எபேசியருக்கு
எழுதிய கடிதம்
௧ இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுல் எழுதுவது, தேவனுடைய விருப்பத்துக்கிணங்க நான் ஒரு அப்போஸ்தலனாயிருக்கிறேன்.
இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை வைத்து எபேசுவிலே வாழும் மக்களுக்காக இந்நிருபம் எழுதப்பட்டது.
௨ பிதாவாகிய தேவனிடமிருந்தும், இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு சமாதானம் உண்டாகட்டும்.
கிறிஸ்துவில் ஆவியானவரின் ஆசீர்வாதம்
௩ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம். பரலோகத்தில் அவர் கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய சகல ஆசிகளையும் நமக்குத் தந்துள்ளார். ௪ உலகம் படைக்கப்படுவதற்கு முன்னரே தேவன் நம்மைக் கிறிஸ்துவுக்குள் தேர்ந்தெடுத்து உள்ளார். தமக்கு முன்பாக நாம் அன்பில் தூய்மையானவர்களும், குற்றமில்லாதவர்களுமாய் இருப்பதற்காகவே நம்மை அவர் தேர்ந்தெடுத்தார். ௫ உலகம் படைக்கப்படுவதற்கு முன்னரே, நம்மைத் தம் பிள்ளைகளாய் கிறிஸ்து மூலமாகத் தேர்ந்தெடுக்க தேவன் முடிவு செய்துவிட்டார். தேவன் செய்ய விரும்பியதும் அதுவே ஆகும். அதுவே அவருக்கு மகிழ்ச்சியைத் தந்தது. ௬ அவரது வியக்கத்தக்க கருணை அவருக்கு மகிமை உண்டாக்கியது. அவர் தன் கிருபையால் நமக்கு இலவசமாய் அதைத் தான் நேசிக்கிற மகனான இயேசு மூலமாக நமக்குத் தந்தார்.
௭ கிறிஸ்துவின் இரத்தத்தால் நாம் விடுதலை பெற்றோம். தேவனின் வளமான இரக்கத்தால் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ௮ தேவன் அவரது இரக்கத்தை முழுமையாகவும் இலவசமாகவும் தந்தார். ௯ தேவன் முழு ஞானத்தோடும், பலத்தோடும் அவரது இரகசியத் திட்டத்தை நாம் அறியச் செய்தார். ௧௦ சரியான நேரம் வரும்போது தனது திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது தேவன் ஏற்கெனவே செய்த முடிவு. பரலோகத்திலும், பூமியிலும் உள்ள அனைத்து பொருள்களும் ஒன்று கூடி கிறிஸ்துவின் கீழ் இருக்க வேண்டும் என்பது தான் தேவனுடைய திட்டம்.
௧௧ நாம் கிறிஸ்துவுக்குள் தேவனின் மக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டோம். தேவன் நம்மைத் தேர்ந்தெடுப்பது பற்றி ஏற்கெனவே திட்டமிட்டிருந்தார். ஏனென்றால் அதுதான் அவர் விருப்பம். அவரது விருப்பத்திற்கும், முடிவுக்கும் ஏற்றவாறு அவர் எல்லாவற்றையும் சரிசெய்துகொள்வார். ௧௨ கிறிஸ்துவின் மீது நம்பிக்கை வைத்தவர்களில் நாமே முதல் மக்கள். நாம் தேவனின் மகிமைக்குப் புகழ் சேர்ப்போம் என்பதனால் தேர்ந்தெடுக்கப்பட்டோம். ௧௩ இந்தப் பெருமை உங்களையும் சேரும். நீங்களும் உங்கள் இரட்சிப்புக்காக உண்மையான நற்செய்தியைக் கேட்டீர்கள். நீங்கள் நற்செய்தியைக் கேட்டதால் கிறிஸ்துவின் மேல் நம்பிக்கை வைத்தீர்கள். தேவன் தந்த அவரது வாக்குறுதிப்படி பரிசுத்த ஆவியால் கிறிஸ்துவில் உங்களுக்கு அடையாளக் குறியிடப்பட்டீர்கள். ௧௪ தேவன் தம் மக்களுக்கு வாக்களித்தபடி நாம் பெறுவோம் என்பதற்கு பரிசுத்த ஆவியானவரே உத்தரவாதமாய் உள்ளார். தேவனைச் சேர்ந்தவர்களுக்கு இது முழு விடுதலை தரும். தேவனின் மகிமைக்குப் புகழ்ச்சியைத் தேடித் தருவது தான் இவை எல்லாவற்றின் நோக்கமாக இருக்கும்.
பவுலின் பிரார்த்தனை
௧௫-௧௬ அதனால்தான் எனது பிரார்த்தனைகளில் உங்களை நினைத்துக்கொண்டு உங்களுக்காக எப்போதும் தேவனுக்கு நன்றி சொல்கிறேன். இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள உங்கள் விசுவாசத்தையும், தேவனின் மக்களின் மேலுள்ள உங்கள் அன்பையும் குறித்து நான் கேள்விப்பட்டதில் இருந்து நான் இதனை எப்போதும் செய்துகொண்டிருக்கிறேன். ௧௭ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தேவனும், பிதாவுமானவரிடம் எப்போதும் நான் பிரார்த்தனை செய்கிறேன். அதில் தேவனை அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும், தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தரவேண்டும் என வேண்டுகிறேன்.
௧௮ உங்கள் இதயத்தில் மிகப் பெரிய புரிந்துகொள்ளுதல் ஏற்பட வேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்கிறேன். பிறகு தேவன் நம்மைத் தேர்ந்தெடுத்திருப்பது விசுவாசத்தோடு தொடர்புடையது என்பதைப் புரிந்துகொள்வீர்கள் என்பதில் உங்களுக்கு நம்பிக்கை வேண்டும். தம் தூய்மையான மக்களுக்குக் கொடுப்பதற்காகத் தந்த ஆசீர்வாதங்கள் மிகப் பெரியதும், புகழுடையதும் என்பதை நீங்கள் உணர வேண்டும். ௧௯ தேவனுடைய வல்லமை மிக உயர்ந்தது, அளக்க இயலாதது என்றும் தேவன் மேல் நம்பிக்கையுள்ள நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அவ்வல்லமை இறந்துபோன இயேசுவைத் தேவன் உயிர்த்தெழும்பும்படி செய்தது. ௨௦ தேவன் இயேசு கிறிஸ்துவைத் தனது வலது பக்கத்தில் அமர வைத்தார். ௨௧ ஆள்வோர்களையும், அதிகாரிகளையும், அரசர்களையும்விட கிறிஸ்துவை மேலானவராக தேவன் செய்தார். இந்த உலகத்திலும் அடுத்த உலகத்திலும் வல்லமையுள்ள அனைத்தையும் விட கிறிஸ்து வல்லமை மிக்கவர். ௨௨ தேவன் எல்லாவற்றையும் கிறிஸ்துவின் அதிகாரத்துக்குள் வைத்துவிட்டார். திருச்சபையில் உள்ள அனைத்துக்கும் அவரையே தலைவராக ஆக்கிவிட்டார். ௨௩ திருச் சபை என்பது கிறிஸ்துவின் சரீரம். சபையானது கிறிஸ்துவினால் நிரப்பப்பட்டுள்ளது. அவர் எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்பத்தக்கவர்.