௩௧
சவுலின் மரணம்
௧ பெலிஸ்தியர் இஸ்ரவேலுக்கு எதிராகப்
போரிட்டனர். இஸ்ரவேலர் தோற்று ஓடினார்கள். கில் போவா மலைப்பகுதியில் பல இஸ்ரவேலர் கொல்லப்பட்டனர். ௨ சவுலுக்கும் அவனது மகன்களுக்கும் எதிராகக் கடுமையாய் பெலிஸ்தியர் போரிட்டனர். அவர்கள் சவுலின் மகன்களான யோனத்தான், அபினதாப், மற்றும் மல்கிசூகா ஆகியோரைக் கொன்றனர்.
௩ சவுலுக்கு எதிராக போரானது மேலும் மேலும் வலுத்தது. வில் வீராகள் சவுலின் மீது அம்பு எய்ததால், சவுல் பயங்கரமாக காயப்பட்டான். ௪ தன்னோடு ஆயுதம் தூக்கி வருபவனிடம் சவுல், “உனது பட்டயத்தை எடுத்து என்னைக் கொன்று போடு. அதனால் அந்நியர் என்னை காயப்படுத்தி கேலிச் செய்யாமல் இருப்பார்கள்” என்றான். அவன் பயந்து அவ்வாறு செய்ய மறுத்துவிட்டான். எனவே சவுல் தனது வாளை உருவி தற்கொலை செய்து கொண்டான். ௫ சவுல் மரித்துப்போனதை, ஆயுதங்களை எடுத்து வரும் அவனது உதவியாளன் அறிந்து, தனது வாளால் தானும் மடிந்தான். ௬ எனவே சவுலும் அவனது மூன்று மகன்களும், சவுலின் ஆயுதம் தாங்கும் வீரனும் அனைத்துப் படை வீரர்களும் அதே நாளில் மரித்தார்கள்.
சவுலின் மரணத்தால் பெலிஸ்தியர் மகிழ்ச்சியடைகின்றனர்
௭ பள்ளத்தாக்கின் மறு பக்கத்தில் இருந்த இஸ்ரவேலர் தங்கள் சேனை பயந்து ஓடுவதைக் கண்டனர். சவுலும் அவனது மகன்களும் மரித்துப்போனதை அறிந்தனர். எனவே அவர்கள் தங்கள் நகரங்களைவிட்டு ஓடிப்போனார்கள். பெலிஸ்தியர் அந்நகரங்களை ஆக்கிரமித்துக் கொண்டனர்.
௮ மறுநாள், பெலிஸ்தியர் பிணங்களின் மேலுள்ள பொருட்களை கவரச் சென்றனர். கில்போவா மலையில் சவுலும், அவனது மூன்று மகன்களும் மரித்துக் கிடப்பதைக் கண்டனர். ௯ அவர்கள் சவுலின் தலையை வெட்டி, அவனது ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டனர். அவர்கள் இச்செய்தியைப் பெலிஸ்தருக்கும், தங்கள் விக்கிரகங்களின் ஆலயத்திற்கும் எடுத்துச் சென்றனர். ௧௦ சவுலின் ஆயுங்களை அவர்கள் அஸ்தரோத் கோவிலில் வைத்தனர். சவுலின் உடலை அவர்கள் பெத்ஸானின் சுவரில் தொங்கவிட்டனர்.
௧௧ இது குறித்து யாபேஸ் கீலேயாத் நகரத்தார் கேள்விப்பட்டனர். ௧௨ எனவே, எல்லா வீரர்களும் பெத்ஸானுக்கு இரவு முழுவதும் பயணம் செய்து, சவுலின் உடலையும் அவனது மகன்களின் பிணங்களையும் எடுத்து வந்தனர், அவற்றை யாபேசில் எரித்தனர், ௧௩ பின்பு சவுல் மற்றும் அவனது மகன்களின் எலும்புகளை எடுத்து யாபேசில் பெரிய மரத்தடியில் புதைத்தனர். யாபேஸின் குடிகள் 7 நாட்களுக்கு உணவு உண்ணாமல் துக்கம் கொண்டாடினர்.