மோசே ஆசாரியர்களைத் தயார்
௧ கர்த்தர் மோசேயிடம், ௨ “உன்னோடு ஆரோனையும் அவனது மகன்களையும் அழைத்துக்கொள். ஆடைகளையும், அபிஷேக எண்ணெயையும் பாவப்பரிகார பலிக்கான ஒரு காளையையும், இரண்டு ஆட்டுக் கடாக்களையும், ஒரு கூடை புளிப்பில்லாத அப்பங்களையும் எடுத்துக்கொள். ௩ பிறகு ஜனங்கள் அனைவரையும் ஆசாரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூட்டு” என்றார்.
௪ கர்த்தர் கட்டளையிட்டபடியே மோசே செய்து முடித்தான். ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் ஜனங்கள் கூடி வந்தனர். ௫ மோசே ஜனங்களிடம், “இவைதான் நாம் செய்ய வேண்டும் என்று கர்த்தர் கட்டளையிட்டவை” என்றான்.
௬ பிறகு மோசே ஆரோனையும் அவனது மகன்களையும் அழைத்து வந்து அவர்களை தண்ணீரால் கழுவினான். ௭ பின் நெய்யப்பட்ட உள்ளங்கியை ஆரோனுக்கு அணிவித்து, இடுப்பைச் சுற்றிக் கச்சையையும் கட்டினான். பிறகு அவன் மேல் அங்கியை உடுத்தி, ஏபோத்தையும் அணிவித்தான். அதன்மேல் ஏபோத்தின் அழகான கச்சையைக் கட்டினான். ௮ பிறகு ஆரோனுக்கு நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தையும், அதின் பையில் ஊரீம் தும்மீம் என்பவற்றையும் வைத்தான். ௯ மோசே ஆரோனின் தலையில் தலைப்பாகையைக் கட்டி, அதன் முன் பக்கத்தில் பொற்பட்டத்தைக் கட்டினான். அது பரிசுத்த கிரீடமாக விளங்கியது. மோசே இவற்றையெல்லாம் கர்த்தர் கட்டளையிட்டபடியே செய்து முடித்தான்.
௧௦ பிறகு மோசே அபிஷேக எண்ணெயை எடுத்து பரிசுத்த கூடாரத்திற்குள்ளும் கூடாரத்திற்குள் இருந்த எல்லாப் பொருட்கள் மேலும் தெளித்தான். இவ்வாறு அனைத்தையும் மோசே பரிசுத்தமாக்கினான். ௧௧ பிறகு மோசே சிறிதளவு அபிஷேக எண்ணெயை ஏழு முறை பலிபீடத்தின் மேல் தெளித்தான். அவன் பலிபீடத்தையும் அபிஷேக எண்ணெயால் பரிசுத்தப்படுத்தினான். பின் கிண்ணத்திலும் அதன் அடிப்பாகத்திலும் அபிஷேக எண்ணெயைத் தெளித்தான். இவ்வாறு மோசே கருவிகளையும் பாத்திரங்கள் அனைத்தையும் பரிசுத்தப்படுத்தினான். ௧௨ பிறகு மோசே அபிஷேக எண்ணெயில் சிறிதளவு எடுத்து ஆரோனின் தலையில் ஊற்றி அவனையும் பரிசுத்தமாக்கினான். ௧௩ பின்னர் மோசே ஆரோனின் மகன்களையும் அழைத்து அவர்களுக்கும் நெய்யப்பட்ட அங்கியை அணிவித்து, இடுப்புக் கச்சையைக் கட்டினான். பின் அவர்களின் தலையில் தலைப்பாகைகளை அணிவித்தான். மோசே இவற்றையெல்லாம் கர்த்தர் கட்டளையிட்டபடியே செய்து முடித்தான்.
௧௪ பிறகு மோசே பாவப்பரிகார பலிக்கான காளையைக் கொண்டு வந்தான். ஆரோனும் அவனது மகன்களும் தங்கள் கைகளை அப்பாவப் பரிகார பலியான காளையின் தலை மீது வைத்தார்கள். ௧௫ பின் மோசே அக்காளையைக் கொன்று அதன் இரத்தத்தை சேகரித்தான். அவன் தன் விரல்களில் இரத்தத்தைத் தொட்டு பலிபீடத்தின் மூலைகளில் பூசினான். இந்த முறையில் மோசே பலிபீடத்தைப் பலியிடுவதற்குரியதாகத் தயார் படுத்தினான். பின் பலிபீடத்தின் அடியில் அந்த இரத்தத்தை ஊற்றினான். அம்முறையில் அவன் ஜனங்களைப் பரிசுத்தப்படுத்த பலிபீடத்தைத் தயார் செய்தான். ௧௬ காளையின் உட்பகுதியிலுள்ள கொழுப்பையெல்லாம் வெளியே எடுத்தான். பின் குடல்களின் மேலிருந்து கொழுப்பையும், கல்லீரல்மேலிருந்து ஜவ்வையும், இரண்டு சிறு நீரகங்களையும், அவற்றின் மேலுள்ள கொழுப்பையும் வெளியே எடுத்து, அவற்றை பலிபீடத்தின்மேல் எரித்தான். ௧௭ ஆனால் மோசே அக்காளையின் தோலையும் இறைச்சியையும் உடல் கழிவுகளையும் கூடாரத்திற்கு வெளியே கொண்டு போய் அவைகளை எரித்தான். மோசே தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே இவை அனைத்தையும் செய்து முடித்தான்.
௧௮ பிறகு மோசே தகன பலிக்கான ஆட்டுக் கடாவைக் கொண்டு வந்தான். ஆரோனும் அவனது மகன்களும் செம்மறி ஆட்டுக் கடாவின் தலைமீது தங்கள் கைகளை வைத்தனர். ௧௯ பிறகு அதனை மோசே கொன்று, அதன் இரத்தத்தைப் பலிபீடத்தைச் சுற்றிலும் தெளித்தான். ௨௦-௨௧ பின்னர் அந்த ஆட்டைப் பல துண்டுகளாக வெட்டினான். அதன் உள்பகுதிகளையும் கால்களையும் தண்ணீரால் கழுவினான். பின்னர் அனைத்தையும் பலிபீடத்தின் மீது குவித்து வைத்து எரித்தான். இது கர்த்தருக்கு செய்யப்படும் சர்வாங்க தகனபலியாகும். இதன் மணம் கர்த்தருக்கு மிகவும் பிரியமானதாக இருக்கும். கர்த்தர் கட்டளையிட்டபடியே மோசே அனைத்தையும் செய்து முடித்தான்.
௨௨ பிறகு மோசே இன்னொரு ஆட்டுக் கடாவையும் கொண்டு வந்தான். இது ஆரோனையும் அவனது மகன்களையும் ஆசாரியர்களாக நியமிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது. ஆரோனும் அவனது மகன்களும் தங்கள் கைகளை செம்மறி ஆட்டுக்கடாவின் தலையில் வைத்தனர். ௨௩ பிறகு மோசே அதனைக் கொன்றான். அவன் அதன் இரத்தத்தைத் தொட்டு ஆரோனின் வலது காது முனையிலும், வலது கை பெருவிரலிலும், வலது கால் பெருவிரலிலும் தேய்த்தான். ௨௪ பிறகு மோசே ஆரோனின் மகன்களை பலிபீடத்தின் அருகிலே அழைத்தான். மோசே அவர்களது வலது காதுகளின் முனையிலும், வலது கை பெருவிரல்களிலும், வலது கால் பெருவிரல்களிலும் அதன் இரத்தத்தைத் தேய்த்தான். பின்னர் இரத்தத்தைப் பலிபீடத்தைச் சுற்றிலும் தெளித்தான். ௨௫ மோசே கொழுப்பையும், வாலையும், உட்பகுதி கொழுப்பையும், நுரையீரலை மூடியுள்ள கொழுப்பையும், இரண்டு சிறு நீரகங்களையும், அதன் மேல் உள்ள கொழுப்பையும், வலது கால் தொடையையும் எடுத்தான். ௨௬ கர்த்தரின் முன்பாகத் தினமும் வைக்கப்படும் புளிப்பில்லா அப்பக்கூடையிலிருந்து ஒரு புளிப்பான அப்பத்தையும், ஒரு எண்ணெய் கலந்த அப்பத்தையும், ஒரு மெல்லிய புளிப்பில்லா அடையையும் எடுத்தான். இவற்றை ஏற்கெனவே எடுத்த கொழுப்பின் மேலும் ஆட்டுத் தொடையின் மேலும் வைத்தான். ௨௭ பின்பு இவை எல்லாவற்றையும் எடுத்து ஆரோனின் கைகளிலும், அவனது மகன்களின் கைகளிலும் வைத்து அசைவாட்டும் பலியாகக் கர்த்தருக்கு முன்பாக அசைவாட்டினான். ௨௮ பின்பு அவற்றை அவர்கள் கைகளிலிருந்து எடுத்து, அவற்றைப் பலிபீடத்தின் மேலுள்ள தகன பலிக்குரிய இடத்தில் போட்டு எரித்தான். இது ஆரோனையும் அவனது மகன்களையும் ஆசாரியர்களாக நியமித்ததற்கான பலியாகும். இது நெருப்பால் எரிக்கப்பட்ட காணிக்கையாகும். இதன் மணம் கர்த்தருக்கு மிகவும் பிரியமானதாகும். ௨௯ மோசே மார்க்கண்டத்தை எடுத்து கர்த்தருக்கு முன்பாக அசைவாட்டும் பலியாக அசைவாட்டினான். இது மோசே ஆசாரியர்களை நியமித்ததற்காக அவனது பங்காகும். மோசேக்குக் கர்த்தர் இட்ட கட்டளையின்படியே இது இருந்தது.
௩௦ மோசே கொஞ்சம் அபிஷேக எண்ணெயையும் பலிபீடத்தில் உள்ள இரத்தத்தையும் எடுத்து, அவற்றை ஆரோனின் மேலும் அவனது ஆடைகளின் மேலும் தெளித்தான். பிறகு அவற்றை ஆரோனின் மகன்கள் மீதும் அவர்களின் ஆடைகள் மேலும் தெளித்தான். இவ்வாறு அவன் ஆரோன், அவனது மகன்கள், அவர்களின் ஆடைகள் அனைத்தையும் பரிசுத்தமாக்கினான்.
௩௧ பிறகு மோசே ஆரோனிடமும் அவனது மகன்களிடமும், “எனது கட்டளைகள் உங்களுக்கு நினைவிருக்கிறதா? ‘ஆரோனும் அவனது மகன்களும் இவற்றை உண்ண வேண்டும்’ என்று சொன்னேன். எனவே அப்பக் கூடையையும் ஆசாரியர்களாக நியமித்தற்கான காணிக்கை இறைச்சியையும் எடுத்துக்கொள்ளுங்கள். ஆசரிப்புக் கூடாரத்தின் நுழைவாசலிலேயே இறைச்சியை வேகவையுங்கள். அந்த இடத்திலேயே அப்பத்தையும் இறைச்சியையும் உண்ணுங்கள். நான் சொன்னபடியே செய்யுங்கள். ௩௨ அப்பத்திலும் இறைச்சியிலும் ஏதாவது மிஞ்சினால் அவற்றை எரித்துவிடுங்கள். ௩௩ ஆசாரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான சடங்கு ஏழு நாட்கள் நடைபெறும். எனவே ஏழு நாட்களும் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலைவிட்டு விலகக் கூடாது. ௩௪ இன்று நடந்தவை அனைத்தும் கர்த்தரின் கட்டளையின்படி நடந்தவை. உங்களை பரிசுத்தப்படுத்துவதற்காகவே அவர் இவ்வாறு கட்டளையிட்டுள்ளார். ௩௫ ஏழு நாட்களாக இரவும் பகலும் நீங்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலிலேயே இருக்க வேண்டும். நீங்கள் கர்த்தரின் கட்டளைக்குக் கீழ்ப்படியாவிட்டால் மரித்துப்போவீர்கள். கர்த்தர் எனக்கு இந்தக் கட்டளைகளைக் கொடுத்திருக்கிறார்” என்றான்.
௩௬ ஆரோனும் அவனுடைய மகன்களும் மோசேக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே செய்து முடித்தனர்.