௬௫
தேவனைப்பற்றி அனைவரும் கற்றுக்கொள்வார்கள்
௧ கர்த்தர் கூறுகிறார், “என்னிடம் ஆலோசனை கேட்க வராதவர்களுக்கும் நான் உதவினேன். ஜனங்கள் என்னைத் தேடாமல் இருந்தும் கண்டுகொண்டார்கள். எனது பெயரால் அழைக்கப்பட தகுதியற்ற ஜனங்களிடமும் நான் பேசினேன். ‘இதோ நான் இங்கே இருக்கிறேன்’ என்று சொன்னேன்”
௨ “எனக்கு எதிராகத் திரும்பிய ஜனங்களை நான் ஏற்றுக்கொள்ளத் தயாராக நின்றேன். என்னிடம் வருகின்ற ஜனங்களுக்காக நான் காத்திருந்தேன். ஆனால் அவர்கள் தொடர்ந்து நன்மையற்ற வழியில் வாழ்ந்துகொண்டிருந்தனர். அவர்களின் இதயங்கள் விரும்பிய எல்லாவற்றையும் செய்தனர். ௩ அந்த ஜனங்கள் எப்பொழுதும் என் முன்னால் இருந்து என்னைக் கோபமூட்டுகின்றனர். அந்த ஜனங்கள் சிறப்பான தோட்டங்களில் பலி கொடுக்கிறார்கள். நறுமணப் பொருட்களை எரிக்கிறார்கள். ௪ அந்த ஜனங்கள் கல்லறைகளுக்கு இடையில் அமர்கிறார்கள். மரித்த ஜனங்களிடமிருந்து செய்தி வரும் என்று காத்திருக்கின்றனர். அவர்கள் மரித்த உடல்களுக்கு இடையில் வாழ்கிறார்கள். அவர்கள் பன்றி இறைச்சியைத் தின்கிறார்கள். அவர்களின் கத்திகளும் கரண்டிகளும் அழுகிய இறைச்சியால் அசுத்தமாயின. ௫ ஆனால் அந்த ஜனங்கள் மற்றவர்களிடம், ‘என்னருகில் வராதீர்கள். நான் உன்னைச் சுத்தம் செய்யும்வரை என்னைத் தொடாதீர்கள்,’ என்கின்றனர். அந்த ஜனங்கள் என் கண்களில் படியும் புகையைப் போன்றவர்கள். அவர்களின் நெருப்பு எப்பொழுதும் எரிகிறது.”
இஸ்ரவேல் தண்டிக்கப்படவேண்டும்
௬ “பார்! இங்கே, செலுத்தப்பட வேண்டியவற்றுக்கான பத்திரம் உள்ளது. உங்கள் பாவங்களுக்கு நீர் குற்ற உணர்வுகொள்வதாக இந்தப் பத்திரம் காட்டுகிறது. நான், இந்தப் பத்திரத்திற்குரியதைச் செலுத்தும்வரை அமைதியாக இருக்கமாட்டேன். உன்னைத் தண்டிப்பதன் மூலம் இந்தப் பத்திரத்தைச் செலுத்துவேன். ௭ உனது பாவங்களும், உனது முன்னோர்களின் பாவங்களும் ஒன்றுபோல்தான் உள்ளன. உங்கள் முற்பிதாக்கள் மலைகளில் நறுமணப் பொருட்களை எரித்தபோது இந்தப் பாவங்களைச் செய்தனர். அம்மலைகளில் அவர்கள் என்னை அவமானப்படுத்தினர். நான் அவர்களை முதலில் தண்டித்தேன். அவர்களுக்கு ஏற்ற தண்டனையே நான் அவர்களுக்குக் கொடுத்தேன்” கர்த்தர் இதைக் கூறுகிறார்.
௮ கர்த்தர் கூறுகிறார், “ஒரு திராட்சைக் குலையில் இரசம் காணப்படும்போது, ஜனங்கள் இரசத்தைப் பிழிந்தெடுப்பார்கள். ஆனால், அவர்கள் திராட்சையை முழுமையாக அழிப்பதில்லை. அவர்கள் இதைச் செய்கின்றனர். ஏனென்றால், அந்தத் திராட்சைகள் மேலும் பயன்படுத்தப்படும். நான் இதனையே என் ஊழியர்களுக்கும் செய்வேன். நான் அவர்களை முழுமையாக அழிக்கமாட்டேன். ௯ யாக்கோபின் (இஸ்ரவேல்) ஜனங்களில் சிலரைப் பாதுகாப்பேன். யூதாவிலுள்ள சில ஜனங்கள் எனது மலையைப் பெறுவார்கள். அங்கே என் ஊழியர்கள் வாழ்வார்கள். அங்கே வாழும் ஜனங்களை நான் தேர்ந்தெடுப்பேன். ௧௦ பிறகு, சாரோன் சமவெளி ஆடுகளுக்கான மேய்ச்சல் நிலமாகும். ஆகோரின் பள்ளத்தாக்கு மாடுகளுக்கான ஓய்விடமாகும். இவை அனைத்தும் எனது ஜனங்களுக்காக என்னைத் தேடுகிற ஜனங்களுக்கு உரியவையாகும்.
௧௧ “ஆனால் நீங்கள் கர்த்தரைவிட்டு விலகினீர்கள். எனவே, நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள். நீங்கள் எனது பரிசுத்தமான மலையை மறந்துவிட்டீர்கள். நீங்கள் அதிர்ஷ்டத்தைத் தொழுதுகொள்ள ஆரம்பித்தீர்கள். நீங்கள் விதி என்னும் பொய்த் தெய்வத்தின் முன்பு உணவு மற்றும் பான பலிகளை படைத்து, அதைச் சார்ந்து இருக்கிறீர்கள. ௧௨ ஆனால், உங்கள் எதிர்காலத்தை நான் தீர்மானித்துவிட்டேன். நீங்கள் வாளால் கொல்லப்படுவீர்கள் என்று நான் தீர்மானித்தேன். நீங்கள் அனைவரும் கொல்லப்படுவீர்கள். ஏனென்றால், நான் உங்களை அழைத்தேன். ஆனால், எனக்குப் பதில் சொல்ல மறுத்தீர்கள். நான் உங்களோடு பேசினேன். நீங்கள் கவனிக்கவில்லை. நான் தீமை என்று சொன்னதை நீங்கள் செய்தீர்கள். நான் விரும்பாதவற்றையெல்லாம் நீங்கள் செய்ய முடிவு செய்தீர்கள்.”
 
௧௩ எனவே, எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.
“எனது ஊழியர்கள் உண்பார்கள்.
ஆனால் தீயவர்களாகிய நீங்கள் பட்டினியாக இருப்பீர்கள்.
எனது ஊழியர்கள் குடிப்பார்கள்.
ஆனால், தீயவர்களாகிய நீங்கள் தாகமாய் இருப்பீர்கள்.
எனது ஊழியர்கள் மகிழ்வார்கள்.
ஆனால், தீயவர்களாகிய நீங்கள் அவமானம் அடைவீர்கள்.
௧௪ எனது ஊழியர்கள் தம் இதயங்களில் நன்மை கொண்டுள்ளனர்.
எனவே, அவர்கள் மகிழ்வார்கள்.
ஆனால், தீயவர்களாகிய நீங்கள் கதறுவீர்கள்.
ஏனென்றால், உங்கள் இதயங்களில் உள்ள உங்கள் ஆவி உடைக்கப்படும்.
நீங்கள் வருத்தம்கொள்வீர்கள்.
௧௫ எனது ஊழியர்களுக்கு உங்கள் பெயர்கள் கெட்ட வார்த்தைகளைப்போல இருக்கும்.”
எனது கர்த்தராகிய ஆண்டவர் உங்களைக் கொல்வார்.
அவர் தம் ஊழியர்களைப் புதிய பெயரால் அழைப்பார்.
௧௬ “ஜனங்கள் இப்போது பூமியிலிருந்து ஆசீர்வாதத்தைக் கேட்கின்றனர்.
ஆனால் எதிர்காலத்தில், அவர்கள் நம்பிக்கைக்குரிய தேவனிடமிருந்து ஆசீர்வாதத்தைக் கேட்பார்கள்.
இப்பொழுது ஜனங்கள் வாக்குறுதிச் செய்யும்போது, பூமியின் வல்லமையை நம்புகின்றனர்.
ஆனால் எதிர்காலத்தில், அவர்கள் நம்பிக்கைக்குரிய தேவன் மீது நம்பிக்கை வைப்பார்கள்.
ஏனென்றால் கடந்தகாலத்தில் உள்ள துன்பங்கள் எல்லாம் மறக்கப்படும்.
என் ஜனங்கள் இந்தத் துன்பங்களையெல்லாம் மீண்டும் நினைக்கவேமாட்டார்கள்.”
புதிய காலம் வந்துகொண்டிருக்கிறது
௧௭ “நான் புதிய வானத்தையும், புதிய பூமியையும் படைப்பேன்.
ஜனங்கள் கடந்த காலத்தை நினைக்கமாட்டார்கள்.
அவற்றில் எதையும் அவர்கள் நினைக்கமாட்டார்கள்.
௧௮ எனது ஜனங்கள் மகிழ்ச்சியோடு இருப்பார்கள்.
அவர்கள் என்றும் என்றென்றும் மகிழ்ச்சியோடு இருப்பார்கள்.
நான் என்ன செய்யப் போகிறேன்?
நான் மகிழ்ச்சி நிறைந்த ஒரு எருசலேமை உருவாக்குவேன்.
அவர்களை மகிழ்ச்சி நிறைந்த ஜனங்கள் ஆக்குவேன்.
 
௧௯ “பிறகு, நான் எருசலேமோடு மகிழ்ச்சியாக இருப்பேன்.
நான் என் ஜனங்களோடு மகிழ்ச்சியாக இருப்பேன்.
அந்த நகரத்தில் மீண்டும் அழுகையும் துக்கமும் இராது.
௨௦ இனி ஒருபோதும் ஒரு குழந்தை பிறந்தவுடன் மரிக்காது.
இனி நகரத்தில் எவரும் குறுகிய வாழ்வுடன் மரிக்கமாட்டார்கள்.
ஒவ்வொரு குழந்தையும் நீண்ட காலம் வாழும்.
ஒவ்வொரு வயோதிகனும் நீண்ட காலம் வாழ்வான்.
100 ஆண்டுகள் வாழ்ந்த ஒருவன் இளைஞன் என்று அழைக்கப்படுவான்.
பாவம் செய்தவன் 100 ஆண்டுகள் வாழ்ந்தாலும் வாழ்வு முழுவதும் துன்பத்தை அடைவான்.
 
௨௧ “அந்த நகரத்தில், ஒருவன் வீடுகட்டினால் அவன் அங்கே வாழ்வான்.
ஒருவன் திராட்சைத் தோட்டத்தை வைத்தால், அவன் அந்தத் தோட்டத்திலிருந்து திராட்சைகளை உண்பான்.
௨௨ மீண்டும் ஒருவன் வீடுகட்ட இன்னொருவன் அதில் குடியேறமாட்டான்.
மீண்டும் ஒருவன் திராட்சைத் தோட்டத்தை அமைக்க இன்னொருவன் பழம் உண்ணமாட்டான்.
எனது ஜனங்கள் மரங்கள் வாழும்மட்டும் வாழ்வார்கள்.
நான் தேர்ந்தெடுத்த ஜனங்கள் தாங்கள் செய்தவற்றை அனுபவித்து மகிழ்வார்கள்.
௨௩ பெறும் குழந்தை மரித்துப்போவதற்காக
இனிமேல் பெண்கள் பிரசவிக்கமாட்டார்கள்.
பிரசவத்தின்போது என்ன ஆகுமோ என்று பெண்கள் இனிமேல் பயப்படமாட்டார்கள்.
எனது அனைத்து ஜனங்களும் அவர்களது பிள்ளைகளும் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.
௨௪ அவர்கள் கேட்பதற்கு முன்பே அவர்களுக்கு என்ன தேவை என்று நான் அறிவேன்.
அவர்கள் கேட்டு முடிப்பதற்குள்ளாக நான் அவர்களுக்கு உதவுவேன்.
௨௫ ஓநாயும் ஆட்டுக் குட்டிகளும் சேர்ந்து புல்மேயும்.
சிங்கங்கள் மாடுகளோடு சேர்ந்து வைக்கோலை உண்ணும்.
எனது பரிசுத்தமான மலையில் தரையில் உள்ள பாம்பு யாரையும் பயப்படுத்தாது.
அது எவரையும் தீண்டாது” கர்த்தர் இவை அனைத்தையும் கூறினார்.