எனவே நான் அவருக்கு ஒரு பானங்களின் காணிக்கையை அளிப்பேன்.
நான் கர்த்தருடைய நாமத்தைக் கூப்பிடுவேன்.
14 நான் வாக்குறுதி அளித்தவற்றைக் கர்த்தருக்குக் கொடுப்பேன்.
இப்போது அவரது ஜனங்கள் எல்லோருக்கும் முன்பாக நான் போவேன்.
15 கர்த்தரைப் பின்பற்றுபவர்களில் ஒருவனின் மரணம் கர்த்தருக்கு மிக முக்கியமானது!
கர்த்தாவே, நான் உமது ஊழியர்களில் ஒருவன்!
16 நான் உமது பணியாள்.
உமது பணிப் பெண் ஒருத்தியின் பிள்ளைகளுள் ஒருவன் நான்.
கர்த்தாவே, நீரே என்னுடைய முதல் போதகர்.
17 நான் உமக்கு ஒரு நன்றியறிதலின் காணிக்கையைக் கொடுப்பேன்.
நான் கர்த்தருடைய நாமத்தைக் கூப்பிடுவேன்.
18 நான் வாக்குறுதி அளித்தவற்றைக் கர்த்தருக்குக் கொடுப்பேன்.
நான் இப்போது அவரது எல்லா ஜனங்களுக்கும் முன்பாகப் போவேன்.
19 நான் எருசலேமின் ஆலயத்திற்குப் போவேன்.
கர்த்தரைத் துதிப்போம்!