௨௫
தேவனைத் துதிக்கும் ஒரு பாடல்
௧ கர்த்தாவே, நீர் எனது தேவன்.
நான் உம்மை கனம்பண்ணி, உமது நாமத்தைத் துதிக்கிறேன்.
நீர் அதிசயமானவற்றை செய்திருக்கிறீர்.
நீண்ட காலத்துக்கு முன்னால் நீர் சொன்னவை, அனைத்தும் முழுமையாக உண்மையாகியுள்ளது.
இப்படி இருக்கும் என்று நீர் சொன்ன ஒவ்வொன்றும், சரியாக நீர் சொன்னபடியே ஆயிற்று.
௨ நீர் நகரத்தை அழித்திருக்கிறீர். அந்த நகரமானது பலமான சுவர்களால் பாதுகாக்கப்பட்டது.
ஆனால் இப்போது அது மண்மேடாயிற்று.
அயல்நாட்டு அரண்மனை அழிக்கப்பட்டிருக்கிறது.
அது மீண்டும் கட்டப்படமாட்டாது.
௩ வல்லமை மிக்க தேசங்களிலுள்ள ஜனங்கள் உம்மை மதிப்பார்கள்.
பலமான நகரங்களில் உள்ள வல்லமையுள்ள ஜனங்கள் உமக்குப் பயப்படுவார்கள்.
௪ கர்த்தாவே, நீர் பாதுகாப்புத் தேவைபடுகிற ஏழை ஜனங்களுக்குப் பாதுகாப்பான இடம்.
இந்த ஜனங்களைத் தோற்கடிக்க பல பிரச்சனைகள் தொடங்கும்.
ஆனால் நீர் அவர்களைப் பாதுகாப்பீர்.
கர்த்தாவே, நீர் வெள்ளத்திலிருந்தும், வெப்பத்திலிருந்தும் ஜனங்களைக் காப்பாற்றும் வீடுபோல இருக்கிறீர்.
தொல்லைகள் எல்லாம், பயங்கரமான காற்று மற்றும் மழைபோன்று இருக்கும். மழை சுவரைத் தாக்கி கீழே விழச்செய்யும்.
ஆனால் வீட்டிற்குள் உள்ள ஜனங்கள் பாதிக்கப்படமாட்டார்கள்.
௫ பகைவன் சத்தமிட்டு ஆரவாரத்தை ஏற்படுத்துவான்.
பயங்கர பகைவன் சத்தமிட்டு சவால்விடுவான்.
ஆனால் தேவனாகிய நீர் அவர்களைத் தடுப்பீர்.
கோடை காலத்தில் வனாந்தரத்தில் செடிகள் வாடி தரையில் விழும்.
அடர்த்தியான மேகங்கள் கோடை வெப்பத்தைத் தடுக்கும்.
அதே வழியில், நீர் பயங்கரமான பகைவர்களின் சத்தங்களை நிறுத்துவீர்.
தேவன் அவரது ஊழியர்களுக்கு அமைத்த விருந்து
௬ அந்த நேரத்தில், சர்வ வல்லமையுள்ள கர்த்தர், இந்த மலையில் உள்ள ஜனங்களுக்கு ஒரு விருந்து தருவார். அந்த விருந்தில் சிறந்த உணவும், திராட்சை ரசமும் தரப்படும். மாமிசமானது புதிதாகவும் சிறந்ததாகவும் இருக்கும்.
௭ ஆனால் இப்போது, எல்லா தேசங்களின் மேலும் ஜனங்களின் மேலும் ஒரு முக்காடு கவிழ்ந்திருக்கிறது. அந்த முக்காடு “மரணம்” என்று அழைக்கப்படுகிறது. ௮ ஆனால் மரணமானது எக்காலத்திற்கும் அழிக்கப்படும். கர்த்தராகிய எனது ஆண்டவர், ஒவ்வொரு முகத்திலும் வடியும் கண்ணீரைத் துடைப்பார். கடந்த காலத்தில், அவரது ஜனங்கள் எல்லாரும் துக்கமாயிருந்தார்கள். ஆனால், பூமியிலிருந்து தேவன் அந்தத் துக்கத்தை எடுத்துவிடுவார். இவையெல்லாம் நிகழும். ஏனென்றால், இவ்வாறு நிகழும் என்று கர்த்தர் கூறினார்.
 
௯ அந்த நேரத்தில், ஜனங்கள்,
“இங்கே எங்கள் தேவன் இருக்கிறார்.
அவர், நாங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற ஒருவர்,
நம்மைக் காப்பாற்றுவதற்காக அவர் வந்திருக்கிறார்.
நமது கர்த்தருக்காக நாம் காத்துக்கொண்டிருந்தோம்.
கர்த்தர் நம்மைக் காப்பாற்றும்போது, நாம் கொண்டாடுவோம், மகிழ்ச்சி அடைவோம்”.
௧௦ இந்த மலைமீது கர்த்தருடைய வல்லமை உள்ளது,
மோவாப் தோற்கடிக்கப்படும்.
கர்த்தர் பகைவரை மிதித்து நடந்துசெல்வார்.
இது குப்பைகளில் உள்ள சருகுகள் மீது நடப்பது போலிருக்கும்.
௧௧ கர்த்தர் தமது கரங்களை நீச்சலடிக்கும் ஒருவரைப்போல் விரிப்பார்.
பிறகு கர்த்தர் அவர்களது பெருமைக்குரிய அனைத்தையும் சேகரிப்பார்.
கர்த்தர் அவர்களால் செய்யப்பட்ட அழகான அனைத்தையும் சேகரிப்பார்.
அவர் அவற்றைத் தூர எறிந்துப் போடுவார்.
௧௨ கர்த்தர் ஜனங்களின் உயர்ந்த சுவர்களையும், பாதுகாப்பான இடங்களையும் அழிப்பார்.
கர்த்தர் அவற்றைத் தரையின் புழுதியில் எறிந்துவிடுவார்.