௧௩
பெத்தேலுக்கு எதிராக தேவன் பேசுதல்
௧ கர்த்தர், யூதாவிலுள்ள தேவமனிதனைப் பெத்தேலுக்கு போகும்படி கட்டளையிட்டார். அவன் அங்கே போனபோது யெரொபெயாம் பலிபீடத்தின் முன்னால் நறுமண வாசனைப் பொருட்களைச் செலுத்திக்கொண்டிருந்தான். ௨ பலிபீடத்திற்கு எதிராகப் பேசுமாறு கர்த்தர் அந்த தேவமனிதனுக்குக் கட்டளையிட்டார். அவனும்,
“பலிபீடமே, கர்த்தர் உன்னிடம் கூறுகிறார் ‘தாவீதின் குடும்பத்தில் யோசியா என்பவன் இருக்கிறான். இந்த ஆசாரியர்களெல்லாம் இப்போது பொய்த் தெய்வங்களை தொழுது வருகின்றனர். எனவே பலிபீடமே, யோசியா என்பவன் உன்மேல் தூபம் காட்டுகிற மேடையின் ஆசாரியர்களை உன்மேல் பலியிடுவான். அந்த ஆசாரியர்கள் நறுமணப் பொருட்களைப் போட்டு எரிக்கின்றனர். ஆனால் யோசியாவோ மனித எலும்புகளைப் போட்டு எரிப்பான். பிறகு மீண்டும் உன்னைப் பயன்படுத்த முடியாது!’ ” என்றான்.
௩ இவையெல்லாம் நிகழும் என்பதற்கான சான்றையும் அந்த தேவமனிதன் காட்டினான். அவன், “இதுதான் கர்த்தர் என்னிடம் சொன்ன அத்தாட்சியாகும். கர்த்தர், ‘இந்த பலிபீடம் வெடித்து இதிலுள்ள சாம்பல் தரையிலேவிழும்’ என்று சொன்னார்” என்றான்.
௪ அரசனான யெரொபெயாம் பெத்தேலின் பலிபீடத்தைப்பற்றி தேவமனிதனிடமிருந்து செய்தியைக் கேட்டான். அவன் தன் கையைப் பலிபீடத்திலிருந்து நீட்டி, “அவனை பிடியுங்கள்!” என்றான். ஆனால் நீட்டிய அந்தக் கை, மடக்க முடியாத அளவிற்கு முடங்கிப்போனது. ௫ பலிபீடமும், தூள் தூளாகச் சிதறி உடைந்துபோனது. அதன் சாம்பல் தரையில் சிந்தியது. தேவமனிதன் சொன்னது தேவனிடமிருந்து வந்தது என்பதற்கு இதுவே சாட்சியாயிற்று. ௬ அப்போது அரசன் அந்தத் தேவமனிதனிடம், “எனக்காக உன் தேவனாகிய கர்த்தரிடம் ஜெபம் செய். எனது கையை குணமாக்கும்படி கர்த்தரைக் கேள்” என்றான்.
தேவமனிதனும் அவ்வாறே ஜெபிக்க அவனது கை முன்பு போலாயிற்று. ௭ அரசனும் தேவமனிதனிடம், “என்னோடு என் வீட்டிற்கு வா. என்னோடு உணவருந்து. உனக்குப் பரிசளிப்பேன்” என்றான்.
௮ ஆனால் தேவமனிதனோ அரசனிடம், “உனது ஆட்சியில் பாதியைக் கொடுத்தாலும், என்னால் உன்னோடு வரமுடியாது, இந்த இடத்தில் என்னால் எதையும் உண்ணவோ குடிக்கவோ கூடாது. ௯ எதையும் உண்ணவோ அல்லது குடிக்கவோ கூடாது என எனக்கு கர்த்தர் கட்டளையிட்டார். நான் இங்கு வந்த பாதைவழியே பயணம் செய்யக்கூடாது என்றும் கர்த்தர் கட்டளையிட்டிருக்கிறார்” என்றான். ௧௦ எனவே அவன் வேறு பாதை வழியாகத் தன் பயணத்தைத் தொடர்ந்தான்.
௧௧ பெத்தேலில் ஒரு முதிய தீர்க்கதரிசி இருந்தான். அவனது மகன்கள் அவனிடம் வந்து தேவமனிதன் பெத்தேலில் செய்ததைச் சொன்னார்கள், அரசனிடம் சொன்னதையும் சொன்னார்கள். ௧௨ அதற்கு அந்த முதிய தீர்க்கதரிசி, “அவன் எந்தச் சாலை வழியாகத் திரும்பிப் போனான்?” என்று கேட்டான். அவர்களும் அந்தச் சாலையைச் சுட்டிக்காட்டினார்கள். ௧௩ அவன் தனது கோவேறு கழுதைக்குச் சேணத்தை கட்டுமாறு வேண்டினான். அவனது பிள்ளைகளும் அவ்வாறே செய்தனர். அவனும் அக்கழுதையின் மீது ஏறிப்போனான்.
௧௪ முதிய தீர்க்கதரிசி அந்தத் தேவமனிதனைப் பின் தொடர்ந்து போனான். தேவமனிதன் கர்வாலி மரத்தின் கீழ் இருப்பதை அவன் கண்டான், “யூதாவிலிருந்து வந்தத் தேவமனிதன் நீதானா?” என்று கேட்டான்.
அந்த தேவமனிதன், “ஆமாம், நான்தான்” என்றான்
௧௫ முதிய தீர்க்கதரிசி “என்னோடு வீட்டிற்கு வந்து உணவருந்துங்கள்” என்று வேண்டினான்.
௧௬ ஆனால் அந்தத் தேவமனிதன் “என்னால் உங்களோடு வீட்டிற்கு வரமுடியாது. இந்த இடத்தில் உங்களோடு உண்ணவோ குடிக்கவோ கூடாது. ௧௭ கர்த்தர் எனக்கு, ‘இந்த இடத்தில் எதையும் உண்ணவோ குடிக்கவோ கூடாது. நீ சென்ற சாலையின் வழியே மீண்டும் செல்லக்கூடாது’ என்று கட்டளையிட்டுள்ளார்” என்றான்.
௧௮ பிறகு முதிய தீர்க்கதரிசி “நானும் உங்களைப் போன்று தீர்க்கதரிசிதான்” என்றான். மேலும் அவன் ஒரு பொய்ச் சொன்னான். அவன், “தேவதூதன் ஒருவன் கர்த்தரிடத்திலிருந்து வந்தான். அவன் உங்களை எனது வீட்டிற்கு அழைத்துப்போய் உண்ணவும் குடிக்கவும் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டான்” என்றான்.
௧௯ எனவே தேவமனிதன் முதியவனோடு அவனது வீட்டிற்குப்போய் உண்டான். அவனோடு குடித்தான். ௨௦ அவர்கள் மேஜையின் முன்னால் உட்கார்ந்திருக்கும்போது, கர்த்தர் முதிய தீர்க்கதரிசியிடம் பேசினார். ௨௧ முதியவனும், அந்த தேவமனிதனிடம், “கர்த்தர் உனக்கிட்ட கட்டளையை மீறினாய்! அவருக்குக் கீழ்ப்படியவில்லை. ௨௨ இந்த இடத்தில் எதையும் உண்ணவோ அல்லது குடிக்கவோ கூடாது என்று கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டார். ஆனால் நீ திரும்பி வந்து உண்டு குடித்தாய். எனவே உனது பிணம் உன் குடும்பக் கல்லறையில் அடக்கம் செய்யப்படாமல் போகும்” என்றான்.
௨௩ தேவமனிதன் உணவருந்தி முடித்தான். முதிய தீர்க்கதரிசி பிறகு கழுதையில் அவனுக்காக சேணத்தை கட்டி அவன் போனான். ௨௪ அவன் பாதையில் பயணம் செய்யும்போது, ஒரு சிங்கம் வந்து அவனைக் கொன்றுபோட்டது. அவனது உடல் பாதையில் கிடக்க அருகில் சிங்கமும் கழுதையும் நின்றுகொண்டிருந்தன. ௨௫ சிலர் அவ்வழியாக வந்தனர். அவர்கள் பிணத்தையும் சிங்கத்தையும் கண்டு முதிய தீர்க்கதரிசியிடம் வந்து தாங்கள் கண்டதைக் கூறினார்கள்.
௨௬ அவன்தான் தந்திரம் செய்து தீர்க்கதரிசியைத் திருப்பி அழைத்தவன். அவன் அனைத்தையும் கேட்டபின், “அந்தத் தேவமனிதன் கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை. எனவே சிங்கத்தை அனுப்பி கொன்றுவிட்டார். இவ்வாறு செய்வேன் என்று கர்த்தர் ஏற்கெனவே கூறியிருக்கிறார்” என்றான். ௨௭ பிறகு அவன் தன் மகன்களிடம், “என் கழுதைக்கு சேணத்தைக் கட்டுங்கள்” என்றான். அவனது மகன்களும் அவ்வாறே செய்தனர். ௨௮ அவன் சாலைக்குப் போய் தீர்க்கதரிசியின் பிணத்தைப் பார்த்தான். கழுதையும் சிங்கமும் அப்பொழுதும் அங்கே நின்றுகொண்டிருந்தன. சிங்கம் அந்த உடலைத் தின்னவில்லை. கழுதையையும் எதுவும் செய்யவில்லை.
௨௯ முதிய தீர்க்கதரிசி அந்த பிணத்தை எடுத்து தனது கழுதையின் மீது வைத்தான். அதனை நகரத்திற்குக் கொண்டுவந்து அவனுக்காக அழுதான். ௩௦ அவனைத் தனது குடும்பக் கல்லறையிலேயே அடக்கம் செய்தான். பின் அவனுக்காக அழுது, “என் சகோதரரே, உங்களுக்காக நான் வருந்துகிறேன்” என்று புலம்பினான். ௩௧ எனவே அந்த முதிய தீர்க்கதரிசி சவ அடக்கத்தை முடித்த பின், தன் மகன்களிடம், “நான் மரித்த பின்னும், என்னை இதே கல்லறையில் அடக்கம் செய்யுங்கள். எனது எலும்புகளை இவனது எலும்புகளுக்கு அருகில் வையுங்கள். ௩௨ இவன் மூலமாக கர்த்தர் சொன்னதெல்லாம் உறுதியாக நிறைவேறும். கர்த்தர் இவன் மூலமாக பெத்தேலின் பலிபீடத்திற்கு எதிராகவும் சமாரியாவின் நகரங்களிலுள்ள பொய்த் தெய்வங்களுக்கு எதிராகவும் பேசினார்” என்றான்.
௩௩ யெரொபெயாம் அரசன் மாறவில்லை. தொடர்ந்து தீமைகளைச் செய்துவந்தான். ஆசாரியர்களாக வெவ்வேறு கோத்திரங்களிலிருந்து தேர்ந் தெடுத்தான்.அவர்கள் பொய்த் தெய்வங்களுக்கு ஆராதனை செய்தனர். ஆசாரியராக யார் விரும்பினாலும் விரும்பியபடி அனுமதிக்கப்பட்டனர். ௩௪ இச்செயல்களே பெரும்பாவமாகி அவனது ஆட்சி அழிய காரணமாயிற்று.