௩௧
யோசுவா புதிய தலைவனாக இருப்பான்
௧ பிறகு மோசே போய் இஸ்ரவேலின் அனைத்து
ஜனங்களிடம் இவற்றைப் பேசினான். ௨ மோசே அவர்களிடம், “நான் இன்று 120 வயதுள்ளவன். இனிமேல் என்னால் உங்களை வழிநடத்த முடியாது. கர்த்தர் என்னிடம்: ‘நீ யோர்தானைக் கடந்து போகமாட்டாய்’ என்று சொன்னார். ௩ ஆனால், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை அந்த நாட்டிற்குள் வழிநடத்திச் செல்வார். உனக்காகக் கர்த்தர் இந்த ஜாதிகளை அழிப்பார். நீ அவர்களது நாட்டை அவர்களிடமிருந்து எடுத்துக்கொள்வாய், ஆனால், யோசுவா உங்களை வழி நடத்த வேண்டும் என்று கர்த்தர் சொன்னார்.
௪ “கர்த்தர் சீகோனையும், ஓகையும் அழித்தார். கர்த்தர் அந்த எமோரிய அரசர்களையும் அழித்தார். கர்த்தர் உனக்காக மீண்டும் அதனைச் செய்வார். ௫ அந்த ஜாதிகளைத் தோற்கடிக்கக் கர்த்தர் உதவி செய்வார். ஆனால் நான் உங்களுக்குச் சொன்ன படி எல்லாவற்றையும் நீங்கள் அவர்களுக்குச் செய்யவேண்டும். ௬ பலமுள்ளவர்களாகவும் தைரியம் உள்ளவர்களாகவும் இருங்கள். அந்த ஜனங்களுக்குப் பயப்பட வேண்டாம். ஏனென்றால், உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடு இருக்கிறார். அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” என்றான்.
௭ பின்பு மோசே யோசுவாவை அழைத்தான். மோசே யோசுவாவிடம் சொல்வதை இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் பார்த்தனர். அவன் “பலமாகவும் தைரியமாகவும் இரு. அவர்களது முற்பிதாக்களுக்கு தருவதாகக் கர்த்தர் வாக்களித்த நாட்டிற்கு நீதான் இவர்களை வழி நடத்தவேண்டும். இஸ்ரவேல் ஜனங்கள் அந்நாட்டைத் தமக்குச் சொந்தமாக்கிக்கொள்ள நீ உதவ வேண்டும். ௮ கர்த்தர் உன்னை வழிநடத்துவார். அவர் தாமே உன்னுடன் இருக்கிறார். அவர் உன்னைக் கைவிடமாட்டார். உன்னை விட்டு விலகமாட்டார். கவலைப்படாதே. பயப்படாதே” என்றான்.
மோசே போதனைகளை எழுதுகிறான்
௯ பிறகு மோசே போதனைகளை எழுதி ஆசாரியர்களிடம் கொடுத்தான். அந்த ஆசாரியர்கள் அனைவரும் லேவியர் கோத்திரத்தினர். அவர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கிச் செல்லும் வேலையை உடையவர்கள். மோசே போதனைகளை இஸ்ரவேலின் மூப்பர்கள் (தலைவர்கள்) அனைவருக்கும் கொடுத்தான். ௧௦ பிறகு, மோசே தலைவர்களிடம் பேசினான். அவன், “ஒவ்வொரு ஏழு ஆண்டின் முடிவிலும் விடுதலைக்கான ஆண்டில் அடைக்கல கூடாரப் பண்டிகையில், இந்தப் போதனைகளை ஜனங்களுக்கு வாசியுங்கள். ௧௧ அப்பொழுது, இஸ்ரவேலின் அனைத்து ஜனங்களும் கூடி வருவார்கள். அவர்கள் உன் தேவனாகிய கர்த்தர் குறிப்பிடும் சிறப்பான இடத்தில் அவரைச் சந்திக்க வருவார்கள். பிறகு நீ ஜனங்களுக்கு போதனைகளை வாசிக்க வேண்டும். அப்பொழுது அவற்றை அவர்கள் கேட்க முடியும். ௧௨ அனைத்து ஜனங்களையும் ஒன்று கூட்டு. ஆண்கள், பெண்கள், சிறுகுழந்தைகள், உங்கள் நகரங்களில் வாழும் அயல்நாட்டுக்குடிகள் என அனைவரையும் கூட்டு. போதனைகளை அவர்கள் கேட்பார்கள். அவர்கள் உனது தேவனாகிய கர்த்தரை மதிக்கக் கற்றுக்கொள்வார்கள். போதனைகளில் உள்ளவற்றுக்குக் கீழ்ப்படிவார்கள். ௧௩ அவர்களது சந்ததிகள் போதனைகளை அறிந்திராவிட்டால், பிறகு அவர்கள் அவற்றைக் கேட்பார்கள். அவர்கள் உனது தேவனாகிய கர்த்தரை மதிக்கக் கற்றுக்கொள்வார்கள். நீ உனது நாட்டில் வாழும் காலம்வரை அவர்கள் அவரை மதிப்பார்கள். நீ விரைவில் யோர்தானை கடந்துபோய் அந்த நாட்டை உங்களுக்குச் சொந்தமாக்கிக்கொள்வாய்” என்றான்.
கர்த்தர் மோசேயையும் யோசுவாவையும் அழைக்கிறார்
௧௪ கர்த்தர் மோசேயிடம், “இப்பொழுது நீ மரணமடைவதற்குரிய நேரம் நெருங்கியுள்ளது. பரிசுத்தக் கூடாரத்திற்குள் வரும்படி யோசுவாவிடம் சொல். அவன் செய்ய வேண்டியவற்றை நான் யோசுவாவிடம் கூறுவேன்” என்றார். எனவே மோசேயும் யோசுவாவும் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் சென்றார்கள்.
௧௫ கர்த்தர் கூடாரத்திலே உயரமான மேகத் தூணில் தோன்றினார். உயரமான அந்த மேகத்தூண் கூடாரத்தின் வாசலுக்கு மேல் நின்றது! ௧௬ கர்த்தர் மோசேயிடம், “நீ விரைவில் மரணமடைவாய். நீ உனது முற்பிதாக்களோடு போய்ச் சேர்ந்தபிறகு இந்த ஜனங்கள் என் மீதுள்ள நம்பிக்கையில் தொடரமாட்டார்கள். நான் அவர்களோடு செய்த உடன்படிக்கையை அவர்கள் முறிப்பார்கள். அவர்கள் என்னைவிட்டு விலகி வேறு தெய்வங்களைத் தொழுதுகொள்வார்கள். அவர்கள் போகிற நாட்டில் உள்ள பொய்த் தெய்வங்களை தொழுதுகொள்வார்கள். ௧௭ அந்த நேரத்தில் நான் அவர்கள் மேல் மிகவும் கோபங்கொள்வேன். நான் அவர்களை விட்டு விலகுவேன். அவர்களுக்கு உதவ நான் மறுப்பேன். அவர்கள் அழிக்கப்படுவார்கள். அவர்களுக்குப் பயங்கரமானவை ஏற்படும். அவர்களுக்குப் பல தொல்லைகள் ஏற்படும். பிறகு அவர்கள், ‘இத்தீமைகள் எல்லாம் எங்களுக்கு ஏற்படுகின்றன. ஏனென்றால், தேவன் எங்களோடு இல்லை’ என்பார்கள். ௧௮ நான் அவர்களுக்கு உதவ மறுப்பேன். ஏனென்றால், அவர்கள் தீமை செய்திருக்கின்றனர். மற்ற தெய்வங்களை வணங்கினார்கள்.
௧௯ “எனவே, இப்பாடலை எழுது, இஸ்ரவேல் ஜனங்களுக்கு இதனைக் கற்றுக்கொடு. இப்பாடலைப் பாட அவர்களுக்குக் கற்றுக்கொடு. பிறகு இப்பாடல் இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிராக எனக்குச் சாட்சியாக இருக்கும். ௨௦ நான் அவர்களது முற்பிதாக்களுக்கு கொடுப்பதாக வாக்களித்த பல நன்மைகள் நிறைந்த நாட்டிற்கு அவர்களை அழைத்துச் செல்வேன். அவர்கள் உண்ண விரும்புகின்றவற்றை எல்லாம் பெறுவார்கள். அவர்கள் வளமான வாழ்வைப் பெறுவார்கள். ஆனால், பின்னர் அவர்கள் அந்நிய தெய்வங்களிடம் திரும்பி அவர்களுக்குப் பணிவிடை செய்வார்கள். அவர்கள் என்னிடமிருந்து விலகி எனது உடன்படிக்கையை உடைப்பார்கள். ௨௧ பிறகு பல பயங்கரமானவை அவர்களுக்கு நிகழும். அவர்களுக்குப் பல தொல்லைகள் ஏற்படும். அப்போது, அவர்களின் ஜனங்கள் இப்பாடலை நினைவு வைத்திருப்பார்கள். அவர்கள் எந்த அளவு தவறியுள்ளனர் என்பதை இப்பாடல் காட்டும். நான் அவர்களுக்குக் கொடுப்பதாக வாக்களித்த நாட்டிற்கு அவர்களை அதுவரை அழைத்துப் போயிருக்கமாட்டேன். ஆனால் ஏற்கெனவே அவர்கள் அங்கே என்ன செய்ய திட்டமிட்டுள்ளார்கள் என்பதை நான் அறிவேன்” என்று கூறினார்.
௨௨ எனவே அதே நாளில் மோசே அப்பாடலை எழுதினான். அவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு அந்தப் பாட்டைக் கற்றுத்தந்தான்.
௨௩ பின்னர், கர்த்தர் நூனின் மகனான யோசுவாவிடம் பேசி, “பலமுள்ளவனாகவும், தைரியமுள்ளவனாகவும் இரு. நான் வாக்களித்த நாட்டிற்கு இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்திச் செல்வாய். நான் உன்னோடு இருப்பேன்” என்று கூறினார்.
மோசே இஸ்ரவேல் ஜனங்களை எச்சரிக்கிறான்
௨௪ மோசே கவனமாக இப்போதனைகள் எல்லாவற்றையும் ஒரு புத்தகத்தில் எழுதி முடித்தபோது, ௨௫ அவன் லேவியர்களுக்கு ஒரு ஆணை கொடுத்தான். (இவர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கிச் செல்லுகிறவர்கள்.) மோசே, ௨௬ “இந்த போதனைகளின் புத்தகத்தை எடுத்துக்கொண்டு, இதனை உங்கள் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியின் பக்கத்தில் வைத்துக்கொள்ளுங்கள். அது உங்களுக்கு எதிரான சாட்சியாக அங்கே இருக்கும். ௨௭ நீங்கள் கடினமானவர்கள் என்பதை நான் அறிவேன். நீங்கள் உங்கள் சொந்த வழியில் வாழ விரும்புகிறீர்கள் என்பதை நான் அறிவேன். பாருங்கள், நான் உங்களோடு இருக்கும்போதே நீங்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படிய மறுக்கிறீர்கள். நான் மரித்தபிறகும் நீங்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படிய மறுப்பீர்கள். ௨௮ எல்லா அதிகாரிகளையும், கோத்திரங்களின் தலைவர்களையும் ஒன்று கூட்டுங்கள். நான் அவர்களிடம் இவற்றைச் சொல்வேன். நான் பரலோகத்தையும், பூமியையும் அவர்களுக்கு எதிராக சாட்சியாக அழைப்பேன். ௨௯ எனது மரணத்திற்குப் பிறகு நீங்கள் கெட்டவர்களாவீர்கள் என்பதை நான் அறிவேன். நீங்கள் பின்பற்றுவதற்காக நான் கட்டளையிட்ட வழிகளை விட்டு விலகுவீர்கள். ஆகையால், எதிர்காலத்தில் உங்களுக்குத் தீமைகள் ஏற்படும். ஏனென்றால், கர்த்தர் தீங்கு என்று சொன்னவற்றையெல்லாம் நீங்கள் செய்ய விரும்புகிறீர்கள். நீங்கள் செய்த தீமைகளினால் அவரைக் கோபமடையச் செய்கிறீர்கள்” என்று சொன்னான்.
மோசேயின் பாடல்
௩௦ இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் ஒன்று கூட்டப்பட்டனர். மோசே அவர்களுக்காக இந்தப் பாடலைப் பாடினான். மோசே முழுப்பாடலையும் பாடினான்: