௪௧
ஆலயத்தின் பரிசுத்த இடம்
௧ பின்பு அவன் என்னை ஒரு அறைக்கு (பரிசுத்தமான இடத்திற்கு) அழைத்துக் கொண்டு போனான். அவன் அறையின் இருபுறமுள்ள சுவர்களை அளந்தான். அவை 6 முழம் (10’6”) கனமுடையதாக ஒவ்வொரு பக்கமும் இருந்தன. ௨ கதவானது 10 முழம் (17’6”) அகலமுடையதாக இருந்தது. வாசல் நடையின் பக்கங்கள் ஒவ்வொரு புறத்திலும் 5 முழம் (8’9”) உடையன. அம்மனிதன் அந்த அறையை அளந்தான். அது 40 முழம் (70’) நீளமும் 20 முழம் (35’) அகலமும் கொண்டது.
ஆலயத்தின் மகா பரிசுத்த இடம்
௩ பிறகு, அவன் கடைசி அறைக்குள் சென்றான். அவன் வாசலின் இருபக்கச் சுவர்களையும் அளந்தான். ஒவ்வொரு பக்கச்சுவரும் 2 முழம் கனமாகவும் 7 முழம் அகலமாகவும் இருந்தது. வாசல் வழியானது 6 முழம் அகலமுடையதாயிருந்தது. ௪ பிறகு, அம்மனிதன் அறையின் நீளத்தை அளந்தான். அது 20 முழம் (35’) நீளமும் 20 முழம் (35’) அகலமுமாக ஆலயத்தின் முன்புறத்தில் அளந்தான். அம்மனிதன் என்னிடம், “இது மிகவும் பரிசுத்தமான இடம்” என்றான்.
ஆலயத்தைச் சுற்றியுள்ள மற்ற அறைகள்
௫ பிறகு அம்மனிதன் ஆலயத்தின் சுவரை அளந்தான். அது 6 முழம் கனமாகயிருந்தது. ஆலயத்தைச் சுற்றிலும் பக்கத்து அறைகள் இருந்தன. இவை 4 முழம் (7’) அகலமுடையதாக இருந்தன. ௬ இந்த பக்கத்து அறைகள் மூன்று வேறுபட்ட தளங்களில் இருந்தன. அவை ஒன்றின் மேல் ஒன்றாக இருந்தன. ஒவ்வொரு தளத்திலும் 30 அறைகள் இருந்தன. இந்த பக்கத்து அறைகள் சுற்றிலும் உள்ள சுவரால் தாங்கப்பட்டிருந்தன. எனவே ஆலயச் சுவர் தானாக அறைகளைத் தாங்கவில்லை. ௭ ஆலயத்தைச் சுற்றிலும் பக்கத்து அறைகளின் ஒவ்வொரு தளமும் கீழே உள்ள தளத்தைவிட அகலம் அதிகமாயிருந்தது. ஆலயத்தைச் சுற்றியுள்ள உயர மேடையானது ஒவ்வொரு தளத்திலும் ஆலயத்தைச் சுற்றிப் பரந்திருந்தது, எனவே, மேல் தளங்களின் அறைகள் அகலமாயிருந்தன. ஆதலால் கீழ்த்தளத்திலிருந்து நடுத்தளம் வழியாய் மேல் தளத்திற்கு ஏறும் வழி இருந்தது.
௮ ஆலயத்தைச் சுற்றி உயர்த்தப்பட்ட அடிப்பாகம் இருப்பதைப் பார்த்தேன். அது பக்கத்து அறைகளுக்கு அஸ்திபாரமாக இருந்தது. அது ஒரு முழுக் கோலின் உயரம் கொண்டதாயிருந்தது. ௯ பக்கத்து அறைகளின் வெளிச் சுவரின் அகலம் 5 முழமாக (8’9”) இருந்தது. ஆலயத்தின் பக்கத்து அறைகளுக்கும் ஆசாரியரின் அறைகளுக்கும் இடையே ஒரு திறந்தவெளி இருந்தது. ௧௦ அது ஆலயத்தைச் சுற்றிலும் 20 முழம் (35’) அகலமாக இருந்தது. ௧௧ பக்கத்து அறைகளின் கதவுகள், உயர்த்தப்பட்ட அடிப்பாகத்தை நோக்கித் திறந்திருந்தன. ஒரு வாசல்நடை வடகேயும் ஒரு வாசல் நடை தெற்கேயும் இருந்தன. உயர்த்தப்பட்ட அடிப்பாகத்தின் அகலம் 5 முழமாய் (8’9”) சுற்றிலும் இருந்தது.
௧௨ தடைசெய்யப்பட்ட ஆலய முற்றத்தின் முன்பிருந்த மேற்கு திசையிலுள்ள கட்டிடம் 70 முழம் (122’6”) அகலமுடையதாய் இருந்தது, அக்கட்டிடத்தின் சுற்றுச் சுவர்கள் 5 முழம் (8’9”) கனமுடையதாய் இருந்தன. அது 90 முழம் (157’6”) நீளமுடையது. ௧௩ பிறகு அம்மனிதன் ஆலயத்தை அளந்தான். அது 100 முழம் (175’) நீளமுடையது. தடைசெய்யப்பட்ட பரப்பையும், கட்டிடத்தையும், அதன் சுவர்களையும் 100 முழம் (175’) அகலமுடையதாக அளந்தான். ௧௪ ஆலயத்தின் முற்புறமும் கிழக்குக்கு எதிரான தடைச் செய்யப்பட்ட பரப்பும் 100 முழம் (175’) அகலமுடையதாக இருந்தது.
௧௫ அம்மனிதன் தடைசெய்யப்பட்ட பரப்பின் பின்புறமாக அதற்கு எதிரே இருந்த கட்டிடத்தின் நீளத்தையும் அதற்கு இரு புறத்திலும் இருந்த நடை பந்தல்களையும் அளந்தான். அது 100 முழம் (175’) நீளமுடையது.
மகா பரிசுத்த இடமும், பரிசுத்த இடமும், மண்டபமும், உள் அறையை நோக்கியிருந்தன. ௧௬ அவற்றின் சுவர்கள் முழுவதும் மரப்பலகைகளால் மூடப்பட்டிருந்தன. மூன்று பக்கங்களிலும் சுற்றி ஜன்னல்கள் இருந்தன. வாசல்களுக்கு எதிரான நடைப் பந்தல்களும் சுற்றிலும் தரை தொடங்கி ஜன்னல்கள் வரை பலகை அடித்திருந்தது. ஜன்னல்கள் மூடப்பட்டிருந்தன. ௧௭ வாசலின் மேலே தொடங்கி,
ஆலயத்தின் உட்புறமும் வெளிப்புறமும் பலகைகளால் மூடப்பட்டிருந்தன. சுற்றிலும் சுவரின் உட்புறமும் வெளிப்புறமும் ௧௮ கேருபீன்களும் பேரீச்ச மரங்களும் செதுக்கப்பட்டிருந்தன. கேருபீன்களுக்கு இடையில் பேரீச்சமரம் இருந்தது. ஒவ்வொரு கேருபீனுக்கும் இரு முகங்கள் இருந்தன. ௧௯ ஒரு முகம் மனிதமுகமாய் பேரீச்ச மரத்தின் ஒரு பக்கத்தைப் பார்த்தவாறு இருந்தது. இன்னொரு முகம் சிங்க முகமாய் பேரீச்ச மரத்தின் இன்னொரு பக்கத்தைப் பார்த்தவாறு இருந்தது. அவை ஆலயத்தைச் சுற்றிலும் செதுக்கப்பட்டிருந்தன. ௨௦ தரையிலிருந்து வாசலின் மேல்புறம்வரை பரிசுத்த இடத்தின் சுவர்களில் கேருபீன்களும் பேரீச்ச மரங்களும் சித்தரிக்கப்பட்டிருந்தன.
௨௧ பரிசுத்த இடத்தின் இருபக்கத்திலும் இருந்த சுவர்கள் சதுரமானவை. மகாபரிசுத்தமான இடத்துக்கு எதிரில் ஏதோ ஒன்று பலிபீடத்தைப் போலக் காணப்பட்டது. ௨௨ அது மரத்தால் செய்யப்பட்ட பலிபீடத்தைப் போன்றிருந்தது. அது 3 முழம் உயரமும் 2 முழம் நீளமுமாயிருந்தது. அதன் மூலைகள், அடிப்பாகம், பக்கங்கள் எல்லாம் மரத்தால் ஆனவை. அம்மனிதன் என்னிடம், “இதுதான் கர்த்தருக்கு முன்னால் உள்ள மேசை” என்றான்.
௨௩ நடு அறையும் (பரிசுத்தமான இடமும்) மிகப் பரிசுத்தமான இடமும் இரட்டைக் கதவுகளைக் கொண்டவை. ௨௪ வாசல்களுக்கு மடக்குக் கதவுகளாகிய இரட்டைக் கதவுகள் இருந்தன. ஒவ்வொரு வாசலுக்கும் இரண்டு சிறு கதவுகளும் இருந்தன. ௨௫ பரிசுத்த இடத்தின் கதவுகளிலும் கேருபீன்களும் பேரிச்ச மரங்களும் செதுக்கப்பட்டிருந்தன. அவை சுவற்றில் செதுக்கப்பட்டிருந்தவை போன்றிருந்தன. வெளியே மண்டபத்தின் முன்பாக உத்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன. மண்டபத்தின் முன் பாகத்திற்குமேல் ஒரு மரக் கூரையிருந்தது. ௨௬ இருபுறங்களிலும் ஆலயத்தின் சுற்றுக் கட்டுக்களிலும் சட்டங்கள் பொருந்திய ஜன்னல்கள் இருந்தன. சுவர்களிலும் ஆலயத்தைச் சுற்றியுள்ள அறைகளிலும் வரையப்பட்ட பேரீச்ச மரங்களும் இருந்தன.