௬௪
௧ நீர் வானங்களைக் கிழித்து திறந்து
பூமிக்கு இறங்கி வந்தால், பிறகு எல்லாம் மாறும்.
உமக்கு முன்னால் மலைகள் உருகிப்போகும்.
௨ மலைகள் புதர் எரிவதுபோல எரிந்து வரும்.
தண்ணீர் நெருப்பில் கொதிப்பதுபோல மலைகள் கொதிக்கும்.
பிறகு, உமது பகைவர்கள் உம்மைப் பற்றிக் கற்றுக்கொள்வார்கள்.
அவர்கள் உம்மைப் பார்க்கும்போது அனைத்து நாடுகளும் அச்சத்தால் நடுங்கும்.
௩ ஆனால், நாங்கள் உண்மையில் நீர் இவற்றைச் செய்வதை விரும்பவில்லை.
மலைகள் உமக்கு முன்னால் உருகிப்போகும்.
௪ உமது ஜனங்கள் என்றென்றும் உம்மை உண்மையில் கவனிக்கவில்லை.
உமது ஜனங்கள் நீர் சொன்னதையெல்லாம் என்றென்றும் கேட்கவில்லை.
உம்மைப்போன்ற தேவனை எவரும் காணவில்லை.
வேறு தேவன் இல்லை, நீர் மட்டுமே.
ஜனங்கள் பொறுமையாய் இருந்தால், நீர் அவர்களுக்கு உதவும்படி காத்திருந்தால், பிறகு நீர் அவர்களுக்காகப் பெருஞ் செயலைச் செய்வீர்.
 
௫ நீர் நன்மை செய்வதில் மகிழ்ச்சி அடைகிற ஜனங்களோடு இருக்கிறீர்.
அந்த ஜனங்கள் உமது வாழ்க்கை வழியை நினைவுகொள்கிறார்கள்.
ஆனால் பாரும்! கடந்த காலத்தில் நாங்கள் உமக்கு எதிராகப் பாவம் செய்தோம்.
எனவே நீர் எங்களோடு கோபமுற்றீர்.
இப்போது, நாங்கள் எப்படி காப்பாற்றப்படுவோம்?
௬ நாங்கள் பாவத்தால் அழுக்காகியுள்ளோம்.
எங்களது அனைத்து நன்மைகளும் பழைய அழுக்கு ஆடைபோன்று உள்ளன.
நாங்கள் செத்துப்போன இலைகளைப் போன்றுள்ளோம்.
எங்கள் பாவங்கள் காற்றைப்போல எங்களை அடித்துச் செல்லும்.
௭ யாரும் உம்மைத் தொழுதுகொள்ளவில்லை.
உமது நாமத்தின்மீது நம்பிக்கை வைப்பதில்லை.
உம்மைப் பின்பற்ற நாங்கள் ஊக்கமுள்ளவர்களாக இல்லை.
எனவே நீர் எங்களிடமிருந்து திரும்பிவிட்டீர்.
எங்கள் பாவங்களினிமித்தம்
உமக்கு முன்பு நாங்கள் உதவியற்று இருக்கிறோம்.
௮ ஆனால் கர்த்தாவே! நீர் எங்களது தந்தை.
நாங்கள் களிமண்ணைப் போன்றவர்கள்.
நீர் தான் குயவர்.
எங்கள் அனைவரையும் உமது கைகள் செய்தன.
௯ கர்த்தாவே! எங்களோடு தொடர்ந்து கோபங்கொள்ளவேண்டாம்.
நீர் என்றென்றும் எமது பாவங்களை நினைவுகொள்ளவேண்டாம்.
தயவுசெய்து எங்களைப் பாரும்!
நாங்கள் உமது ஜனங்கள்.
௧௦ உமது பரிசுத்தமான நகரங்கள் காலியாக உள்ளன.
இப்பொழுது, அந்நகரங்கள் வனாந்திரங்களைப் போன்றுள்ளன.
சீயோன் ஒரு வனாந்திரம். எருசலேம் அழிக்கப்படுகிறது.
௧௧ பரிசுத்த ஆலயத்தில் உம்மை எங்கள் முற்பிதாக்கள் தொழுதுகொண்டார்கள்.
அந்த ஆலயம் எங்களுக்கு மிக உயர்வானது.
எங்களது பரிசுத்தமான ஆலயம் நெருப்பால் எரிக்கப்பட்டது.
எங்களுக்கிருந்த நற்செயல்கள் எல்லாம் இப்பொழுது அழிக்கப்பட்டன.
௧௨ இவையனைத்தும் எப்பொழுதும் எங்களிடம் அன்பு காட்டுவதிலிருந்து உம்மை விலக்குமோ?
நீர் தொடர்ந்து எதுவும் பேசாமல் இருப்பீரோ?
நீர் என்றென்றும் எங்களைத் தண்டிப்பீரோ?