௨௩
௧ கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: ௨ “மனுபுத்திரனே, சமாரியா மற்றும் எருசலேம் பற்றிய இந்தக் கதையைக் கேள். இரண்டு சகோதரிகள் இருந்தனர். அவர்கள் ஒரே தாயின் மகள்கள். ௩ அவர்கள் இளமையாக இருக்கும்போதே எகிப்தில் வேசிகள் ஆனார்கள், எகிப்தில் அவர்கள் முதலில் வேசித்தனம் செய்தனர். ஆண்கள் தம் மார்புகளைத் தொடவும் வருடவும் அனுமதித்தனர். ௪ மூத்தவளின் பெயர் அகோலாள்; அவள் தங்கையின் பெயர் அகோலிபாள். அந்தச் சகோதரிகள் எனது மனைவிகள் ஆனார்கள். எங்களுக்குப் பிள்ளைகள் இருந்தனர். (அகோலாள் உண்மையில் சமாரியா. அகோலிபாள் உண்மையில் எருசலேம்).
௫ “பிறகு அகோலாள் எனக்கு நம்பிக்கையற்றவள் ஆனாள். அவள் வேசியைப்போன்று வாழத் தொடங்கினாள். அவள் தனது நேசர்களை விரும்பத் தொடங்கினாள். அவள் அசீரிய படைவீரர்களை ௬ அவர்களது நீல வண்ணச் சீருடையில் பார்த்தாள். அவர்கள் குதிரைமேல் சவாரி செய்கிற விரும்பத்தக்க இளம் வீரர்கள். அவர்கள் தலைவர்களாகவும் அதிகாரிகளாகவும் இருந்தனர். ௭ அகோலாள் அவர்கள் அனைவருக்கும் தன்னையே கொடுத்தாள். அவர்கள் அனைவரும் அசீரியப் படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள். அவள் அவர்கள் அனைவரையும் விரும்பினாள். அவள் அவர்களது தீட்டான சிலைகளோடு சேர்ந்து தீட்டானாள். ௮ இதோடுகூட, அவள் எகிப்து மீதுகொண்ட நேசம் மோகத்தையும் நிறுத்தவில்லை. அவள் இளமையாக இருந்தபோது எகிப்து அவளோடு நேசம் செய்தது. அவளது இளம் மார்பகங்களைத் தொட்ட முதல் நேசன் எகிப்துதான். எகிப்து தனது உண்மையற்ற நேசத்தை அவள் மீது ஊற்றியது. ௯ எனவே நான் அவளை நேசர்கள் வைத்துக்கொள்ளும்படி விட்டுவிட்டேன். அவள் அசீரியாவை விரும்பினாள். எனவே, நான் அவளை அவர்களுக்குக் கொடுத்தேன். ௧௦ அவர்கள் அவளைக் கற்பழித்தனர். அவளது குழந்தைகளை எடுத்தனர். அவர்கள் அவளைக் கடுமையாகத் தண்டித்தனர். அவளை வாளால் கொன்றனர். பெண்கள் இன்றும் அவளைப்பற்றிப் பேசுகிறார்கள்.
௧௧ “அவளது இளைய சகோதரி அகோலிபாள் இவை எல்லாம் நடப்பதைப் பார்த்தாள். ஆனாலும் அவள் தன் அக்காவைவிட மிகுதியாகப் பாவங்களைச் செய்தாள்! அவள் அகோலாளைவிட மிகவும் நம்பிக்கையற்றவள் ஆனாள், ௧௨ அவள் அசீரியத் தலைவர்களையும், அதிகாரிகளையும் விரும்பினாள். அவள் நீலவண்ணச் சீருடையில் குதிரையில் சவாரி செய்துவரும் இளம் வீரர்களை விரும்பினாள். அவர்கள் அனைவரும் விரும்பத்தக்க இளம் ஆண்கள். ௧௩ அவர்கள் இருவரும் அதே தவறால் தம் வாழ்வை தீட்டுப்படுத்திக்கொண்டதை நான் பார்த்தேன்.
௧௪ “அகோலிபாள் தன் சோரத்தைத் தொடர்ந்தாள். பாபிலோனில், சுவரில் ஆண்கள் உருவம் செதுக்கப்பட்டிருப்பதைப் பார்த்தாள். அவை சிவப்புச் சீருடை அணிந்த கல்தேயரின் உருவங்கள். ௧௫ அவர்கள் தம் இடுப்பைச்சுற்றி கச்சை அணிந்திருந்தனர். தலையில் நீண்ட தலைப் பாகை அணிந்தனர். அவர்கள் அனைவரும் தேரோட்டிகளைப் போன்று காட்சி தந்தனர். அவர்கள் அனைவரும் பாபிலோனில் பிறந்தவர்களின் சாயலில் இருந்தனர். ௧௬ அகோலிபாள் அவர்களை விரும்பினாள். அதனால் அவள் தூதர்களை கல்தேயாவுக்கு அவர்களிடம் அனுப்பினாள். ௧௭ எனவே பாபிலோனியர்கள் அவளது நேசம் படுக்கைக்கு வந்து அவளோடு பாலின உறவுகொண்டனர். அவர்கள் அவளைப் பயன்படுத்தி மிகவும் தீட்டுப்படுத்தியதினால் அவள் அவர்கள் மேல் வெறுப்படைந்தாள்!
௧௮ “அகோலிபாள் இவ்வாறு என்னிடம் விசுவாசமற்றவளாக இருந்ததை யாவரும் காணும்படிச் செய்தாள். பலர் அவளது நிர்வாணத்தை அனுபவிக்கும்படி அனுமதித்தாள். நான் அவளது அக்காளோடு வெறுப்படைந்ததுபோல அவளோடும் வெறுப்படைந்தேன். ௧௯ மீண்டும் மீண்டும் அகோலிபாள் எனக்குத் துரோகம் செய்தாள். பிறகு அவள் தான் இளம்பெண்ணாக எகிப்தில் இருந்தபொழுது நடந்த வேசித்தனத்தை நினைவுபடுத்திக்கொண்டாள். ௨௦ கழுதைக் குறிகள் போன்ற தன் நேசர்களின் ஆண் குறிகள் மீதும், குதிரைகளினுடையதைப் போன்ற தன் நேசர்களின் விந்துப் பெருக்கின் மீதும் தனக்கிருந்த ஆசையை அவள் நினைத்துக் கொண்டாள்.
௨௧ “அகோலிபாளே, நீ உன் இளமையைப் பற்றி கனவு கண்டுகொண்டிருக்கிறாய். அக்காலத்தில் உன் நேசர்கள் உன் மார்பகங்களைத் தொட்டு வருடினார்கள். ௨௨ எனவே, அகோலிபாளே, எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: ‘நீ உன் நேசர்கள்மேல் வெறுப்படைந்தாய், ஆனால் நான் இங்கு உன் நேசர்களைக் கொண்டுவருவேன். அவர்கள் உன்னை முற்றுகையிடுவார்கள். ௨௩ நான் பாபிலோனில் உள்ள அனைத்து ஆண்களையும் குறிப்பாகக் கல்தேயர்களையும் அழைப்பேன். நான் பேகோடு, சோவா, கோவா ஆகிய தேசங்களில் உள்ளவர்களையும் அழைப்பேன். நான் அசீரியாவில் உள்ள ஆண்களையும் அழைப்பேன். நான் அனைத்துத் தலைவர்களையும் அதிகாரிகளையும் அழைப்பேன். அவர்கள் எல்லோரும் குதிரை மீது சவாரிசெய்யும் விரும்பத்தக்க இளம் ஆண்கள், அதிகாரிகள், சேனாதிபதிகள், மேலும் முக்கிய நபர்களாகவும் இருந்தனர். ௨௪ அந்த ஆண்களின் கூட்டம் உன்னிடம் வரும். அவர்கள் தமது இரதங்களிலும் குதிரைகளிலும் ஏறி வருவார்கள். அவர்கள் எண்ணிக்கையில் மிகுதியாக இருப்பார்கள். அவர்கள் தமது ஈட்டிகள், கேடயங்கள், தலைக்கவசங்கள் ஆகியவற்றை அணிந்திருப்பார்கள். அவர்கள் உன்னைச் சுற்றி நிற்பார்கள். நான் அவர்களிடம் நீ எனக்குச் செய்திருந்ததைச் சொல்வேன். அவர்கள் தம் சொந்த முறையிலேயே உன்னைத் தண்டிப்பார்கள். ௨௫ நான் எவ்வளவு பொறாமையுள்ளவன் என்பதை உனக்குக் காட்டுவேன். அவர்கள் மிகவும் கோபம்கொண்டு உன்னைத் துன்புறுத்துவார்கள். அவர்கள் உனது மூக்கையும் காதுகளையும் வெட்டுவார்கள். அவர்கள் வாளைப் பயன்படுத்தி உன்னைக் கொல்லுவார்கள். பிறகு உனது பிள்ளைகளை எடுத்துக்கொள்வார்கள். பிறகு விடுபட்டுள்ள உனக்குரியவற்றை எரிப்பார்கள். ௨௬ அவர்கள் உனக்குரிய மெல்லிய ஆடைகளையும் நகைகளையும் எடுத்துக்கொள்வார்கள். ௨௭ நான் உனது எகிப்தோடுள்ள வேசித்தனம் பற்றிய கனவை நிறுத்துவேன். அவற்றை நீ மீண்டும் தேடமாட்டாய். அவர்களை மீண்டும் நீ நினைக்கமாட்டாய்!’ ”
௨௮ எனது கார்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “நீ வெறுக்கிற ஆண்களிடம் நான் உன்னைக் கொடுக்கிறேன். நீ அருவருப்படைந்த ஆண்களிடம் நான் உன்னைக் கொடுக்கிறேன். ௨௯ அவர்கள் உன்னை எவ்வளவு தூரம் வெறுக்கிறார்கள் என்பதைக் காட்டுவார்கள். அவர்கள் உன் உழைப்பின் பலனை எல்லாம் எடுத்துக் கொள்வார்கள். அவர்கள் உன்னை வெறுமையாகவும் நிர்வாணமாகவும் விட்டுவிடுவார்கள். ஜனங்கள் உன் பாவங்களைத் தெளிவாகக் காண்பார்கள். அவர்கள், நீ வேசியைப்போன்று நடந்துகொண்டதையும் கெட்ட கனவுகள் கண்டதையும் காண்பார்கள். ௩௦ நீ என்னை விட்டுவிட்டு மற்ற நாடுகளைத் துரத்திக்கொண்டு போனபோது அப்பாவங்களைச் செய்தாய். அவர்களது அசுத்த விக்கிரகங்களை தொழுதுகொள்ளத் தொடங்கும்போது அப்பாவங்களைச் செய்தாய். அவற்றினால் நீ உன்னையே தீட்டுப்படுத்திக்கொண்டாய். ௩௧ நீ உன் அக்காவைப் பின்பற்றி அவளைப் போன்று வாழ்ந்தாய். நீயே அவளுடைய விஷக் கோப்பையை எடுத்து உனது கைகளில் பிடித்துக்கொண்டாய். உனது தண்டனைக்கு நீயே காரணம் ஆனாய்.” ௩௨ எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்:
 
“நீ உன் சகோதரியின் விஷக் கோப்பையை குடிப்பாய்.
இது உயரமும் அகலமும்கொண்ட விஷக் கோப்பை.
அக்கோப்பையில் மிகுதியான விஷம் (தண்டனை) உள்ளது.
ஜனங்கள் உன்னைப் பார்த்துச் சிரித்துக் கேலிசெய்வார்கள்.
௩௩ நீ ஒரு குடிகாரனைப்போன்று தடுமாறுவாய்.
நீ மிகவும் சஞ்சலம் அடைவாய்.
அது அழிவும் பாழ்க்கடிப்பும் உள்ள கோப்பை.
இது உன் சகோதரி குடித்த கோப்பையைப் (தண்டனை) போன்றது.
௩௪ அக்கோப்பையிலுள்ள விஷத்தை நீ குடிப்பாய்.
அதிலுள்ள கடைசி சொட்டையும் நீ குடிப்பாய்.
நீ அந்தக் கோப்பையை எறிந்து துண்டு துண்டாக்குவாய்.
நீ வேதனையினால் உன் மார்பகங்களைக் கிழிப்பாய்.
இவை நிகழும், ஏனென்றால், நானே ஆண்டவரும் கர்த்தருமாய் இருக்கிறேன்.
நான் இவற்றைக் கூறினேன்.
 
௩௫ “எனவே எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்: ‘எருசலேமே, என்னை மறந்து விட்டாய். நீ என்னை தூர எறிந்துவிட்டு என்னை விட்டுப் போய்விட்டாய். எனவே இப்போது என்னை விட்டு விலகியதற்காக நீ துன்பப்படவேண்டும். வேசியைப்போன்று வாழ்கிறாய். உனது கெட்ட கனவுகளுக்காகவும் உன் வேசித்தனங்களுக்காகவும் நீ துன்பப்பட வேண்டும்.’ ”
அகோலாள், அகோலிபாள் ஆகியோருக்கு எதிரான நியாயத்தீர்ப்பு
௩௬ எனது கர்த்தராகிய ஆண்டவர் என்னிடம் சொன்னார்: “மனுபுத்திரனே, அகோலாவையும் அகோலிபாளையும் நியாயம்தீர்க்கப்போகிறாயா? அவர்கள் செய்திருக்கிற அருவருப்பான செயல்களைப்பற்றி அவர்களிடம் கூறு, ௩௭ அவர்கள் விபச்சாரமாகிய பாவத்தைச் செய்தனர். அவர்கள் கொலைக் குற்றவாளிகள். அவர்கள் வேசிகளைப்போன்று நடந்துகொண்டனர். அவர்கள் அசுத்த விக்கிரகங்களுக்காக என்னைவிட்டுவிட்டனர். அவர்கள் என் மூலம் குழந்தைகளைப் பெற்றனர். ஆனால் அவர்களைக் கட்டாயப்படுத்தி தீக்குள்ளாக்கி அந்த அசுத்த விக்கிரகங்களுக்கு போஜனப்பலியாகக் கொடுத்தனர். ௩௮ மேலும் அவர்கள் என்னுடைய ஆலயத்தைத் தீட்டுப்படுத்தி என் சிறப்பான ஓய்வு நாட்களை முக்கியமற்றதாக நடத்தினார்கள். ௩௯ அவர்கள் தம் விக்கிரகங்களுக்காகக் குழந்தைகளைக் கொன்றார்கள். அவர்கள் எனது பரிசுத்தமான இடத்திற்குச் சென்று அவற்றையும் அருவருப்பானதாக ஆக்கினார்கள்! அவர்கள் இதனை என் ஆலயத்திற்குள் செய்தார்கள்!
௪௦ “அவர்கள் தொலைதூர நாடுகளிலிருந்து ஆண்களை அழைக்க அனுப்பியிருந்தனர். நீ இம்மனிதர்களிடம் தூதுவனை அனுப்பினாய். அம்மனிதர்கள் உன்னைப் பார்க்க வந்தனர். அவர்களுக்காக நீ குளித்தாய். கண்ணுக்கு மை தீட்டினாய். நகைகளை அணிந்துகொண்டாய். ௪௧ நீ அழகான படுக்கையில் அமர்ந்து அதனருகில் மேசையைப்போட்டாய். எனது வாசனைப்பொருட்களையும் எனது எண்ணெயையும் மேசைமேல் வைத்தாய்.
௪௨ “எருசலேமில் உள்ள சத்தம் விருந்துண்ணும் ஒரு கும்பலின் இரைச்சலைப்போன்று கேட்டது. பல மனிதர்கள் விருந்துக்கு வந்தனர். அவர்கள் வனாந்தரத்திலிருந்து வந்ததுபோன்று ஏற்கனவே குடித்திருந்தனர். அவர்கள் அப்பெண்களுக்கு கைவளைகளையும் கிரீடங்களையும் கொடுத்தனர். ௪௩ பிறகு நான் விபச்சாரத்தால் களைத்துப் பழுதான ஒரு பெண்ணிடம் பேசினேன். நான் அவளிடம், ‘அவர்கள் உன்னோடும் நீ அவர்களோடும் தொடர்ந்து பாலின உறவு வைத்துக்கொள்வீர்களா?’ என்று கேட்டேன். ௪௪ ஆனால் அவர்கள் வேசிகளிடம் போவதுபோன்று அவளோடு போய்க்கொண்டிருந்தார்கள். ஆம், அவர்கள் மீண்டும் மீண்டும் அந்த முறைகேடான பெண்களான அகோலாளிடமும் அகோலிபாளிடமும் போனார்கள்.
௪௫ “ஆனால் நல்லவர்கள் அவர்களைக் குற்றவாளியாக நியாயந்தீர்ப்பார்கள். அவர்கள் அப்பெண்களை அவர்களது விபச்சாரம் மற்றும் கொலை பாவங்களுக்காக நியாயந்தீர்ப்பார்கள். ஏனென்றால், அவர்கள் அகோலாளிடமும் அகோலிபாளிடமும் விபச்சாரப் பாவம் செய்தனர். அவர்களால் கொல்லப்பட்டவர்களின் இரத்தம் அவர்களது கையில் இன்னும் இருக்கிறது.”
௪௬ எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்: “ஜனங்களை ஒன்று சேருங்கள். அந்த ஜனங்கள் அகோலாவையும் அகோலிபாளையும் தண்டிக்க அனுமதியுங்கள். அந்த ஜனங்கள் குழு இரண்டு பெண்களையும் தண்டித்துக் கேலி பேசும். ௪௭ பிறகு அந்த ஜனங்கள் குழு அவர்கள் மீது கல்லை வீசிக் கொல்லும், பிறகு அவர்கள் தம் வாள்களால் அப்பெண்களைத் துண்டுகளாக்குவார்கள். அவர்கள் அப்பெண்களின் பிள்ளைகளையும் கொல்வார்கள். அவர்களின் வீடுகளையும் எரிப்பார்கள். ௪௮ இப்படியாக, நான் இந்நாட்டில் உள்ள அவமானத்தைப் போக்குவேன். நீங்கள் செய்தது போன்ற அவமானகரமான செய்கைகளைச் செய்யவேண்டாம் என்று எல்லாப் பெண்களும் எச்சரிக்கப்படுவார்கள். ௪௯ நீங்கள் செய்த முறைகேடான செயல்களுக்காக அவர்கள் உன்னைத் தண்டிப்பார்கள். நீங்கள் உங்கள் அசுத்த விக்கிரகங்களைத் தொழுதுகொண்டதற்காக தண்டிக்கப்படுவீர்கள். பிறகு நானே கர்த்தரும் ஆண்டவருமாயிருக்கிறேன் என்றும் நீங்கள் அறிவீர்கள்.”