உழவன்-விதை பற்றிய உவமை
(மத். 13:1-9; லூ. 8:4-8)
௧ இயேசு மறுபடியும் கடற்கரையோரத்தில் போதிக்கத் தொடங்கினார். ஏராளமான மக்கள் இயேசுவைச் சூழ்ந்துகொண்டார்கள். ஆகையால் இயேசு படகில் ஏறி ஏரிக்குள் சென்றார். எல்லா மக்களும் ஏரிக்கரையில் நின்றுகொண்டனர். ௨ இயேசு படகில் இருந்த வண்ணம் மக்களுக்குப் போதிக்கத் தொடங்கினார். அவர் மக்களுக்குப் போதிக்கும் பொருட்டு பல உவமைகளைப் பயன்படுத்தினார்.
௩ அவர் சொன்னார், “கேளுங்கள், ஓர் உழவன் தன் விதையை விதைக்கச் சென்றான். ௪ உழவன் விதைத்துக் கொண்டு இருக்கும்போது சில விதைகள் பாதையில் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றைத் தின்றுவிட்டுச் சென்றன. ௫ சில விதைகள் பாறை போன்ற நிலத்தில் விழுந்தன. அதில் போதிய ஆழமான மண்ணில்லை. அதனால் அந்த விதைகள் வேகமாக முளைத்தன. ௬ ஆனால் சூரியன் ஏற வெப்பத்தால் அவை கருகிவிட்டன. அவற்றுக்கு ஆழமான வேர் இல்லாததால் பிழைக்கவில்லை. ௭ சில விதைகள் முட்புதர்களில் விழுந்தன. முட்புதர்கள் வளர்ந்து, விதைகள் முளைத்து வளராதபடி முடக்கிவிட்டன. எனவே, விதைகள் தானியங்களைத் தரவில்லை. ௮ சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. விதைகள் அவற்றில் நன்றாக வளர ஆரம்பித்தன. அவை வளர்ந்து பலன் தர ஆரம்பித்தது. சில செடிகள் முப்பது தானியங்களையும், சில அறுபது தானியங்களையும், சில நூறு தானியங்களையும் தந்தன,”
௯ பிறகு இயேசு, “நான் சொல்வதைக் கேட்கத்தக்கவர்கள் கவனிக்கட்டும்” என்றார்.
உவமைகள் ஏன்-விளக்கம்
(மத். 13:10-17; லூ. 8:9-10)
௧௦ பிறகு இயேசு மக்களைவிட்டுத் தொலைவாகச் சென்றார். பன்னிரண்டு சீஷர்களும் மற்றும் அவரைச் சுற்றி இருந்தவர்களும் அவர் பயன்படுத்தும் உவமைகளைப் பற்றிக் கேட்டார்கள்.
௧௧ இயேசு, “உங்களால் மட்டுமே தேவனின் இராஜ்யத்தைப் பற்றிய இரகசிய உண்மைகளை அறிந்து கொள்ளமுடியும். ஆனால் மற்ற மக்களால் அறிந்துகொள்ள இயலாது. எனவே நான் அவர்களுக்கு உவமைகளின் மூலம் கூறுகிறேன். ௧௨ நான் இதனைச் செய்கிறேன். ஏனென்றால்:
 
“ ‘அவர்கள் பார்ப்பார்கள், பார்ப்பார்கள். ஆனால் உண்மையில் ஒருபோதும் பார்க்க முடியாது.
அவர்கள் கேட்பார்கள், கேட்பார்கள். ஆனால் ஒருபோதும் புரிந்துகொள்ளமாட்டார்கள்.
அவர்கள் பார்த்துப் புரிந்துகொண்டிருப்பார்களேயானால் அவர்கள் மாறி இருக்கக்கூடும்,
மன்னிக்கப்பட்டிருக்கவும்கூடும்’ ” ஏசாயா 6:9-10
என்றார்.
விதைபற்றிய உவமை-விளக்கம்
(மத். 13:18-23; லூ. 8:11-15)
௧௩ இயேசு தன் சீஷர்களிடம், “உங்களால் இந்த உவமையைப் புரிந்துகொள்ள முடிகிறதா? முடியாவிடில் மற்ற உவமைகளை நீங்கள் எப்படி புரிந்துகொள்ளப் போகிறீர்கள்? ௧௪ இதில் உழவன் என்பவன் தேவனுடைய போதனைகளை மக்களிடம் நடுபவனே. ௧௫ சில நேரங்களில் அப்போதனை வழிப்பாதையில் விழும். சிலர் தேவனின் போதனைகளைக் கேட்பார்கள். ஆனால் சாத்தான் வந்து அப்போதனை வளராதபடி எடுத்துச் சென்றுவிடுவான்.
௧௬ “பாறைகளில் விழுந்த விதைகளைப்போலச் சிலர் காதில் போதனை விழுகின்றன. அவர்கள் அவற்றை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வர். ௧௭ ஆனால் அவர்கள் அப்போதனைகள் அவர்களது வாழ்வில் ஆழமாகச் செல்ல அனுமதிக்கமாட்டார்கள். அவர்கள் அவற்றைக் கொஞ்ச காலமே வைத்திருப்பர். ஆனால் அந்தப் போதனையை ஏற்றதால் கஷ்டமோ, பிறர் மூலம் துன்பமோ வரும்போது அவர்கள் அவற்றை உடனே கைவிட்டு விடுவர்.
௧௮ “இன்னும் சிலரோ, முட்செடிகளில் விழுந்த விதைகளைப்போன்று போதனையைக் கேட்டுக்கொள்கின்றனர். ௧௯ வாழ்க்கைத் துன்பங்களும், பண ஆசைகளும் பிற எல்லாவிதமான காரியங்களின் மீதுள்ள விருப்பங்களும் இவர்களிடம் போதனைகள் வளராமல் செய்துவிடுகின்றன. எனவே இவர்கள் வாழ்க்கையில் போதனை எந்தவிதமான பலனையும் உண்டாக்குவதில்லை.
௨௦ “மற்றவர்கள் நல்ல நிலத்தில் விழுந்த விதைகளைப் போன்று இருக்கின்றனர். அவர்கள் போதனையைக் கேட்டு, ஏற்றுக்கொள்கின்றனர். அவர்கள் முப்பது மடங்காகவும், சிலர் அறுபது மடங்காகவும், சிலர் நூறு மடங்காகவும் பலன் தருகின்றனர்” என்றார்.
இருப்பதைப் பயன்படுத்துதல்
(லூ. 8:16-18)
௨௧ மேலும் இயேசு, “நீங்கள் விளக்கை எடுத்து மரக்காலுக்கு (பாத்திரத்துக்கு) அடியிலோ, படுக்கையின் அடியிலோ மறைத்து வைப்பீர்களா? இல்லை. நீங்கள் விளக்கை மேஜையின் மீதே வைப்பீர்கள். ௨௨ மறைக்கப்படுகிற எந்தக் காரியமும் வெளியே வரும். எல்லா இரகசியங்களும் தெரிவிக்கப்படும். ௨௩ கேட்க முடிந்தவர்கள், நான் சொல்வதைக் கவனித்துக் கேளுங்கள். ௨௪ நீங்கள் கேட்கிறவற்றைப் பற்றிக் கவனமாய் சிந்தியுங்கள். நீங்கள் எப்படிக் கொடுக்கிறீர்களோ அந்தப்படியே தேவன் உங்களுக்குக் கொடுப்பார். ஆனால் நீங்கள் கொடுப்பதைக் காட்டிலும் அதிகமாக தேவன் உங்களுக்குக் கொடுப்பார். ௨௫ ஏற்கெனவே உள்ளவன் மேலும் பெற்றுக்கொள்வான். எவனிடம் மிகுதியாக இல்லையோ அவனிடமிருந்து இருக்கும் சிறு அளவும் எடுத்துக்கொள்ளப்படும்.”
விதை பற்றிய உவமை
௨௬ பிறகு இயேசு, “தேவனுடைய இராஜ்யமானது ஒரு மனிதன் நிலத்தில் விதைக்கும் ஒரு விதையைப் போன்றது. ௨௭ விதையானது வளரத்தொடங்கும். அது இரவும் பகலும் வளரும். அந்த மனிதன் விழித்திருக்கிறானா அல்லது தூங்குகிறானா என்பது முக்கியமல்ல. விதை வளர்ந்து கொண்டே இருக்கும். விதை எவ்வாறு வளர்கிறது என்பதும், அந்த மனிதனுக்குத் தெரியாது. ௨௮ எவ்வித உதவியும் இல்லாமல் அந்த நிலம் விதையை வளர்க்கிறது. முதலில் விதையில் இருந்து செடி முளைக்கிறது. பிறகு கதிர், அதன் பிறகு கதிர் முழுதும் தானியங்கள். ௨௯ தானியம் விளைந்ததும் மனிதன் அவற்றை அறுவடை செய்கிறான். இது அறுவடைக் காலம்” என்றார்.
கடுகு விதையின் உவமை
(மத். 13:31-32; 34-35; லூ. 13:18-19)
௩௦ மேலும் இயேசு, “தேவனுடைய இராஜ்யம் எத்தகையது என்று உங்களுக்குப் புரிய வைக்க நான் எந்த உவமையைப் பயன்படுத்துவேன்? ௩௧ தேவனுடைய இராஜ்யம் ஒரு கடுகு விதையைப் போன்றது. கடுகு மிகச் சிறிய விதைதான். அதை நிலத்தில் விதைக்கிறீர்கள். ௩௨ ஆனால் இதை நீங்கள் விதைத்த பிறகு அது வளர்ந்து, உங்கள் தோட்டத்தில் உள்ள அனைத்துச் செடிகளையும் விட பெரியதாகும். அதன் கிளைகள் மிகப் பெரிதாக விரியும். காட்டுப் பறவைகள் அதன் கிளைகளில் கூடுகட்டித் தங்கமுடியும். அத்தோடு அவைகளை வெயிலில் இருந்தும் பாதுகாக்கும்” என்றார்.
௩௩ மக்களுக்குப் போதிக்கும் பொருட்டு இது போன்ற பல உவமைகளையும் இயேசு பயன்படுத்தினார். அவர்களுக்குப் புரிகிற வகையில் அவர் கற்றுத்தந்தார். ௩௪ இயேசு எப்பொழுதும் உவமைகளை உபயோகித்து மக்களுக்குப் போதித்தார். தன் சீஷர்களோடு தனியாக இருக்கும்போது, எல்லாவற்றையும் அவர்களுக்கு விவரித்துச் சொன்னார்.
புயலை அமர்த்துதல்
(மத். 8:23-27; லூ. 8:22-25)
௩௫ அன்று மாலையில் இயேசு தன் சீஷர்களிடம், “என்னோடு வாருங்கள். இக்கடலைக் கடந்து அக்கரைக்குச் செல்வோம்” என்றார். ௩௬ இயேசுவும் அவரது சீஷர்களும் அங்கே மக்களை விட்டுவிட்டுச் சென்றனர். இயேசு ஏற்கெனவே இருந்த படகிலேயே அவர்கள் ஏறிச் சென்றனர். அவர்களோடு வேறு பல படகுகளும் இருந்தன. ௩௭ மோசமான காற்று வீச ஆரம்பித்தது. அதனால் பெரும் அலைகள் எழும்பி, படகின் வெளியேயும், உள்ளேயும், தாக்க ஆரம்பித்தன. படகில் நீர் நிறையத் தொடங்கியது. ௩௮ இயேசு கப்பலின் பின்பகுதியில் தலையணையில் தலை வைத்துப் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார். சீஷர்கள் அவரிடம் போய் அவரை எழுப்பினார்கள். அவர்கள், “போதகரே, உங்களுக்கு எங்களைப் பற்றிய அக்கறை இல்லையா? நாங்கள் மூழ்கும் நிலையில் உள்ளோம்” என்றனர்.
௩௯ இயேசு எழுந்து புயலுக்கும், அலைகளுக்கும் ஆணையிட்டார். “இரையாதே, அமைதியாய் இரு” என்று இயேசு ஆணையிட்டார். உடனே புயல் நின்றது. கடலும் அமைதியானது.
௪௦ இயேசு தம் சீஷர்களிடம், “நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் விசுவாசம் இல்லையா?” என்று கேட்டார்.
௪௧ சீஷர்கள் பெரிதும் அஞ்சினர். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து, “இவர் எத்தகைய மனிதர்? காற்றும் கடலும் கூட இவருக்குக் கீழ்ப்படிகிறதே” என்றனர்.