௩௫
௧ எலிகூ பேசுவதைத் தொடர்ந்தான் அவன்,
 
௨ “ ‘யோபுவே, நான் தேவனைக் காட்டிலும் நியாயமானவன்’ எனக் கூறுவது சரியல்ல.
௩ யோபுவே, நீ தேவனை, ‘ஒருவன் தேவனைச் சந்தோஷப்படுத்த விரும்பினால் அவனுக்கு லாபம் என்ன?
நான் பாவம் செய்யாதிருந்தால், அது எனக்கு என்ன நம்மையைத் தரும்?’ என்று கேளும்.
 
௪ “யோபுவே, நான் (எலிகூ) உனக்கும், உன்னோடு இங்கிருக்கும் உமது நண்பர்களுக்கும் பதில் கூற விரும்புகிறேன்.
௫ யோபுவே, வானத்தை நோக்கிப்பாரும்,
உனக்கும் மேல் உயர்ந்திருக்கிற மேகங்களை அண்ணாந்து பாரும்.
௬ யோபுவே, நீ பாவஞ்செய்தால், அது தேவனைத் துன்புறுத்தாது.
யோபுவே உன்னிடம் பாவங்கள் மிகுதியாயிருந்தால், அது தேவனை ஒன்றும் செய்யாது.
௭ யோபுவே, நீ நல்லவனாக இருந்தால், அது தேவனுக்கு உதவாது.
தேவன் உன்னிடமிருந்து எதையும் பெறமாட்டார்.
௮ யோபுவே, நீ செய்யும் நல்ல காரியங்களோ, தீயகாரியங்களோ உன்னைப் போன்ற பிறரை மட்டுமே பாதிக்கும்.
அவை தேவனுக்கு உதவவோ, அவரைத் துன்புறுத்தவோ செய்யாது.
 
௯ “தீயோர் துன்புறுத்தப்பட்டால், அவர்கள் உதவிக்காக கூக்குரலிடுவார்கள்.
அவர்கள் வல்லமையுள்ள ஜனங்களிடம் சென்று உதவிக்காக கெஞ்சி கேட்பார்கள்.
௧௦ ஆனால் அத்தீயோர் தேவனிடம் உதவிக் கேட்கமாட்டார்கள்.
அவர்கள், ‘என்னை உண்டாக்கின தேவன் எங்கே? ஜனங்கள் மனக்கவலையோடிருக்கையில் தேவன் அவர்களுக்கு உதவுவார்.
எனவே அவர் எங்கிருக்கிறார்?
௧௧ தேவன் நம்மை பறவைகள், மிருகங்களைக் காட்டிலும் ஞானமுள்ளவராக்குகிறார்.
எனவே அவர் எங்கிருக்கிறார்?’ என்று கேட்பார்கள்.
 
௧௨ “அல்லது, அத்தீயோர் தேவனிடம் உதவிவேண்டினால் தேவன் அவர்களுக்குப் பதிலளிக்கமாட்டார்.
ஏனெனில் அவர்கள் மிகவும் பெருமை (அகந்தை) உடையவர்கள்.
அவர்கள் மிகவும் முக்கியமானவர்களென்று இன்னமும் நினைக்கிறார்கள்.
௧௩ தேவன் அவர்களின் தகுதியற்ற கெஞ்சுதலுக்குச் செவிசாய்க்கமாட்டார் என்பது உண்மை.
சர்வ வல்லமையுள்ள தேவன் அவர்களைக் கவனிக்கமாட்டார்.
௧௪ எனவே யோபுவே, நீ தேவனைப் பார்க்கவில்லை என்று கூறும்போது தேவன் உனக்குச் செவிசாய்க்கமாட்டார்.
தேவனைச் சந்திக்கும் வாய்ப்பை எதிர்பார்த்து நீ களங்கமற்றவனென்று நிரூபிக்கக் காத்துக் கொண்டிருப்பதாகக் கூறுகிறாய்.
 
௧௫ “யோபுவே, தேவன் தீயோரைத் தண்டிப்பதில்லை எனவும்,
தேவன் பாவங்களைக் கவனிப்பதில்லை எனவும் நீ நினைக்கிறாய்.
௧௬ எனவே யோபு அவனது தகுதியற்ற பேச்சைத் தொடருகிறான்.
யோபு தான் முக்கியமானவனாக பாவித்துக்கெண்டிருக்கிறான்.
யோபு தான் பேசிக் கொண்டிருப்பதைப்பற்றி அறியான் என்பதை எளிதாகக் காணமுடியும்” என்றான்.