௨௭
௧ அந்தக் காலத்திலேயே, கர்த்தர் லிவியாதான் என்னும் கோணலான பாம்பை நியாயந்தீர்ப்பார்.
கர்த்தர் தனது கடினமும் வல்லமையும் கொண்ட பெரிய வாளை,
லிவியாதான் என்னும் நீண்ட பாம்பைத் தண்டிக்கப் பயன்படுத்துவார்.
கடலில் உள்ள பெரிய பிராணியைக் கர்த்தர் கொல்வார்.
 
௨ அந்தக் காலத்திலே,
ஜனங்கள் நல்ல திராட்சைத் தோட்டத்தைப்பற்றிப் பாடுவார்கள்.
௩ “கர்த்தராகிய நான், அத்தோட்டத்தைக் கவனித்துக்கொள்வேன்.
சரியான காலத்தில் நான் தோட்டத்திற்கு தண்ணீர் ஊற்றுவேன்.
இரவும் பகலும் நான் தோட்டத்தைக் காவல் செய்வேன்.
எவரும் தோட்டத்தை அழிக்க முடியாது.
௪ நான் கோபமாக இல்லை.
ஆனால் போர் இருந்தால், ஒருவர் முள்புதரால் சுவர் எழுப்பினால்,
பிறகு, நான் அதனை நோக்கிப்போய் அதனை எரிப்பேன்.
௫ ஆனால், எவராவது பாதுகாப்புக்காக என்னிடம் வந்தால்,
என்னோடு சமாதானமாயிருக்க விரும்பினால் அவர்களை வரவிடுங்கள்.
அவர்கள் என்னோடு சமாதானம் கொள்ளட்டும்.
௬ ஜனங்கள் என்னிடம் வருவார்கள்.
அந்த ஜனங்கள் யாக்கோபுக்கு உதவிசெய்து அவனை நல்ல வேர்கள் கொண்ட செடியைப்போல் பல முள்ளதாக்குவார்கள்.
அந்த ஜனங்கள், இஸ்ரவேலை பூக்க ஆரம்பிக்கும் செடிபோல் வளரச் செய்வார்கள். பிறகு, செடிகளின் பழங்களைப்போல நாடு குழந்தைகளால் நிறைந்திருக்கும்.”
தேவன் இஸ்ரவேலை அனுப்பிவிடுவார்
௭ எப்படி கர்த்தர் அவரது ஜனங்களைத் தண்டிப்பார்? கடந்த காலத்தில், பகைவர்கள் ஜனங்களைத் தாக்கினார்கள். அதே வழியில் கர்த்தர் அவர்களைத் தாக்குவாரா? கடந்த காலத்தில் நிறைய ஜனங்கள் கொல்லப்பட்டனர். கர்த்தரும் அதே வழியில் பலரைக் கொல்வாரா?
௮ கர்த்தர், இஸ்ரவேலரை வெகுதொலைவிற்கு அனுப்பிவிடுவதன் மூலம் தனது விவாதத்தை முடிக்க விரும்புகிறார். இஸ்ரவேலரிடம் கர்த்தர் கடுமையாகப் பேசுவார். அவரது வார்த்தைகள் சூடான வனாந்திர காற்றைப்போல எரிக்கும்.
௯ யாக்கோபின் குற்றம் எப்படி மன்னிக்கப்படும்? அவனது பாவங்கள் விலக்கப்பட என்ன நிகழும்? (இவை நிகழும்) பலிபீடத்திலுள்ள கற்கள் நொறுக்கப்பட்டு புழுதியில் கிடக்கும். சிலைகளும் பலிபீடங்களும் பொய்த் தெய்வங்களின் தொழுதுகொள்ளுதலுக்கு உரியதாய் இருந்தவைகளும் அழிக்கப்படும்.
௧௦ அந்தக் காலத்திலே, பெரு நகரம் காலியாகும். அது வனாந்தரம்போல் ஆகும். எல்லா ஜனங்களும் செல்வார்கள். அவர்கள் வெளியே ஓடுவார்கள். அந்த நகரமானது திறந்த மேய்ச்சல் நிலம்போல் ஆகும். இளம் கன்றுக்குட்டிகள் அங்கே புல் மேயும். திராட்சைக் கொடிகளிலுள்ள இலைகளைக் கன்றுக்குட்டிகள் உண்ணும்.
௧௧ திராட்சைக் கொடிகள் உலர்ந்துபோகும். அவற்றின் இலைகள் ஒடிந்துபோகும். பெண்கள் அக்கிளைகளை விறகாகப் பயன்படுத்துவார்கள்.
ஜனங்கள் புரிந்துகொள்ள மறுப்பார்கள். எனவே, அவர்களை உருவாக்கிய தேவன் ஆறுதல் செய்யமாட்டார். அவர்களை உண்டாக்கியவர் அவர்களிடம் கருணையோடு இருக்கமாட்டார்.
௧௨ அந்தக் காலத்தில், கர்த்தர் தமது ஜனங்களை மற்ற ஜனங்களிடமிருந்து பிரித்து வைப்பார். அவர் ஐபிராத்து ஆற்றிலிருந்து தொடங்குவார். கர்த்தர் தமது ஜனங்களை ஐபிராத்து நதி முதல் எகிப்து நதிவரை திரட்டுவார்.
இஸ்ரவேல் ஜனங்களாகிய நீங்கள் ஒவ்வொருவராகச் சேர்க்கப்படுவீர்கள். ௧௩ எனது ஜனங்களில் சிலர் இப்பொழுது அசீரியாவில் காணாமல் போயிருக்கிறார்கள். எனது ஜனங்களில் சிலர் எகிப்துக்கு ஓடிப் போயிருக்கிறார்கள். ஆனால் அந்தக் காலத்திலே, ஒரு பெரும் எக்காளம் ஊதப்படும். அப்பொழுது அந்த ஜனங்கள் எல்லோரும் எருசலேமிற்குத் திரும்பி வருவார்கள். அந்த ஜனங்கள் அந்தப் பரிசுத்த மலையின்மேல் கர்த்தருக்கு முன்பு பணிவார்கள்.