௧௭
௧ என் ஆவி நொறுங்கிப்போயிற்று
நான் விட்டு விலகத் தயாராயிருக்கிறேன்.
என் வாழ்க்கை முடியும் நிலையிலுள்ளது.
கல்லறை எனக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது.
௨ ஜனங்கள் என்னைச் சூழ்ந்து நின்று, என்னைப் பார்த்து நகைக்கிறார்கள்.
அவர்கள் என்னைக் கேலிச்செய்து, அவமானப்படுத்துவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
 
௩ “தேவனே, நீர் என்னை ஆதரிக்கிறீர் என்பதை எனக்குக் காட்டும்.
வேறெவரும் என்னை ஆதரிக்கமாட்டார்கள்.
௪ நீர் என் நண்பர்களின் மனத்தை மூடி வைத்திருக்கிறீர்,
அவர்கள் என்னை புரிந்துக்கொள்ளார்கள்.
தயவுசெய்து அவர்கள் வெற்றியடையாதபடிச் செய்யும்.
௫ ஜனங்கள் கூறுவதை நீர் அறிவீர்:
‘ஒருவன் அவனது நண்பர்களுக்கு உதவுவதற்காகத் தன் பிள்ளைகளைக்கூடப் பொருட்படுத்தமாட்டான்’
ஆனால் என் நண்பர்களோ எனக்கெதிராகத் திரும் பியிருக்கிறார்கள்.
௬ எல்லோருக்கும் ஒரு கெட்ட சொல்லாக, தேவன் என் பெயரை மாற்றியிருக்கிறார்.
ஜனங்கள் என் முகத்தில் உமிழ்கிறார்கள்.
௭ என் கண்கள் குருடாகும் நிலையில் உள்ளன ஏனெனில், நான் மிகுந்த துக்கமும் வேதனையும் உள்ளவன்.
என் உடம்பு முழுவதும் ஒரு நிழலைப் போல மெலிந்துவிட்டது.
௮ நல்லோர் இதைப்பற்றிக் கலங்கிப்போயிருக்கிறார்கள்.
தேவனைப்பற்றிக் கவலையுறாத ஜனங்களுக்கு எதிராக, களங்கமற்றோர் கலக்கமடைந்துள்ளனர்.
௯ ஆனால் நல்லோர் நல்ல வழியில் தொடர்ந்து வாழ்கிறார்கள்.
களங்கமற்றோர் இன்னும் வலிமை பெறுவார்கள்.
 
௧௦ “ஆனால் நீங்கள் எல்லோரும் வாருங்கள், இது எனது தவறால் விளைந்ததே எனக் காட்ட முயலுங்கள்.
உங்களில் ஒருவரும் ஞானமுடையவன் அல்லன்.
௧௧ என் வாழ்க்கை கடந்து போகிறது, என் திட்டங்கள் அழிக்கப்பட்டன.
என் நம்பிக்கை போயிற்று.
௧௨ ஆனால் என் நண்பர்கள் குழம்பிப்போயிருக்கிறார்கள்.
அவர்கள் இரவைப் பகலென்று நினைக்கிறார்கள்.
அவர்கள் இருள் ஒளியை விரட்டி விடுமென நினைக்கிறார்கள்.
 
௧௩ “கல்லறையே என் புது வீடாகும் என நான் எதிர்பார்க்கலாம்.
இருண்ட கல்லறையில் என் படுக்கையை விரிக்கலாம் என நான் எதிர்பார்க்கலாம்.
௧௪ நான் கல்லறையிடம், ‘நீயே என் தந்தை’ என்றும்,
புழுக்களிடம் ‘என் தாய்’ அல்லது ‘என் சகோதரி’ என்றும் கூறலாம்.
௧௫ ஆனால் அதுவே என் ஒரே நம்பிக்கையாயிருந்தால், அப்போது எனக்கு நம்பிக்கையே இல்லை!
அதுவே என் ஒரே நம்பிக்கையாக இருந்தால், அந்த நம்பிக்கை நிறைவுப்பெறுவதை காண்பவர் யார்?
௧௬ என் நம்பிக்கை என்னோடு மறையுமோ?
அது மரணத்தின் இடத்திற்குக் கீழே போகுமா?
நாம் ஒருமித்துத் துகளில் இறங்குவோமா?” என்றான்.