கர்த்தருக்கு ஒரு ஜெபம்
௧ கர்த்தாவே, எங்களுக்கு என்ன நடந்தது என்று எண்ணிப்பாரும்.
எங்களது அவமானத்தை நோக்கிப்பாரும்!
௨ எங்கள் நாடு அந்நியர்களுக்கு உரியதான சொத்தாக மாறிற்று.
எங்கள் வீடுகள் அயல் நாட்டுக்காரர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
௩ நாங்கள் அநாதைகளாயிருக்கிறோம்.
எங்களுக்குத் தந்தை இல்லை.
எங்கள் தாய்மார்கள் விதவைகளைப்போன்று ஆனார்கள்.
௪ நாங்கள் குடிக்கிற தண்ணீரையும் விலைக்கு வாங்க வேண்டியதிருக்கிறது.
நாங்கள் பயன்படுத்துகிற விறகுக்கும் விலை கொடுக்க வேண்டியதிருக்கிறது.
௫ எங்கள் கழுத்துகளில் நுகத்தைப் பூட்டிக்கொள்ள வற்புறுத்தப்படுகிறோம்.
நாங்கள் களைத்துப்போகிறோம். எங்களுக்கு ஓய்வில்லை.
௬ நாங்கள் எகிப்தோடு ஒரு ஒப்பந்தம் செய்திருக்கிறோம்.
நாங்கள் போதுமான அப்பங்களைப் பெற அசீரியாவோடு ஒப்பந்தம் செய்திருக்கிறோம்.
௭ எங்கள் முற்பிதாக்கள் உமக்கு எதிராகப் பாவம் செய்தனர்.
இப்போது அவர்கள் மரித்துப்போனார்கள்.
இப்பொழுது நாங்கள் அவர்கள் செய்த பாவத்துக்காகத் துன்பப்படுகிறோம்.
௮ அடிமைகள் எங்களது ஆள்வோர்களாக ஆகியிருக்கின்றனர்.
அவர்களிடமிருந்து எவராலும் எங்களைக் காப்பாற்ற முடியவில்லை.
௯ நாங்கள் உணவைப்பெற வாழ்க்கையில் அபாயத்தை எதிர்கொள்கிறோம்.
வனாந்திரத்தில் மனிதர்கள் வாள்களோடு நின்றுக்கொண்டிருக்கின்றனர்.
௧௦ எங்கள் தோல் வறுக்கும் சட்டியைப்போன்று சூடாக உள்ளது.
எங்களுக்கு பசியினால் அதிகமாய் காய்ச்சல் உள்ளது.
௧௧ பகைவர்கள் சீயோன் பெண்களை கற்பழித்தனர்.
யூதாவின் நகரங்களில் அவர்கள் பெண்களை கற்பழித்தனர்.
௧௨ பகைவர்கள் எங்கள் இளவரசர்களை தூக்கிலிட்டனர்.
எங்கள் மூப்பர்களை அவர்கள் கௌரவிக்கவில்லை.
௧௩ பகைவர்கள் எங்கள் இளைஞர்களை
எந்திர ஆலைகளில் தானியத்தை அரைக்கும்படிச் செய்தனர்.
எங்கள் இளைஞர்கள் மரத்தடிகளின் சுமையால்
கீழே இடறி விழுந்தார்கள்.
௧௪ மூப்பர்கள் இனி நகரவாசல்களில் உட்காருவதில்லை.
இளைஞர்கள் இனி இசை எழுப்புவதில்லை.
௧௫ எங்கள் இதயத்தில் இனி மகிழ்ச்சியே இல்லை.
எங்கள் நடனம் மரித்தவர்களுக்கான ஒப்பாரியாக மாறிவிட்டது.
௧௬ எங்கள் தலையிலிருந்து கிரீடம் கீழே விழுந்துவிட்டது.
எங்களுக்கு எங்கள் பாவங்களால் நிலைமை மோசமாகிக்கொண்டிருக்கிறது.
௧௭ இவற்றால் எங்கள் இதயம் நோயுற்றிருக்கிறது.
எங்கள் கண்களால் தெளிவாகப் பார்க்கமுடியவில்லை.
௧௮ சீயோன் மலை வெறு நிலமாகிவிட்டது.
சீயோன் மலையைச் சுற்றி நரிகள் ஓடித் திரிகின்றன.
௧௯ ஆனால் கர்த்தாவே, நீர் என்றென்றும் ஆளுகிறீர்,
உமது இராஜ சிங்காசனம் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
௨௦ கர்த்தாவே, நீர் என்றென்றைக்கும் எங்களை மறந்துவிட்டது போன்று இருக்கின்றீர்.
எங்களை நெடுங்காலமாக தனியே விட்டுவிட்டதுபோன்று இருக்கின்றீர்.
௨௧ கர்த்தாவே, உம்மிடம் மீண்டும் எங்களைக் கொண்டுவாரும்.
நாங்கள் மகிழ்ச்சியோடு உம்மிடம் திரும்பி வருவோம்.
எங்கள் வாழ்க்கையை முன்பு இருந்ததுபோன்று ஆக்கும்.
௨௨ நீர் எங்கள் பேரில் கடுங்கோபமாக இருந்தீரே.
எங்களை நீர் முழுமையாக நிராகரித்துவிட்டீரா?