௨௧
௧ எனவே கர்த்தருடைய வார்த்தை மீண்டும் என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: ௨ “மனுபுத்திரனே, எருசலேமை நோக்கிப் பார். அதன் பரிசுத்தமான இடங்களுக்கு எதிராகப் பேசு. எனக்காக இஸ்ரவேல் நாட்டிற்கு எதிராகப் பேசு. ௩ இஸ்ரவேல் நாட்டிடம் கூறு, ‘கர்த்தர் இவற்றைச் சொன்னார்; நான் உனக்கு எதிரானவன்! நான் எனது வாளை அதன் உறையிலிருந்து எடுப்பேன்! நல்லவர்கள் தீயவர்கள் ஆகிய எல்லா ஜனங்களையும் உன்னிடமிருந்து விலக்குவேன். ௪ நான் நல்ல ஜனங்களையும், தீய ஜனங்களையும் உன்னிடமிருந்து துண்டிப்பேன்! நான் எனது வாளை அதன் உறையிலிருந்து உருவி தெற்கிலிருந்து வடக்கு வரையுள்ள அனைத்து ஜனங்களுக்கும் எதிராகப் பயன்படுத்துவேன். ௫ பிறகு நானே கர்த்தர் என்பதை எல்லா ஜனங்களும் அறிந்துகொள்வார்கள். நானே எனது வாளை உறையிலிருந்து உருவியிருக்கிறேன் என்பதையும் அறிந்துகொள்வார்கள். எனது வாள் தன் வேலையை முடிக்கும்வரை தன் உறைக்குள் திரும்பப் போகாது.’ ”
௬ தேவன் என்னிடம் சொன்னார், “மனுபுத்திரனே, துக்கமான மனிதனைப்போன்று உடைந்த உள்ளத்துடன் துக்க ஒலிகளை எழுப்பு. இத்துயர ஒலிகளை ஜனங்களுக்கு முன்னால் எழுப்பு. ௭ பிறகு அவர்கள் உன்னை ‘ஏன் இத்தகைய துக்க ஒலிகளை எழுப்புகிறாய்’ எனக் கேட்பார்கள். பிறகு நீ, ‘துக்கச்செய்தி வரப்போகிறது, ஒவ்வொரு இதயமும் பயத்தால் உருகப்போகிறது, எல்லா கைகளும் பலவீனமடையப் போகிறது. எல்லா ஆவியும் சோர்ந்துபோகும். எல்லா முழங்கால்களும் தண்ணீரைப்போன்று ஆகும்’ என்று சொல்லவேண்டும். பார், கெட்ட செய்தி வந்துகொண்டிருக்கிறது. இவை எல்லாம் நிகழும்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்.
வாள் தயாராயிருக்கிறது
௮ கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: ௯ “மனுபுத்திரனே, எனக்காக ஜனங்களிடம் பேசு. இவற்றைக் கூறு, ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்:
 
“ ‘பார், ஒரு வாள், கூர்மையான வாள்,
அந்த வாள் தீட்டப்பட்டிருக்கிறது.
௧௦ வாள் கொல்வதற்காகக் கூர்மையாக்கப்பட்டிருக்கிறது.
இது மின்னலைப்போன்று பளிச்சிட கூர்மையாக்கப்பட்டிருக்கிறது.
என் மகனே, நான் உன்னைத் தண்டிக்க வரும் பிரம்பிடமிருந்து ஓடிவிட்டாய்.
அம்மரத்தடியால் தண்டிக்கப்படுவதற்கு நீ மறுக்கிறாய்.
௧௧ எனவே, வாள் கூர்மையாக்கப்பட்டிருக்கிறது.
இப்போது இதனைப் பயன்படுத்த முடியும்.
வாள் கூர்மையாகவும் பளபளப்பாகவும் ஆக்கப்பட்டிருக்கிறது.
இப்போது இது கொலையாளியின் கையில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
 
௧௨ “ ‘கதறியழு, கத்து, மனுபுத்திரனே! ஏனென்றால், இந்த வாள் எனது ஜனங்களுக்கும் இஸ்ரவேலை ஆள்வோர்களுக்கும் எதிராகப் பயன்படுத்தப்படும்! அந்த ஆள்வோர்கள் போரை விரும்பினார்கள். எனவே, வாள் வரும்போது அவர்கள் எனது ஜனங்களோடு இருப்பார்கள்! எனவே உனது தொடையிலே அடித்துக்கொண்டு, உன் துக்கத்தைக் காட்ட ஒலி எழுப்பு! ௧௩ எனென்றால், இது ஒரு சோதனை அன்று! மரத்தடியால் தண்டிக்கப்பட நீ மறுத்தாய் எனவே, நான் உன்னை வேறு எதனால் தண்டிக்க முடியும்? ஆம் வாளால்தான்’ ” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.
 
௧௪ தேவன் சொன்னார்: “மனுபுத்திரனே, உன் கைகளைத் தட்டு.
எனக்காக ஜனங்களிடம் பேசு.
இந்த வாள் கீழே இரண்டு முறை வரட்டும்! மூன்று முறை வரட்டும்.
இந்த வாள் ஜனங்களைக் கொல்வதற்குரியது!
இந்த வாள் பெருங் கொலைக்குரியது.
இந்த வாள் ஜனங்களுக்குள் ஊடுருவுமாறு செருகப்பட்டிருக்கிறது.
௧௫ அவர்களின் இதயங்கள் அச்சத்தால் உருகும்.
மிகுதியான ஜனங்கள் கீழே விழுவார்கள்.
நகர வாசல்களில் இந்த வாள் பலரைக் கொல்லும்.
ஆம் இந்த வாள் மின்னலைப்போன்று பளிச்சிடும்.
இது ஜனங்களைக் கொல்லத் தீட்டப்பட்டிருக்கிறது!
௧௬ வாளே, கூர்மையாக இரு!
வலது பக்கத்தை வெட்டு.
நேராக மேலே வெட்டு.
இடது பக்கத்தை வெட்டு.
உனது முனை தேர்ந்தெடுத்த இடங்களில் எல்லாம் போ!
 
௧௭ “பிறகு நானும் எனது கைகளைத் தட்டுவேன்.
என் கோபத்தைக் காட்டுவதை நிறுத்துவேன்.
கர்த்தராகிய நான் பேசினேன்!”
Jerusalem Punished
௧௮ கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: ௧௯ “மனுபுத்திரனே, பாபிலோனிய அரசனின் வாள் இஸ்ரவேலுக்கு வரத்தக்கதாக இரண்டு பாதைகளை வரைந்துக்கொள். இரண்டு சாலைகளும் ஒரே தேசத்திலிருந்து (பாபிலோன்) வர வேண்டும். சாலையின் ஆரம்பத்தில் ஒரு குறிப்பை எழுது. ௨௦ அடையாளத்தைப் பயன்படுத்தி எந்த வழியில் வாள் வருமென்று காட்டு. ஒருவழி அம்மோனியரின் நகரமாகிய ரப்பாவுக்குக் கொண்டுபோகும். இன்னொரு வழி யூதாவில் இருக்கிற பாதுகாக்கப்பட்ட நகரம் எருசலேமிற்கு கொண்டுபோகும்! ௨௧ பாபிலோனிய அரசன் தாக்குவதற்காகத் தான் போக விரும்பும் வழியைத் திட்டமிட்டிருக்கிறான் என்பதை இது காட்டும். பாபிலோன் அரசன் இரு வழிகளும் பிரிகிற இடத்திற்கு வந்திருக்கிறான். பாபிலோன் அரசன் எதிர்காலத்தை அறிய மந்திர அடையாளங்களைப் பயன்படுத்தியிருக்கிறான். அவன் சில அம்புகளை ஆட்டினான். அவன் குடும்ப விக்கிரகங்களிடம் கேள்விகள் கேட்டான். அவன் தான் கொன்ற விலங்கின் ஈரலைப் பார்த்தான்.
௨௨ “அடையாளமானது வலது பக்கமாக எருசலேமிற்குப் போகும் வழியில் போகச் சொல்லும்! அவன் வாசலை இடிக்கும் எந்திரங்களைக் கொண்டுவர திட்டமிடுகிறான். அவன் கட்டளை இடுவான். அவனது வீரர்கள் கொல்லத் தொடங்குவார்கள். அவர்கள் போர் ஆரவாரத்தைச் செய்வார்கள். பிறகு அவர்கள் நகரத்தைச் சுற்றி சுவரைக் கட்டுவார்கள், மணசாலைகளை அமைப்பார்கள். நகரத்தைத் தாக்க அவர்கள் மரக்கோபுரங்களைக் கட்டுவார்கள். ௨௩ அச்செயல்களை வெறும் பயனற்ற மந்திர வித்தைகளாக இஸ்ரவேல் ஜனங்கள் கருதினார்கள். அவர்கள் தங்களுக்குள் விசுவாசப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர். ஆனால் கர்த்தர் அவர்களது பாவங்களை நினைப்பார்! பிறகு இஸ்ரவேலர்கள் சிறை பிடிக்கப்படுவார்கள்.”
௨௪ எனது கர்த்தராகிய ஆண்டவர், இதனைக் கூறுகிறார்: “நீ பல பாவங்களைச் செய்திருக்கிறாய். உன் பாவங்கள் வெளிப்படையாகத் தெரிகின்றன. நீ குற்றவாளி என்பதை அவை எனக்கு நினைப்பூட்டுகின்றன. எனவே எதிரி தன் கையில் உன்னைப் பிடித்துக்கொள்வான். ௨௫ இஸ்ரவேலின் தீய தலைவனான நீ கொல்லப்படுவாய். உன் தண்டனைக் காலம் வந்திருக்கிறது. இங்கே முடிவு இருக்கிறது!”
௨௬ எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “உன் தலைப்பாகையை எடு! உன் கிரீடத்தை எடுத்துவிடு. காலம் மாறி இருக்கிறது. முக்கியமான தலைவர்கள் தாழ்த்தப்படுவார்கள். முக்கியமற்றவர்கள் தலைவர்கள் ஆவார்கள். ௨௭ நான் அந்த நகரத்தை முழுமையாக அழிப்பேன்! ஆனால் சரியான மனிதன் புதிய அரசன் ஆகும்வரை இது நிகழாது. பிறகு நான் அவனை (பாபிலோன் அரசனை) இந்நகரத்தை வைத்துக் கொள்ளவிடுவேன்.”
அம்மோனுக்கு எதிரான தீர்க்கதரிசனம்
௨௮ தேவன் சொன்னார்: “மனுபுத்திரனே, எனக்காக ஜனங்களிடம் கூறு, இவற்றைச் சொல், ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் அம்மோன் ஜனங்களிடமும் அவர்களின் அவமானத்திற்குரிய பொய்த் தேவனிடமும் இவற்றைச் சொல்கிறார்:
 
“ ‘பார், ஒரு வாள்!
வாள் உறையிலிருந்து வெளியே உள்ளது.
வாள் கூர்மையாக்கப்பட்டிருக்கிறது!
வாள் கொலை செய்யத் தயாராக இருக்கிறது.
இது மின்னலைப் போன்று ஒளிவிட கூர்மையாக்கப்பட்டுள்ளது!
 
௨௯ “ ‘உங்கள் தரிசனங்கள் பயனற்றவை,
உங்கள் மந்திரம் உங்களுக்கு உதவாது. இது பொய்களின் கொத்து மட்டுமே.
இவ்வாள் இப்பொழுது தீய மனிதர்களின் தொண்டையில் உள்ளது.
அவர்கள் மரித்த உடல்களாக விரைவில் ஆவார்கள்.
அவர்களின் நேரம் வந்திருக்கிறது.
அவர்களின் தீமை முடிவடையும் நேரம் வந்திருக்கிறது.
பாபிலோனுக்கு எதிரான தீர்க்கதரிசனம்
௩௦ “ ‘உனது வாளை (பாபிலோன்) உறையிலே போடு, பாபிலோனே, நீ எந்த இடத்தில் உருவாக்கப்பட்டாயோ, எந்த இடத்தில் பிறந்தாயோ அங்கே நான் உன்னை நியாயந்தீர்ப்பேன். ௩௧ எனது கோபத்தை நான் உனக்கு எதிராகக் கொட்டுவேன். எனது கோபம் உன்னை ஒரு சூடான காற்றைப்போன்று அழிக்கும். நான் உன்னைத் தீய மனிதர்களிடம் ஒப்படைப்பேன். அவர்கள் ஜனங்களைக் கொல்வதில் திறமை உடையவர்கள். ௩௨ நீங்கள் நெருப்புக்கான எண்ணெயைப் போன்றவர்கள். உங்கள் இரத்தம் பூமியின் ஆழம்வரை பாயும். ஜனங்கள் உன்னை மீண்டும் நினைக்கமாட்டார்கள். கர்த்தராகிய நான் பேசினேன்!’ ”