௨௩
யோபு பதில் கூறுகிறான்
௧ அப்போது யோபு பதிலாக:
 
௨ “நான் இன்றைக்கு இன்னும் மனங்கசந்து முறையிடுகிறேன்.
ஏனெனில் நான் இன்னும் துன்புற்றுக்கொண்டிருக்கிறேன்.
௩ எங்கே தேவனைப் பார்க்கக் கூடுமென நான் அறிந்திருக்க வேண்டுமென்று விரும்புகிறேன்.
தேவனிடம் போகும் வழியை அறிய விரும்புகிறேன்.
௪ நான் தேவனிடம் என் நியாயத்தை விளக்குவேன்.
நான் களங்கமற்றவனெனக் காட்டும் விவாதங்களால் என் வாய் நிரம்பியிருக்கும்.
௫ என் விவாதங்களுக்கு தேவன் எவ்வாறு பதிலளிப்பார் என்று அறிவேன்.
தேவனுடைய பதில்களைப் புரிந்துகொள்வேன்.
௬ தேவன் எனக்கெதிராக அவரது வல்லமையைப் பயன்படுத்துவாரா?
இல்லை அவர் எனக்குச் செவிகொடுப்பார்!
௭ நான் ஒரு நேர்மையான மனிதன்.
என் கதையை நான் கூற, தேவன் அனுமதிப்பார்.
அப்போது என் நீதிபதி என்னை விடுதலையாக்குவார்!
 
௮ “ஆனால் நான் கிழக்கே போனால், அங்கே தேவன் இல்லை.
நான் மேற்கே போனால், அங்கும் நான் தேவனைக் காணேன்.
௯ தேவன் வடக்கே பணி செய்யும்போது, நான் அவரைப் பார்க்க முடியவில்லை.
தேவன் தெற்கே திரும்பும்போதும், நான் அவரைக் காணவில்லை.
௧௦ ஆனால் தேவன் என்னை அறிவார்.
அவர் என்னைப் பரிசோதித்துக்கொண்டிருக்கிறார், நான் பொன்னைப்போன்று தூயவனெனக் காண்பார்.
௧௧ தேவன் விரும்புகிறபடியே நான் எப்போதும் வாழ்ந்திருக்கிறேன்.
நான் தேவனைப் பின்பற்றுவதை நிறுத்தியதேயில்லை.
௧௨ நான் தேவனுடைய கட்டளைகளுக்கு எப்போதும் கீழ்ப்படிகிறேன்.
என் உணவைக் காட்டிலும் அதிகமாக தேவனுடைய வாயிலிருந்து வரும் வார்த்தைகளை நான் நேசிக்கிறேன்.
 
௧௩ “ஆனால் தேவன் மாறுகிறதில்லை.
ஒருவனும் தேவனுக்கெதிராக நிற்கமுடியாது.
தேவன் தான் விரும்புகின்றவற்றையெல்லாம் செய்கிறார்.
௧௪ தேவன் எனக்கென்று அவர் திட்டமிட்டவற்றைச் செய்வார்.
எனக்காக வேறு பல திட்டங்களையும் அவர் வைத்திருக்கிறார்.
௧௫ அதனாலே நான் தேவனுக்குப் பயந்திருக்கிறேன்.
இக்காரியங்களை நான் புரிந்துக்கொள்கிறேன்.
ஆகையால் நான் தேவனுக்குப் பயந்திருக்கிறேன்.
௧௬ தேவன் என் இருதயத்தை இளைக்கச் (சோர்வடைய) செய்கிறார், நான் என் தைரியத்தை இழக்கிறேன்.
சர்வ வல்லமையுள்ள தேவன் என்னை அஞ்சச் செய்கிறார்.
௧௭ என் முகத்தை மூடும் கருமேகத்தைப் போன்று எனக்கு நேர்ந்த தீயகாரியங்கள் உள்ளன.
ஆனால் அந்த இருள் என்னை அடக்காது.