௧௯
சீனாய் மலையில் எலியா
௧ எலியா செய்ததை எல்லாம் ஆகாப் அரசன் தன் மனைவி யேசபேலுக்கு கூறினான். அவன் எவ்வாறு அனைத்து தீர்க்கதரிசிகளையும் வாளால் கொன்றான் என்றும் கூறினான். ௨ எனவே அவள் எலியாவிடம் ஒரு தூதுவனை அனுப்பி, “நாளை இதே நேரத்திற்குள், நீ தீர்க்கதரிசிகளைக் கொன்றது போன்று உன்னைக்கொல்வேன். இல்லாவிட்டால் என்னைத் தெய்வங்கள் கொல்லட்டும்” என்று சொல்லச்செய்தாள்.
௩ எலியா இதைக் கேட்டதும், பயந்தான். தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடினான். தன்னோடு வேலைக்காரனையும் அழைத்துப்போனான். யூதாவிலுள்ள பெயெர்செபாவிற்குப் போய். அங்கே அவனை விட்டுவிட்டான். ௪ பிறகு நாள் முழுவதும் பாலைவனத்தில் அலைந்தான். ஒரு புதரின் அருகில் உட்கார்ந்தான். “இது போதும், கர்த்தாவே! என்னை மரிக்கவிடும். என் முற்பிதாக்களைவிட நான் நல்லவன் அல்ல” என்று வேண்டினான்.
௫ பிறகு அவன் ஒரு மரத்தடியில் படுத்து தூங்கினான். ஒரு தேவதூதன் வந்து அவனைத் தொட்டான். “எழுந்திரு, சாப்பிடு!” என்றான். ௬ எலியா தன்னருகில் தழவில் சுடப்பட்ட அடையும் ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் இருப்பதைப் பார்த்தான். அவன் உண்டு குடித்து திரும்பத் தூங்கப்போனான்.
௭ மீண்டும் தேவதூதன் வந்து, “எழுந்திரு! சாப்பிடு! இல்லாவிட்டால், நீண்ட பயணம் செய்யமுடியாது” என்றான். ௮ எனவே எலியா எழுந்து சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடித்தான். 40 நாட்கள் இரவும் பகலும் நடப்பதற்கான பெலத்தை அது கொடுத்தது. அவன் தேவனுடைய மலையான ஓரேப்புக்குச் சென்றான். ௯ அங்கு ஒரு குகையில் இரவில் தங்கினான்.
அப்போது கர்த்தர், “இங்கே ஏன் இருக்கிறாய்?” என்று எலியாவிடம் பேசினார்.
௧௦ அதற்கு எலியா, “சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, நான் எப்போதும் உமக்கு ஊழியம் செய்திருக்கிறேன். நான் எப்பொழுதும் என்னால் முடிந்தஅளவு சிறப்பாக சேவை செய்திருக்கிறேன். ஆனால் இஸ்ரவேலர்கள் தம் உடன்படிக்கையை முறித்துவிட்டனர். உம்முடைய பலிபீடங்களை அழித்தனர். உம்முடைய தீர்க்கதரிசிகளைக் கொன்றனர். இப்பொழுது ஒரே தீர்க்கதரிசியான என்னையும் கொல்லப்பார்க்கிறார்கள்!” என்று முறையிட்டான்.
௧௧ கர்த்தர் எலியாவிடம், “எனக்கு முன்னால் மலையின் மேல் நில் அப்பொழுது நான் உன்னை கடந்து செல்வேன்” என்றார். பிறகு ஒரு பலமான காற்று அடித்தது. அது மலைகளை உடைப்பதுபோல் இருந்தது. ஆனால் அது கர்த்தர் அல்ல! பிறகு நில அதிர்ச்சி உண்டாயிற்று. அதுவும் கர்த்தர் அல்ல! ௧௨ அதற்குப்பின், நெருப்பு உருவானது. அதுவும் கர்த்தர் அல்ல. நெருப்புக்குப்பின், அமைதியான மென்மையான சத்தம் வந்தது.
௧௩ எலியா அந்தச் சத்தத்தைக் கேட்டதும் தன் முகத்தை சால்வையால் மூடிக்கொண்டான். குகையின் வாசலுக்கு வந்து நின்றான். பிறகு அந்தச் சத்தம் அவனிடம், “எலியா, ஏன் இங்கிருக்கிறாய்?” என்று கேட்டது.
௧௪ எலியாவோ, “சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, என்னால் முடிந்தவரை உமக்கு எப்போதும் சேவை செய்து வருகிறேன். ஆனால் இஸ்ரவேல் ஜனங்கள் தமது உடன்படிக்கையில் இருந்து நழுவி மீறிவிட்டனர். உம்முடைய பலிபீடங்களை உடைத்தனர். அவர்கள் உம்முடைய தீர்க்கதரிசிகளைக் கொன்றனர். நான் மட்டுமே ஒரே தீர்க்கதரிசியாக உயிரோடு இருக்கிறேன். இப்போது என்னையும் கொல்லப்பார்க்கிறார்கள்” என்றான்.
௧௫ கர்த்தர், “சாலைக்குப் போ, அது தமஸ்குவிற்கு போகும். அங்குப்போய் ஆசகேலை சீரியாவின் அரசனாக அபிஷேகம் செய், ௧௬ பிறகு, இஸ்ரவேலின் அரசனாக நிம்சியின் மகனான யெகூவை அபிஷேகம் செய். பிறகு, ஆபேல்மேகொலா ஊரானாகிய சாப்பாத்தின் மகன் எலிசாவை உனது இடத்தில் தீர்க்கதரிசியாக அபிஷேகம் செய். ௧௭ ஆசகேல் பல தீயவர்களைக் கொன்றுவிடுவான். இவனது வாளுக்குத் தப்பியவர்களை யெகூ கொன்றுவிடுவான். இவனது வாளுக்குத் தப்பியவர்களை எலிசா கொன்றுவிடுவான். ௧௮ எலியா, நீ மட்டும் இஸ்ரவேலில் உண்மையானவன் என்றில்லை. இன்னும் பலர் இருக்கிறார்கள். நான் 7,000 பேரின் உயிரை வைப்பேன். 7,000 இஸ்ரவேலர் பாகாலை வணங்காதவர்களாக இருக்கிறார்கள்! அவர்கள் பாகாலின் விக்கிரகத்தை முத்தமிடுவதில்லை” என்றார்.
எலிசா தீர்க்கதரிசியாகிறான்
௧௯ எலியா அந்த இடத்தை விட்டுப்போய் சாப்பாத்தின் மகனான எலிசாவைக் கண்டு பிடித்தான். எலிசா 12 ஏக்கர் நிலத்தை உழுதுக்கொண்டிருந்தான். எலியா போகும்போது அவன் உழவை முடிக்கிற நிலையில் இருந்தான். பிறகு எலியா அவனிடம் சென்று, அவன் மீது தன் போர்வையை எறிந்தான். ௨௦ உடனே அவன் தன் மாடுகளை விட்டு விட்டு, எலியாவின் பின்னால் போனான். எலிசா, “நான் என் தந்தையிடமும் தாயிடமும் முத்தமிட்டு விடைபெற்று வரட்டுமா?” எனக் கேட்டான்.
எலியாவோ, “நல்லது போ, என்னால் அதைத் தடுக்க முடியாது” என்றான்.
௨௧ எலிசா தன் குடும்பத்துடன் சிறப்பான உணவை உண்டான். எலிசா தன் பசுக்களைக் கொன்றான். நுகத்தடியை ஒடித்து விறகாக்கினான். பிறகு இறைச்சியை சமைத்து அனைவருக்கும் உண்ண உணவளித்தான். பின்னர் அவன் எலியாவிற்குப் பின்னால் போய் அவனுக்கு சேவைசெய்தான்.