௧௩
தோல் வியாதியைப்பற்றிய விதிகள்
௧ கர்த்தர் மோசேயிடமும் ஆரோனிடமும், ௨ “ஒரு மனிதனின் தோல்மீது வீக்கமோ அல்லது தடிப்போ, அல்லது வெள்ளைப் புள்ளியோ காணப்படலாம். அவை தொழுநோயின் அறிகுறியாய் இருந்தால் அவனை ஆசாரியனான ஆரோன் அல்லது அவனது மகன்கள் முன்னால் அழைத்துவர வேண்டும். ௩ ஆசாரியன் அவனது தோலில் ஏற்பட்ட நோயைக் கவனித்துப் பார்க்கவேண்டும். நோயுள்ள இடத்தின் முடிகள் வெளுத்திருந்தாலும் நோயுள்ள இடம் மற்ற தோலைவிட பள்ளமாக இருந்தாலும் அந்நோய் தொழுநோயாக இருக்கும். எனவே ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று அறிவிக்க வேண்டும்.
௪ “சில நேரங்களில் நோயாளியின் உடம்பில் வெள்ளைப் புள்ளிகள் ஏற்படலாம். ஆனால் அவை தோலின் பரப்பைவிட ஆழமாக இல்லாமல் இருக்கலாம். அப்பகுதியிலுள்ள முடி வெள்ளை ஆகாமல் இருக்கலாம். அப்போது, ஆசாரியன் அந்நோயாளியைத் தனியாக ஏழு நாட்கள் ஒதுக்கி வைத்திருக்க வேண்டும். ௫ ஏழாவது நாளில் ஆசாரியன் நோயாளியைக் கவனித்துப் பார்க்க வேண்டும். அப்போது புண் மாறியிருக்காவிட்டாலோ, தோலில் மேலும் பரவி இருக்காவிட்டாலோ மேலும் ஏழு நாட்களுக்கு அந்நோயாளியைத் தனியே வைத்திருக்க வேண்டும். ௬ அந்த ஏழு நாட்களும் முடிந்த பிறகு ஆசாரியன் அந்த நோயாளியை மீண்டும் பார்க்கவேண்டும். அப்போது புண்கள் ஆறி இருந்தாலோ, மற்ற பகுதிகளில் பரவாமல் இருந்தாலோ ஆசாரியன் அவன் குணமாகிவிட்டதை அறிவிக்க வேண்டும். அந்தப் புண் வெறும் வடு மட்டுமே. அவன் தன் ஆடைகளைத் தோய்த்து மீண்டும் சுத்தமாக இருக்க வேண்டும்.
௭ “நோயாளி தன்னை ஆசாரியனிடம் காட்டி சுத்தமுள்ளவனாகத் தீர்மானித்த பிறகும் ஒரு வேளை வெண்திட்டு உடலில் பரவலாம். அதையும் ஆசாரியனிடம் காட்ட வேண்டும். ௮ அப்பொழுது வெண்திட்டு தோலிலே படர்ந்து வருகிறது என்று ஆசாரியன் கண்டால் அவனைத் தீட்டானவன் என்று அறிவிக்க வேண்டும். அது தொழுநோய் ஆகும்.
௯ “ஒருவனுக்குத் தொழுநோய் ஏற்பட்டால் அவனை ஆசாரியனிடம் கொண்டு வர வேண்டும். ௧௦ ஆசாரியன் அவனைச் சோதித்துப் பார்க்க வேண்டும். தோலிலே வெள்ளைத் தடிப்புகள் இருந்தாலும், முடி வெண்மையாகியிருந்தாலும், தோலானது கொப்புளங்களில் காய்ந்து இருந்தாலும் ௧௧ அது நெடுநாளாகவே அவன் தோலில் உள்ள தொழுநோயாகவே கருதப்பட வேண்டும். ஆசாரியன் உடனே அவனைத் தீட்டுள்ளவன் என்று அறிவிக்க வேண்டும். அந்நோயாளியை மற்றவர்களிடமிருந்து கொஞ்சக்காலம் தனியே பிரித்துவைக்க வேண்டிய தேவையில்லை. ஏனென்றால் அவன் ஏற்கெனவே தீட்டுள்ளவன்.
௧௨ “சில வேளைகளில் தொழுநோயானது ஒருவனின் உடல் முழுவதும் பரவியிருக்கலாம். தலை முதல் கால்வரை அந்நோய் அவனை மூடி இருக்கலாம். ஆசாரியன் அவனை முழுமையாகச் சோதித்துப் பார்க்க வேண்டும். ௧௩ அவனது உடல் முழுவதும் வெள்ளையாகியிருந்தால் அவனைச் சுத்தமுள்ளவன் என்று ஆசாரியன் அறிவிக்க வேண்டும். ௧௪ எனினும் கொஞ்சம் புண்நிறைந்த தோல் இருந்தால் அவன் தீட்டுள்ளவனே. ௧௫ ஆசாரியன் அதனைக் கண்டதும் அவனைத் தீட்டுள்ளவனாக அறிவிக்க வேண்டும் புண்நிறைந்த தோல் தீட்டுள்ளது. அது தொழுநோய்.
௧௬ “தோலின் நிறம்மாறி வெண்மையானால் பின் அவன் ஆசாரியனிடம் வரவேண்டும். ௧௭ ஆசாரியன் அவனைச் சோதித்துப் பார்க்க வேண்டும். நோயுள்ள இடம் வெண்மையாகியிருந்தால் அவனது நோய் குணமாகிவிட்டதென்று பொருள். எனவே, அவனைத் தீட்டு இல்லாதவன் என்று ஆசாரியன் அறிவிக்க வேண்டும்.
௧௮ “ஒருவனுக்குத் தோலின் மேல் புண் ஏற்பட்டு அது குணமாகலாம். ௧௯ அதே புண் பிற்பாடு வெள்ளைத் தடிப்பாகவோ அல்லது சிவந்த நிறத்தில் வெண் புள்ளிகளாகவோ மாறக்கூடும். அப்படி நேரும்போது அப்புண்ணை ஆசாரியனிடத்தில் காட்ட வேண்டும். ௨௦ ஆசாரியன் அவற்றைச் சோதித்துப் பார்க்க வேண்டும். அப்புண்ணானது தோலின் பரப்பைவிட ஆழமாக இருந்தாலோ, அதிலுள்ள முடிகள் வெண்மையானாலோ அது தொழுநோய் என்றே கருதப்பட வேண்டும். உடனே அவனைத் தீட்டுள்ளவனாக அறிவிக்க வேண்டும். அது புண்ணில் ஏற்பட்ட தொழுநோயாகும். தொழுநோயானது அப்புண்ணின் உள்ளிருந்து உருவாகியுள்ளது. ௨௧ சோதிப்பின்பொழுது தடிப்பின் மேற் பகுதியில் வெள்ளை முடி இல்லாதிருந்தாலும், தோலில் அவ்வளவு ஆழமற்றதாக ஆனால் வெளுத்து இருந்தாலும், ஆசாரியன் அவனை ஏழு நாட்கள் தனியே பிரித்து வைக்கவேண்டும். ௨௨ பின்பு வெள்ளைத் தடிப்பு அதிக அளவில் தோலில் படர்ந்திருந்தால், ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று அறிவிக்க வேண்டும். அது தொழுநோய்தான். ௨௩ அந்த வெள்ளைப்படரானது அதிகப்படாமல் பழைய அளவில் நின்றிருக்குமானால் அதுவெறும் புண்ணின் தழும்புதான். எனவே அவனைச் சுத்தமுள்ளவன் என்று ஆசாரியன் அறிவிக்கவேண்டும்.
௨௪-௨௫ “ஒருவனது உடம்பின் மேல் நெருப்புப்பட்டு வெந்து அது ஆறிப்போன இடத்தில் தோலில் நிறம் இழந்தோ, அல்லது வெண்மையாகவோ இருக்கலாம். ஆசாரியன் அதனைச் சோதித்துப் பார்க்க வேண்டும். வெண்மையான தடிப்பு தோலுக்கு அடியில் ஆழமாக இருந்தாலும் தடிப்பின் மேல் உள்ள முடியின் பரப்பு வெளுத்திருந்தாலும், அதைத் தொழுநோயாகக் கருதலாம். தொழுநோய் வெந்த இடத்தில் வெளிப்பட்டு வளர்ந்து பெருகிவிட்டது. ஆகவே ஆசாரியன் அவனைத் தொழுநோயாளி என்று அறிவிக்கலாம். ௨௬ ஆசாரியன் சோதித்துப் பார்க்கும்போது, படரிலே வெள்ளை முடி இல்லை என்றாலோ அல்லது படர் மற்றப் பகுதிகளைவிடக் குழியாமல் இருந்தால் அவனை ஏழு நாள் தனியே பிரித்து வைத்திருக்க வேண்டும். ௨௭ ஏழாம் நாளில் அவனை மீண்டும் சோதித்துப் பார்க்க வேண்டும். அது தோலில் அதிகமாகப் பரவியிருந்தால் ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று அறிவிக்க வேண்டும். அது தொழுநோய்தான். ௨௮ தோலில் படரானது பரவாமல் இருந்தாலோ அல்லது படர் மற்ற பகுதிகளைவிடப் பள்ளமாக இல்லாமல் இருந்தாலோ அது வெந்ததால் உண்டான கொப்புளம் என்று எண்ண வேண்டும். அவனை ஆசாரியன் சுத்தமானவன் என்று அறிவிக்க வேண்டும்.
௨௯ “ஒருவனுக்குத் தலையில் அல்லது தாடியில் எரிச்சல் உண்டாகலாம். ௩௦ ஆசாரியன் அதனைச் சோதித்து பார்க்க வேண்டும். அவ்விடம் மற்ற தோலைவிட பள்ளமும் அதிலே உள்ள முடிகள் பொன்நிறமும், மிருதுவாயும் இருந்தால் அவனைத் தீட்டுள்ளவன் என்று அறிவிக்க வேண்டும். அது சொறி தொழுநோய். ௩௧ ஆசாரியன் இதனைப் பார்க்கும் போது அவ்விடம் மற்ற தோலைவிட பள்ளமாய் இராமல் இருக்கலாம். அதிலே கறுமை யான முடிகள் இல்லாமல் இருக்கலாம். அவ்வாறானால் அவனை ஏழு நாட்கள் தனியே அடைத்து வைக்க வேண்டும். ௩௨ ஏழாவது நாள் அப்புண்ணை ஆசாரியன் மீண்டும் சோதித்துப் பார்க்க வேண்டும். அந்த நோய் பரவாமல் இருந்தாலோ அல்லது பொன் நிறமாக முடி மாறாமல் இருந்தாலோ அல்லது நோயுள்ள இடம் மற்ற தோல் பகுதியை விடப் பள்ளம் இல்லாமல் இருந்தாலோ, ௩௩ அவன் சொறியுள்ள இடம் தவிர மற்ற இடத்தை மழித்துக்கொள்ள வேண்டும். மேலும் அவனை ஏழு நாள் தனியே பிரித்து வைக்க வேண்டும். ௩௪ ஏழாம் நாளில் ஆசாரியன் மீண்டும் சோதித்து பார்க்கும்போது சொறி பரவாமலும், அவ்விடம் மற்ற இடங்களைவிடப் பள்ளமில்லாமலும் இருந்தால் அவனை ஆசாரியன் சுத்தமுள்ளவன் என்று அறிவிக்க வேண்டும். அவன் தன் ஆடைகளைத் துவைத்தபின் சுத்தமாய் இருப்பான். ௩௫ ஆனால் அந்தச் சொறி அதற்குப்பிறகு பரவினால் ௩௬ மீண்டும் ஆசாரியன் அவனைச் சோதிக்க வேண்டும். சொறி தோலில் பரவியிருந்தாலோ, முடியும் பொன் நிறமாகியிருந்தாலோ ஆசாரியன் மறுபடியும் சோதிக்க வேண்டியதில்லை. அவன் தீட்டுள்ளவனே. ௩௭ அவன் சோதிக்கும்போது சொறி நீங்கியிருந்தால், கறுமையான முடிகள் முளைத்திருந்தால் சொறி குணமாயிற்று என்று பொருள். அவன் சுத்தமானவன். ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று அறிவிக்க வேண்டும்.
௩௮ “யாராவது ஒருவனுக்கு உடல்மீது வெள்ளைப் புள்ளிகள் ஏற்பட்டால், ௩௯ அதனை ஆசாரியன் சோதித்து பார்க்க வேண்டும். தோலில் மங்கின வெள்ளைப் புள்ளிகள் இருந்தால் அது அவ்வளவாகப் பாதிப்பற்ற வெள்ளைத் தேமல். அவனும் சுத்தமுள்ளவனே.
௪௦ “ஒருவனுடைய தலைமுடி உதிரக்கூடும், அவன் சுத்தமானவனே. அது ஒரு வகை வழுக்கை ஆகும். ௪௧ தலையைச் சுற்றியுள்ள பகுதியில் இருந்து முடி உதிரக்கூடும். அவனும் சுத்தமானவனே, அதுவும் இன்னொரு வகை வழுக்கை ஆகும். ௪௨ ஆனால் வழுக்கையான இடத்தில் சிவப்பாகவோ அல்லது வெண்மையாகவோ தடிப்புகள் இருக்குமேயானால், அது தோல் வியாதி ஆகும். ௪௩ ஆசாரியன் அதனைச் சோதிக்க வேண்டும். அவனது வழுக்கைத் தலையிலாவது அரை வழுக்கைத் தலையிலாவது மற்ற உறுப்புகளின் மேல் உண்டாகும் குஷ்டத்தைப்போல் சிவப்பு கலந்த வெண்மையான தடிப்பு இருந்தால் அவன் தொழுநோயாளி. ௪௪ அவன் தீட்டுள்ளவன் என்று ஆசாரியன் அறிவிக்க வேண்டும். அவனது நோய் தலையில் உள்ளது.
௪௫ “ஒருவனுக்கு தொழுநோய் இருந்தால் அவன், மற்றவர்களை எச்சரிக்க வேண்டும். அவன் ‘தீட்டு தீட்டு’ என்று கத்த வேண்டும். அவனது ஆடைகள் கிழிக்கப்பட்டிருக்க வேண்டும். அவன் தன் தலை முடியை நன்றாக வளர்க்க வேண்டும். அவன் தன் வாயை மூடி மறைத்துக்கொண்டிருக்க வேண்டும். ௪௬ அந்நோய் அவனிடம் இருக்கும்வரை அவன் தீட்டுள்ளவனாகக் கருதப்படுகிறான். எனவே அவன் தனியே குடியிருக்க வேண்டும். அவன் வீடு கூடாரத்திற்கு அப்பால் இருக்க வேண்டும்.
௪௭-௪௮ “ஆட்டுமுடி அல்லது பஞ்சால் ஆன ஆடையில் நோய் இருக்கும். அந்த ஆடை நெய்யவோ பின்னவோபட்டிருக்கலாம். தோல் துண்டிலோ அல்லது தோலால் ஆன ஆடையிலோ நோய் இருக்கும். ௪௯ அதில் பச்சை அல்லது சிவப்புப் புள்ளிகள் காணப்பட்டால் அதை ஆசாரியனுக்குக் காட்ட வேண்டும். ௫௦ ஆசாரியன் அதைச் சோதித்துப் பார்த்துவிட்டு ஏழு நாட்கள் தனியே அடைத்து வைக்கவேண்டும். ௫௧ ஏழாம் நாள் ஆசாரியன் அவனைச் சோதித்துப் பார்க்க வேண்டும். ஆடையிலாவது பாவிலாவது, தோல் துண்டிலாவது, தோலால் ஆன ஆடையிலாவது அது அதிகப்பட்டிருந்தால் அது அரிக்கிற தொழுநோய் என்று கருதலாம். அது தீட்டு உள்ளது. ௫௨ அந்த நோய் இருக்கிற மயிராடை, நூலாடை, தோலாடை போன்றவற்றை ஆசாரியன் சுட்டெரிக்க வேண்டும். இது அரிக்கிற தொழுநோய். எனவே அதனை நெருப்பில் சுட்டெரிக்க வேண்டும்.
௫௩ “ஆசாரியன் சோதிப்பின்போது அரிப்பானது மேலும் பரவவில்லை என்பது உறுதியானால், அந்த ஆடையையோ அல்லது தோலையோ துவைக்க வேண்டும். அது தோலா அல்லது துணியா அல்லது நெய்யப்பட்டதா அல்லது பின்னப்பட்டதா என்பதில் வித்தியாசமில்லை. ௫௪ பிறகு தோல் ஆடையை அல்லது துணியைத் துவைக்கும்படி ஆசாரியன் ஜனங்களுக்கு ஆணையிட வேண்டும். பிறகு துணியை ஏழு நாட்களுக்குப் பிரித்துத் தனியே வைக்க வேண்டும். ௫௫ அதற்குப் பின்பு அதை மீண்டும் சோதிக்க வேண்டும். அந்த அரிப்பானது நிறம் மாறாமல் இருந்தால் அது தீட்டு என எண்ண வேண்டும். அரிப்பு பரவாமல் போனாலும் கூட, அதை நெருப்பில் சுட்டெரிக்க வேண்டும்.
௫௬ “தோல் ஆடையை அல்லது துணியைப் பார்க்கும்போது அரிப்புப் பகுதி மங்கியிருந்தால், அரித்த பகுதியை மட்டும் தோலாடையில் இருந்தும் அல்லது துணியில் இருந்தும் நெய்யப்பட்ட துணியா அல்லது பின்னப்பட்ட துணியா என்று பாராமல் ஆசாரியன் தனியே வெட்டி எடுக்க வேண்டும். ௫௭ அரிப்பானது மீண்டும் துணியிலோ அல்லது தோல் ஆடையிலோ வரக் கூடும். அப்போது அத்துணியை அல்லது தோலை நெருப்பில் சுட்டெரிக்க வேண்டும். ௫௮ கழுவிய பிறகு அந்நோய் அதைவிட்டு போய்விட்டதென்றால், மீண்டும் கழுவப்பட வேண்டும். அப்போதுதான் அது சுத்தமாகும்” என்றார்.
௫௯ இவையே, தோலாடை அல்லது நூலாடை, பின்னப்பட்டது அல்லது நெய்யப்பட்ட ஆடைகளின் மேல் தோன்றும் தொழுநோய் பற்றிய விதிகள் ஆகும் என்று கூறினார்.