தேவன் சாமுவேலை அழைக்கிறார்
௧ சிறுவனான சாமுவேல், ஏலியின் கீழே
கர்த்தருக்கு சேவை செய்து வந்தான். அந்த நாட்களில் கர்த்தர் ஜனங்களோடு நேரடியாக அடிக்கடி பேசுவதில்லை. அங்கே மிகக் குறைந்த தரிசனங்களே இருந்தன.
௨ ஏலியின் கண்கள் பலவீனமாகி ஏறக்குறைய அவன் குருடாகிவிட்டான். ஒரு நாள் அவன் படுக்கையில் கிடந்தான். ௩ சாமுவேல் தேவனுடைய பரிசுத்தப் பெட்டி இருக்கிற கர்த்தருடைய ஆலயத்தில் படுத்திருந்தான். கர்த்தருடைய விளக்கானது இன்னும் எரிந்துக் கொண்டிருந்தது. ௪ கர்த்தர் சாமுவேலை அழைத்தார். சாமுவேலோ, “நான் இங்கே இருக்கிறேன்” என்றான். ௫ ஏலி தன்னை அழைப்பதாக சாமுவேல் நினைத்துக்கொண்டான். எனவே சாமுவேல் ஏலியின் அருகில் ஓடிச் சென்றான். “நான் இங்கே இருக்கிறேன். ஏன் என்னை அழைத்தீர்கள்” என்று கேட்டான்.
ஆனால் ஏலியோ, “நான் உன்னை அழைக்கவில்லை. படுக்கைக்குத் திரும்பிப் போ” என்றான்.
சாமுவேல் படுக்கைக்குத் திரும்பி போனான். ௬ மீண்டும் கர்த்தர், “சாமுவேலே!” என்று கூப்பிட்டார். மீண்டும் சாமுவேல் ஏலியிடம் ஓடிப் போனான். அவனிடம், “நான் இங்கே இருக்கிறேன். என்னை ஏன் கூப்பிட்டீர்கள்?” என்று கேட்டான்.
ஏலியோ, “நான் உன்னை அழைக்கவில்லை. படுக்கைக்குத் திரும்பிப் போ” என்றான்.
௭ சாமுவேல் அதுவரை கர்த்தரைப்பற்றி அறியாமல் இருந்தான். கர்த்தர் அதுவரை அவனிடம் நேரடியாகப் பேசினதில்லை.
௮ கர்த்தர் சாமுவேலை மூன்றாவது முறையாக அழைத்தார். மீண்டும் சாமுவேல் எழுந்து ஏலியிடம் ஓடிப்போனான். “நான் இங்கே இருக்கிறேன், என்னை ஏன் அழைத்தீர்கள்” என்றான்.
பின்னர் ஏலி, சாமுவேலை அழைத்தது கர்த்தர் என்பதை அறிந்துக் கொண்டான். ௯ ஏலி சாமுவேலிடம், “படுக்கைக்குப் போ, அவர் உன்னை மீண்டும் அழைத்தால், ‘கர்த்தாவே, பேசும். நான் உமது தாசன். நான் கவனித்துக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்’ என்று சொல்” என்றான்.
எனவே சாமுவேல் மீண்டும் படுக்கைக்குத் திரும்பிப்போனான். ௧௦ கர்த்தர் வந்து அங்கே நின்றார். அவர் முன்பு போலவே செய்தார். அவர், “சாமுவேலே, சாமுவேலே!” என்று அழைத்தார்.
சாமுவேலோ, “கர்த்தாவே பேசும், நான் உமது தாசன், நான் கவனித்துக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்” என்றான்.
௧௧ கர்த்தர் சாமுவேலிடம், “நான் இஸ்ரவேலில் சில காரியங்களை விரைவில் செய்வேன் அதைப்பற்றி கேள்விப்படுகிற ஜனங்கள் அதிர்ச்சி அடைவார்கள். ௧௨ நான் ஏலிக்கும் அவன் குடும்பத்திற்கும் எதிராகச் செய்வேன் என்று சொன்னப்படியே ஒவ்வொன்றையும் தொடக்கம் முதல் இறுதிவரை செய்வேன். ௧௩ நான் ஏலியிடம் அவனது குடும்பத்தை என்றென்றைக்கும் தண்டிக்கப் போவதாகக் கூறியிருக்கிறேன். அவன் மகன்கள் அவர்களாகவே சாபத்தை வரவழைத்துக் கொண்டனர். அவர்கள் தேவனுக்கு விரோதமாகக் கெட்டவற்றைப் பேசியும் செய்தும் வந்தனர் என்பதை ஏலி அறிந்திருந்தும், ஏலி அவர்களைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டான். ௧௪ அதனால் தான் ஏலியின் குடும்பத்தார் செய்த பாவங்கள் ஒருபோதும், பலிகளாலோ, தானியக் காணிக்கையாலோ தீர்வதில்லை என்று நான் ஆணையிட்டிருக்கிறேன்” என்றார்.
௧௫ விடியும்வரை சாமுவேல் படுக்கையிலேயே படுத்திருந்தான். அதிகாலையிலேயே எழுந்து கர்த்தருடைய ஆலய கதவைத் திறந்தான். ஏலியிடம் கர்த்தருடைய தரிசனத்தைப் பற்றிக் கூற சாமுவேல் பயந்தான்.
௧௬ ஆனால் ஏலியோ சாமுவேலிடம், “என் மகனே சாமுவேல்!” என்று அழைத்தான். அதற்கு சாமுவேல், “ஐயா” என்றான்.
௧௭ ஏலி அவனிடம், “கர்த்தர் உன்னிடம் என்ன சொன்னார்? அதனை என்னிடம் மறைக்கவேண்டாம். தேவன் உன்னிடம் சொன்னச் செய்தியை மறைத்தால் தேவன் உன்னைத் தண்டிப்பார்” என்றான்.
௧௮ அதனால் சாமுவேல் ஏலியிடம் எல்லாவற்றையும் கூறினான். அவன் ஏலியிடம் எதையும் மறைத்து வைக்கவில்லை.
ஏலி, “அவர் கர்த்தர். அவருக்குச் சரியெனத் தோன்றுவதை அவர் செய்யட்டும்” என்றான்.
௧௯ சாமுவேல் வளரும்போது கர்த்தர் அவனோடேயே இருந்தார். சாமுவேலின் எந்தச் செய்தியும் பொய்யாக நிரூபிக்க கர்த்தர் அனுமதிக்கவில்லை. ௨௦ பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் அனைவருக்கும் தாண் முதல் பெயெர்செபா வரைக்கும் சாமுவேல் உண்மையான கர்த்தருடைய தீர்க்கதரிசி என்றறிந்தார்கள். ௨௧ சீலோவில் தொடர்ந்து கர்த்தர் சாமுவேலுக்கு தம்மை காண்பித்து வந்தார், மற்றும் அங்கே தம்முடைய வார்த்தையினாலேயே கர்த்தர் சாமுவேலுக்குத் தம்மை வெளிப்படுத்தி வந்தார்.