௩௧
௧ “என்னைக் கவர்கின்ற ஒரு கன்னிப் பெண்ணைப் பாராதிருக்கும்படி
என் கண்களோடு நான் ஒரு ஒப்பந்தம் செய்துக்கொண்டேன்.
௨ சர்வ வல்லமையுள்ள தேவன் ஜனங்களுக்கு என்ன செய்கிறார்?
உயரத்திலுள்ள பரலோகத்தின் வீட்டிலிருந்து எவ்வாறு தேவன் ஜனங்களுக்குத் திரும்பக் கொடுக்கிறார்?
௩ தேவன் தொல்லையையும் அழிவையும் கெட்ட ஜனங்களுக்கு அனுப்புகிறார்.
தவறு செய்வோர்க்கு அழிவை அனுப்புகிறார்.
௪ நான் செய்கிற ஒவ்வொன்றையும் தேவன் அறிகிறார்.
நான் எடுக்கும் ஒவ்வோர் அடியையும் தேவன் காண்கிறார்.
 
௫ “நான் பொய்களாலான வாழ்க்கை வாழ்ந்திருந்தால்
அல்லது நான் பொய் சொல்லவும் ஜனங்களை ஏமாற்றவும் ஓடியிருந்தால்,
௬ அப்போது, தேவன் என்னைச் சீர்தூக்கிப் பார்ப்பதற்குத் தக்க அளவு கோலைப் பயன்படுத்தட்டும்.
அப்போது நான் களங்கமற்றவன் என்பதை தேவன் அறிவார்!
௭ நான் சரியான பாதைக்குப் புறம்பே நடந்தால்,
என் கண்கள் என் இருதயத்தை தீமைக்கு நேரே நடத்தினால்,
என் கைகளில் பாவத்தின் அழுக்குப் படிந்திருந்தால், அப்போது தேவன் அறிவார்,
௮ அப்போது நான் நட்ட பயிர்களைப் பிறர் உண்ணட்டும்,
என் பயிர்கள் பிடுங்கப்படட்டும்.
 
௯ “நான் பெண்களிடம் காம இச்சை (மோகம்) கொண்டிருந்தால்.
அயலானின் மனைவியோடு தகாத நெறியில் நடக்கும்படி அவன் கதவருகே காத்திருந்தால்.
௧௦ அப்போது, எனது மனைவி மற்றொருவனின் உணவைச் சமைக்கட்டும்,
பிற மனிதன் அவளோடு படுத்திருக்கட்டும்.
௧௧ ஏனெனில் உடலுறவால் விளையும் பாவம் அவமானத்திற்குரியது.
அது தண்டனை பெறக்கூடியக் பாவமாகும்.
௧௨ பாலின உறவு சம்மந்தமான பாவம் அனைத்தையும் அழிக்கும்வரை எரியும் நெருப்பைப் போன்றது.
நான் இதுவரைச் செய்த அனைத்தையும், எனது உடமைகள் யாவற்றையும் அது அழித்துவிடும்!
 
௧௩ “என் அடிமைகளுக்கு என்னிடம் ஏதோ குறைபாடு ஏற்பட்டபோது
அவர்களிடம் நியாயமாயிருக்க நான் மறுத்திருந்தால்,
௧௪ நான் தேவனைச் சந்திக்கும்போது என்ன செய்வேன்?
நான் செய்ததைக் குறித்து தேவன் விளக்கம் கேட்டால் நான் என்ன சொல்வேன்?
௧௫ என் தாயின் கர்ப்பத்தில் தேவன் என்னை உண்டாக்கினார், தேவன் என் அடிமைகளையும் உண்டாக்கினார்,
நம்முடைய தாயின் கருவில் தேவன் நமக்கு உருவம் கொடுத்தார்.
 
௧௬ “நான் ஏழைகளுக்கு உதவ ஒருபோதும் மறுத்ததில்லை.
விதவைகளுக்குத் தேவையானவற்றை நான் எப்போதும் கொடுத்தேன்.
௧௭ நான் உணவைப் பொறுத்தமட்டில் சுய நலம் பாராட்டியதில்லை.
நான் எப்போதும் அநாதைகளுக்கு உணவளித்தேன்.
௧௮ தந்தையற்ற பிள்ளைகளுக்கு என் வாழ்க்கை முழுவதும், நான் ஒரு தந்தையைப் போன்றிருந்தேன்.
என் வாழ்க்கை முழுவதும், நான் விதவைகளை ஆதரித்து வந்திருக்கிறேன்.
௧௯ ஆடையில்லாததால் ஜனங்கள் துன்புறுவதைக் கண்டபோதும்,
மேற்சட்டையில்லாத ஏழையைக் கண்டபோதும்,
௨௦ நான் அவர்களுக்கு எப்போதும் ஆடைகளைக் கொடுத்தேன்.
என் ஆடுகளின் மயிரைப் பயன்படுத்தி, அவர்கள் குளிர் நீங்கச் செய்தேன். அவர்கள் தங்கள் முழு இருதயத்தோடு என்னை ஆசீர்வதித்தார்கள்.
௨௧ வாயிலில் ஒரு அநாதை வந்து உதவி வேண்டி நிற்கும்போது
நான் என் கைமுட்டியை ஒருபோதும் ஆட்டியதில்லை.* 21ஆம் வசனம் நியாயசபையில் எனக்கு ஆதரவு இருந்தபோதும் நான் ஒரு அநாதையைப் பயமுறுத்தியதில்லை.
௨௨ நான் எப்போதேனும் அப்படிச் செய்திருந்தால், அப்போது என் கரம் தோளிலிருந்து விழுந்திருக்கும் என நான் நம்புகிறேன்!
என் கரம் எலும்புக் குழியிலிருந்து அகற்றப்பட்டிருக்கும் என நான் நம்புகிறேன்!
௨௩ ஆனால் நான் அத்தகைய தீயகாரியங்கள் எதையும் செய்யவில்லை.
நான் தேவனுடைய தண்டனைக்கு அஞ்சியிருக்கிறேன்.
அவரது மகத்துவம் என்னை அச்சுறுத்துகிறது.
 
௨௪ “நான் என் செல்வங்களில் நம்பிக்கை வைத்ததில்லை.
எனக்கு உதவுவதற்காக நான் எப்போதும் தேவனையே நம்பியிருந்தேன்.
தூய பொன்னிடம், ‘நீயே என் நம்பிக்கை’ என்று நான் கூறியதில்லை,
௨௫ நான் செல்வந்தனாக இருந்தேன்.
ஆனால் அது என்னைப் பெருமைக்காரனாக்கவில்லை!
நான் மிகுதியான பொருளைச் சம்பாதித்தேன்.
ஆனால், என்னைச் சந்தோஷப்படுத்தியது அதுவல்ல!
௨௬ நான் ஒளிவிடும் சூரியனையோ, அழகிய சந்திரனையோ
ஒருபோதும் தொழுதுகொண்டதில்லை.
௨௭ சூரியன் அல்லது சந்திரனை தொழுதுகொள்ளுமளவிற்கு
நான் ஒருபோதும் மூடனாக இருந்ததில்லை.
௨௮ அதுவும் தண்டிக்கப்படவேண்டிய பாவம் ஆகும்.
நான் அப்பொருள்களை தொழுதுகொண்டிருந்திருப்பேனாகில் சர்வ வல்லமையுள்ள தேவனிடம் உண்மையற்றவனாவேன்.
 
௨௯ “என் பகைவர்கள் அழிந்தபோது நான் மகிழ்ச்சியடைந்ததில்லை.
தீயவை என் பகைவர்களுக்கு நேரிட்டபோது, நான் அவர்களைக் கண்டு நகைத்ததில்லை.
௩௦ என் பகைவர்களை சபிப்பதாலோ, அவர்கள் மரிக்க வேண்டும் என விரும்பியோ
என் வாய் பாவம் செய்ய நான் ஒருபோதும் அனுமதித்ததில்லை.
௩௧ நான் அந்நியருக்கு எப்போதும் உணவளித்தேன் என்பதை
என் வீட்டிலுள்ளோர் எல்லோரும் அறிவார்கள்.
௩௨ அந்நியர்கள் இரவில் தெருக்களில் தூங்காதபடி
நான் எப்போதும் அவர்களை வீட்டினுள்ளே வரவேற்றேன்.
௩௩ பிறர் தங்கள் பாவங்களை மறைக்க முயல்கிறார்கள்.
ஆனால் நான் என் குற்றத்தை மறைத்ததில்லை.
௩௪ ஜனங்கள் என்ன சொல்வார்களோ?
என்று நான் அஞ்சியதில்லை.
அந்த அச்சம் என்னை அமைதியாயிருக்கச் செய்ததில்லை.
நான் வெளியே போகாமலிருக்க அது தடையாயிருக்கவில்லை.
என்னை ஜனங்கள் வெறுப்பதற்கு (ஜனங்களின் வெறுப்புக்கு) நான் அஞ்சவில்லை.
 
௩௫ “ஓ! யாரேனும் எனக்குச் செவிகொடுக்க வேண்டுமென விரும்புகிறேன்!
நான் எனது நியாயத்தை விளக்கட்டும்.
சர்வ வல்லமையுள்ள தேவன் எனக்குப் பதில் தருவார் என விரும்புகிறேன்.
நான் செய்தவற்றில் தவறென அவர் நினைப்பதை அவர் எழுதி வைக்கட்டும் என்று நான் விரும்புகிறேன்.
௩௬ அப்போது என் கழுத்தைச் சுற்றிலும் அந்த அடையாளத்தை அணிந்துகொள்வேன்.
ஒரு கிரீடத்தைப்போன்று அதை என் தலைமேல் வைப்பேன்.
௩௭ தேவன் அதைச் செய்தால்.
நான் செய்த ஒவ்வொன்றையும் விளக்கிக் கூற முடியும்.
தலை நிமிர்ந்தபடியே ஒரு தலைவனைப்போன்று நான் தேவனிடம் வர முடியும்.
 
௩௮ “மற்றொருவனிடமிருந்து நான் என் நிலத்தைத் (அபகரிக்கவில்லை) திருடவில்லை.
நிலத்தை திருடியதாக ஒருவனும் என் மீது குற்றம் சாட்ட முடியாது.
௩௯ நிலத்திலிருந்து நான் பெற்ற உணவிற்காக எப்போதும் உழவர்களுக்கு ஊதியம் கொடுத்துள்ளேன்.
ஒருவருக்குச் சொந்தமான நிலத்தை கைப்பற்ற நான் ஒருபோதும் முயன்றதில்லை.
௪௦ நான் அத்தீயக்காரியங்களை எப்போதேனும் செய்திருந்தால்
அப்போது என் வயல்களில் கோதுமை, பார்லி ஆகியவற்றிற்குப் பதிலாக முள்ளும் களைகளும் முளைக்கட்டும்!” என்றான்.
 
யோபின் வார்த்தைகள் (சொற்கள்) முடிவடைந்தன.

*௩௧:௨௧: 21ஆம் வசனம் நியாயசபையில் எனக்கு ஆதரவு இருந்தபோதும் நான் ஒரு அநாதையைப் பயமுறுத்தியதில்லை.