௩௯
௧ “யோபுவே, மலையாடுகள் எப்போது
பிறக்கின்றன என்பது உனக்குத் தெரியுமா?
பெண்மான் குட்டியை ஈனுவதைக் கவனித்திருக்கிறாயா?
௨ யோபுவே, மலையாடுகளும், பெண்மான்களும் எத்தனை மாதங்கள் அவற்றின் குட்டிகளைச் சுமக்க வேண்டுமென்பதை நீ அறிவாயா?
அவை பிறப்பதற்கேற்ற நேரமெப்போதென அறிவாயா?
௩ அம்மிருகங்கள் கீழே படுத்துக்கொள்ளும், அவற்றின் பிரசவ வலியை உணரும்போது, குட்டிகள் பிறந்துவிடும்.
௪ அக்குட்டி மிருகங்கள் வயல்களில் வலிமையாக வளரும்.
அவை தங்கள் தாய் விலங்குகளை விட்டுச் செல்லும், பின்பு அவை திரும்பிவராது.
 
௫ “யோபுவே, காட்டுக் கழுதைகளைச் சுதந்திரமாக அலையவிட்டவர் யார்?
அவற்றின் கயிறுகளை அறுத்துவிட்டவர் யார்?
௬ பாலைவனம் காட்டுக் கழுதையின் இருப்பிடமாகும்படி நான் (தேவன்) செய்தேன்.
உவர்நிலத்தை அவை வாழுமிடமாகக் கொடுத்தேன்.
௭ காட்டுக் கழுதைகள் இரைச்சலான ஊர்களை நோக்கி சிரிக்கும்.
ஒருவனும் அவற்றை அடக்கியாள முடியாது.
௮ காட்டுக் கழுதைகள் மலைகளில் வாழும்.
அவை அவற்றின் மேய்ச்சலிடம். அங்கு அவை உண்பதற்கு இரைத் தேடும்.
 
௯ “யோபுவே, காட்டுக் காளை உனக்குச் சேவை புரியச் சம்மதிக்குமா?
அது உன் தொழுவத்தில் இரவில் தங்குமா?
௧௦ யோபுவே, நீ உன் வயல்களை உழுவதற்குக்
காட்டுக் கழுதையின் மீது கயிறுகளைக் கட்ட அவை அனுமதிக்குமா?
௧௧ காட்டுக் காளை மிகவும் பலம் வாய்ந்தது!
உன் வேலைகளைச் செய்ய நீ அதனை நம்பக்கூடுமா?
௧௨ உன் தானியத்தைச் சேகரித்து
உன் களஞ்சியத்திற்குக் கொண்டுவரும் என அதை நம்புவாயா?
 
௧௩ “தீக்கோழி வியப்புற்று அதன் சிறகுகளை அடிக்கும்.
ஆனால் தீக்‌கோழியால் பறக்க முடியாது, தீக்கோழியின் சிறகுகள் கொக்கின் சிறகுகளைப் போன்றவை அல்ல.
௧௪ தீக்கோழி நிலத்தில் அதன் முட்டைகளை இடும்,
அவை மணலினுள் வெப்பமுறும்.
௧௫ யாரேனும் அதன் முட்டைகளின்மேல் நடக்கக் கூடும் என்பதையோ,
சில காட்டு விலங்குகள் அவற்றை உடைக்கக்கூடும் என்பதையோ தீக்கோழி மறந்துவிடுகிறது.
௧௬ தீக்கோழி அதன் குஞ்சுகளை விட்டுச் செல்கிறது.
அவை தனக்குரியனவல்ல என்பதைப்போல் அவற்றைக் கருதுகிறது (நடத்துகிறது).
அதன் குஞ்சுகள் மரித்துப்போனால், அது வருந்துவதில்லை.
அதன் உழைப்பு வீணானதுதான்.
௧௭ ஏனெனில், நான் (தேவன்) தீக்கோழிக்கு ஞானத்தைக் கொடுக்கவில்லை.
தீக்கோழி முட்டாள்தனமானது, நான் அதனை அவ்வாறு படைத்திருக்கிறேன்.
௧௮ ஆனால் தீக்கோழி ஓடுவதற்கென எழுந்திருக்கும்போது, அது குதிரையையும் அதில் சவாரி செய்பவனையும் பார்த்துச் சிரிக்கும்.
ஏனெனில் எந்தக் குதிரையையும் விட அதனால் வேகமாக ஓட இயலும்.
 
௧௯ “யோபுவே, நீ குதிரைக்கு அதன் வலிமையைக் கொடுத்தாயா?
அதன் பிடரியில் பிடரி மயிரை வளரச் செய்தாயா?
௨௦ யோபுவே, நீ குதிரையை ஒரு வெட்டுக் கிளியைப்போல, வெகுதூரம் தாண்ட வைப்பாயா?
குதிரை உரக்க கனைக்கிறது, அது ஜனங்களைப் பயப்படுத்துகிறது.
௨௧ குதிரை அதன் மிகுந்த வலிமையால் சந்தோஷப்படும்.
அது பூமியைத் தன் பாதங்களால் கீறி, விரைந்து போருக்கென ஓடி நுழையும்.
௨௨ அச்சத்தைப் பார்த்துக் குதிரை நகைக்கும் அது அஞ்சுவதில்லை!
அது யுத்தத்திற்கஞ்சி (யுத்தத்திலிருந்து) ஓடுவதில்லை.
௨௩ குதிரையின் புறத்தே வீரனின் அம்பறாத்தூணி அசையும்.
அதனை சவாரிச் செய்பவன் ஏந்தும் ஈட்டியும் போர்க்கருவிகளும் சூரியனின் ஒளியில் பிரகாசிக்கும்.
௨௪ குதிரை மிகவும் உணர்ச்சிவசப்படுகிறது!
அது பூமியில் மிக விரைந்தோடுகிறது. எக்காள சத்தத்தைக் குதிரை கேட்கும்போது அதனால் அமைதியாக இருக்க இயலாது.
௨௫ எக்காளம் ஒலிக்கும்போது, குதிரை ஆர்ப்பரிக்கும்.
அது யுத்தத்தைத் தூரத்திலேயே நுகரும்!
அது அதிகாரிகளின் கட்டளைகளையும் யுத்தத்தின் பிற ஒலிகளையும் கேட்கும்.
 
௨௬ “யோபுவே, ராஜாளி அதன் செட்டைகளை விரித்துத் தெற்கு நோக்கிப் பறக்க நீ கற்பித்தாயா?
௨௭ யோபுவே, நீ தான் கழுகிடம் உயரே வானத்தில் பறக்கச் சொன்னாயா?
மலைகளின் உயரமான இடங்களில் அதன் கூட்டைக் கட்டச் சொன்னாயா?
௨௮ கழுகு மலை முகப்பில் வாழ்கிறது.
மலைச்சிகரமே கழுகின் கோட்டை.
௨௯ அதன் உயரமான கோட்டையிலிருந்து கழுகு அதன் இரையை நோக்கும்.
மிகுந்த தூரத்திலிலுள்ள இரையையும் கழுகால் பார்க்க முடியும்.
௩௦ பிணங்கள் இருக்குமிடத்தில் கழுகுகள் கூடும்.
அதன் குஞ்சுகள் இரத்தத்தைக் குடிக்கும்” என்றான்.