தானியேலும் சிங்கங்களும்
௧ தரியு தனது இராஜ்யம் முழுவதையும் ஆளுவதற்கு 120 தேசாதிபதிகளைத் தேர்ந்தெடுப்பது நல்ல திட்டமென்று எண்ணினான். ௨ அவன் அந்த 120 தேசாதிபதிகளையும் கட்டுப்படுத்த மூன்று பேரைத் தேர்ந்தெடுத்தான். இந்த மூன்று மேற்பார்வையாளர்களில் தானியேலும் ஒருவன். அரசன் இவ்வாறு ஓர் ஏற்பாடு செய்துவிட்டதால் எவரும் அவனை ஏமாற்ற முடியாது. அதோடு அவன் தனது இராஜ்யத்தில் எதையும் இழக்கமாட்டான். ௩ தானியேல் தன்னை மற்ற மேற்பார்வையாளர்களைவிடச் சிறந்தவனாகக் காட்டினான். தானியேல் இதனைத் தனது நற்குணங்கள் மூலமும், நல்ல திறமைகள் மூலமும் செய்தான். அரசன் தானியேலின்மேல் மிகவும் வியப்படைந்தான். அவன் தானியேலை இராஜ்யம் முழுவதற்கும் ஆளுநாரக்கிவிடலாம் என்று திட்டமிட்டான். ௪ ஆனால் மற்ற மேற்பார்வையளர்களும், மற்ற தேசாதிபதிகளும் இதனை அறிந்ததும் மிகவும் பொறாமைகொண்டனர். அவர்கள் தானியேலை குற்றஞ்சாட்ட காரணங்களைத் தேடினர். எனவே அவர்கள் தானியேல் அரசு பணிகளைச் செய்யும்போது மிகக் கவனமாகக் கவனித்தனர். ஆனால் அவர்களால் தானியேலிடம் எந்தக் குறையையும் கண்டுபிடிக்க முடியவில்லை. தானியேல் நேர்மையாளனாகவும், நம்பிக்கைக்குரியவனாகவும் இருந்தான். அவன் அரசனை ஏமாற்றாமல் மிகக் கடுமையாக வேலை செய்து வந்தான்.
௫ இறுதியாக அந்த ஆட்கள், “நாம் தானியேலை குற்றம் கண்டுபிடிக்கும்படி தவறான எதையும் அவன் செய்யமாட்டான். எனவே நாம் அவனது தேவனுடைய சட்ட விஷயத்தில் குற்றம் காண வேண்டும்” என்று பேசிக்கொண்டனர்.
௬ எனவே, அந்த மேற்பார்வையாளர்களும், தேசாதிபதிகளும் ஒரு குழுவாக அரசனிடம் சென்றனர். அவர்கள் அரசரை நோக்கி, “தரியு அரசரே, என்றென்றும் வாழ்வீராக. ௭ மேற்பார்வையாளர்களும், தேசாதிபதிகளும், பிரபுக்களும், மந்திரிமார்களும், தலைவர்களும் ஒரு விஷயத்தை ஒப்புக்கொண்டார்கள். அதாவது நாங்கள் அரசர் ஒரு சட்டத்தைச் இயற்றவேண்டும் என்று எண்ணுகிறோம். எல்லோரும் அதற்கு அடி பணியவேண்டும். இதுதான் அந்தச் சட்டம், எவராவது இன்னும் 30 நாட்களுக்கு அரசராகிய உம்மைத் தவிர வேறெந்த தேவனையோ, மனிதரையோ நோக்கி எந்த ஒரு காரியத்திற்கும் ஜெபம் செய்தால் அவன் சிங்கக்கூண்டிலே போடப்படுவான். ௮ இப்பொழுது இதனைச் சட்டமாக்கி இந்தத் தாளிலே கையெழுத்துப் போடும். இவ்வாறு இந்தச் சட்டம் மாற்ற முடியாதபடி இருக்கும். ஏனென்றால் மேதியர்கள் மற்றும் பெர்சியர்களின் சட்டங்கள் விலக்கவோ மாற்றவோ முடியாதவை” என்றனர். ௯ அவர்கள் சொன்னபடி அரசரான தரியு இச்சட்டத்தை இயற்றி கையெழுத்துப் போட்டான்.
௧௦ தானியேல் ஒவ்வொரு நாளும் தேவனிடம் மூன்றுமுறை ஜெபம் செய்வான். தானியேல் ஒவ்வொரு நாளும் மூன்றுமுறை முழங்காலில் நின்று தேவனிடம் ஜெபித்து அவரைப் போற்றுவான். தானியேல் இப்புதிய சட்டத்தைக் கேள்விப்பட்டதும் தனது வீட்டிற்குப் போய் தனது அறையில் உள்ள மாடியின்மீது ஏறினான். தானியேல் எருசலேமை நோக்கியிருக்கிற ஜன்னல் அருகில் போய் முழங்காலிட்டு எப்பொழுதும் செய்வதுபோன்று ஜெபித்தான்.
௧௧ அந்த ஆட்கள் குழுவாகச் சென்று தானியேலைக் கண்டுபிடித்தனர். அவர்கள் தானியேல் தேவனிடம் உதவிகேட்டு ஜெபிப்பதைக் கண்டனர். ௧௨ எனவே அந்த ஆட்கள் அரசனிடம் சென்றனர். அவர்கள் அவனிடம் அவன் இயற்றிய சட்டத்தைப் பற்றி பேசினர். அவர்கள், “தரியு அரசே, எந்த மனிதனும் 30 நாள்வரையிலும் அரசராகிய உம்மைத் தவிர வேறு எந்தத் தேவனையும், ஆளையும் நோக்கி யாதொரு காரியத்தைக் குறித்தும் ஜெபம் செய்தால் அவனைச் சிங்கக்கூண்டிலே போடவேண்டும் என்று நீர் கட்டளைப் பத்திரத்திலே கையெழுத்திட்டீர் அல்லவா?” என்றனர்.
அதற்கு அரசன், “ஆமாம். நான் அந்தச் சட்டத்தில் கையெழுத்திட்டேன். அதோடு மேதியர்கள் மற்றும் பெர்சியர்களுக்கு இருக்கும் மாறாத சட்டத்தின்படி அது ரத்து செய்யப்படவோ அல்லது மாற்றப்படவோ கூடாது” என்றான்.
௧௩ அந்த ஆட்கள் அரசனிடம், “தானியேல் என்ற பெயருடைய அந்த மனிதன் உமக்கு மரியாதை செலுத்துவதில்லை. தானியேல் யூதாவிலிருந்து கொண்டுவரப்பட்ட கைதிகளில் ஒருவன். தானியேல் நீர் கையெழுத்திட்ட சட்டத்தைப்பற்றி கவலைப்படவில்லை. தானியேல் ஒவ்வொரு நாளும் மூன்று முறை தன் தேவனிடத்தில் ஜெபம் பண்ணி உதவிக்காக மன்றாடுகிறான்” என்றனர்.
௧௪ அரசன் இதனைக் கேள்விப்பட்டதும் மிக வருத்தப்பட்டு கலக்கமடைந்தான். அரசன் தானியேலைக் காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்தான். அவன் மாலைவரை இதற்கான ஒரு திட்டத்தைப்பற்றியே எண்ணினான். ௧௫ பிறகு அந்த ஆட்கள் ஒரு குழுவாக அரசனிடம் சென்றனர். அவர்கள் அவனிடம், “அரசே, நினைத்துப்பாரும். மேதியர் மற்றும் பெர்சியரின் சட்டமானது, அரசனால் கையெழுத்திடப்பட்ட கட்டளையோ அல்லது சட்டமோ விலக்கப்படவோ மாற்றப்படவோ முடியாது என்று கூறுகிறது” என்றார்கள்.
௧௬ எனவே, தரியு அரசன் கட்டளையிட்டான். அவர்கள் தானியேலை அழைத்து வந்து சிங்கங்களின் கூண்டில் போட்டனர். அரசன் தானியேலிடம், “நீ தொழுதுகொள்ளும் தேவன் உன்னைக் காப்பாற்றுவார் என்று நான் நம்புகிறேன்” என்று சொன்னான். ௧௭ ஒரு பெரிய பாறங்கல்லைக் கொண்டு வந்து சிங்கக்குகையின் வாசலை மூடினார்கள். பிறகு அரசன் தனது மோதிரத்தைப் பயன்படுத்தி பாறையின்மேல் முத்திரையிட்டான். பிறகு அவன் தன் அதிகாரிகளின் மோதிரங்களாலும் பாறையின்மேல் முத்திரையிட்டான். இது, எவராலும் பாறாங்கல்லைத் திறந்து தானியேலை கூண்டிலிருந்து வெளியே கொண்டுவர முடியாது என்று காட்டியது. ௧௮ பிறகு அரசனான தரியு தன் வீட்டிற்குத் திரும்பிப் போனான். அரசன் அன்றிரவு உணவு உண்ணவில்லை, அவன் யாரும் வந்து வேடிக்கை செய்து மகிழ்வூட்டுவதை விரும்பவில்லை. அரசனால் இரவு முழுவதும் தூங்க முடியவில்லை.
௧௯ மறுநாள் காலையில் கிழக்கு வெளுக்கும்போது அரசனான தரியு எழுந்து சிங்கங்களின் குகைக்கு ஓடினான். ௨௦ அரசன் மிகத்துயரமாக இருந்தான். அவன் சிங்கங்களின் குகைக்கருகில் போய், தானியேலைக் கூப்பிட்டான். அரசன், “தானியேலே ஜீவனுள்ள தேவனுடைய ஊழியனே, நீ எப்பொழுதும் உன் தேவனுக்குச் சேவைசெய்கிறாயே, உனது தேவனால் உன்னைச் சிங்கங்களிடமிருந்து காப்பாற்ற முடிந்ததா?” என்றான்.
௨௧ தானியேல் அதற்குப் பதிலாக, “அரசே, நீர் என்றென்றும் வாழ்க. ௨௨ தேவன் என்னைக் காக்கத் தூதனை அனுப்பினார். தூதன் சிங்கங்களின் வாயை அடைத்தான். சிங்கங்கள் என்னைக் காயப்படுத்தவில்லை. ஏனென்றால், நான் குற்றமறியாதவன் என்று தேவன் அறிவார். அரசே நான் உமக்கு எதிராக எந்தக் கேடும் செய்யவில்லை” என்றான்.
௨௩ அரசனான தரியு மிகுந்த மகிழ்ச்சியடைந்தான். அவன் தனது வேலைக்காரர்களிடம் சிங்ககுகையிலிருந்து தானியேலை வெளியேற்றும்படிச் சொன்னான். தானியேலைச் சிங்கக்குகையிலிருந்து வெளியே அழைத்தபோது அவர்கள் அவன் உடலில் எவ்வித காயத்தையும் காணவில்லை. தானியேல் சிங்கங்களால் காயப்படுத்தப்படவில்லை, ஏனென்றால் அவன் தேவனிடம் விசுவாசம் வைத்தான்.
௨௪ பிறகு அரசன், தானியேல்மீது குற்றம் சாட்டி அவனைச் சிங்கக்குகைக்குள் அனுப்பியவர்களைக் கொண்டுவரும்படிக் கட்டளையிட்டான். அம்மனிதர்களும் அவர்களது மனைவிகளும் குழந்தைகளும் சிங்கக்குகைக்குள் தள்ளப்பட்டனர். அவர்கள் குகையின் தரைக்குள் விழுவதற்குமுன்பே சிங்கங்கள் அவர்கள் மேல் பாய்ந்து, அவர்களது உடல்களைக் கிழித்து எலும்புகளை மென்று உண்டன.
௨௫ பிறகு அரசனான தரியு பின்வரும் கடிதத்தை உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு மொழி பேசுகிற அனைத்து ஜனங்களுக்கும் எழுதினான்:
 
௨௬ வாழ்த்துக்கள்:
நான் ஒரு புதிய சட்டத்தை இயற்றியிருக்கிறேன். இச்சட்டம் என் இராஜ்யத்தில் உள்ள எல்லாப் பகுதி ஜனங்களுக்கும் உரியது. நீங்கள் எல்லோரும் தானியேலின் தேவனுக்கு அஞ்சி மரியாதை செய்ய வேண்டும்.
 
தானியேலின் தேவன் ஜீவனுள்ள தேவன்,
தேவன் என்றென்றும் இருக்கிறார்.
அவரது இராஜ்யம் என்றென்றும் அழியாதது.
அவரது ஆட்சி முடிவில்லாதது.
௨௭ தேவன் ஜனங்களுக்கு உதவிசெய்து காப்பாற்றுகிறார்.
தேவன் பரலோகத்திலும் பூமியிலும் அற்புதங்களைச் செய்கிறார்.
ஆண்டவர் தானியேலைச் சிங்கங்களிடமிருந்து காப்பாற்றினார்.
 
௨௮ எனவே தானியேல், தரியு அரசனாக இருந்த காலத்திலும், பெர்சியனாகிய கோரேசுடைய ஆட்சியிலும் வெற்றிகரமாக வாழ்ந்தான்.