௧௩
௧ ஒரு ஞானமுள்ள மகன், தான்செய்யவேண்டியது என்னவென்று தன் தந்தை கூறும்போது அவன் அதனைக் கவனமாகக் கேட்பான். ஆனால் வீண் பெருமையுள்ளவனோ, ஜனங்கள் தன்னைத் திருத்த முயலும்போது கவனிப்பதில்லை.
௨ நல்லவர்கள், தாம் சொல்லுகிற நல்லவற்றுக்காகத் தகுந்த வெகுமதிகளை அடைகிறார்கள். ஆனால் தீயவர்களோ எப்பொழுதும் தவறானவற்றைச் செய்ய விரும்புகின்றனர்.
௩ ஒருவன் தான் சொல்லுகின்றவற்றில் எச்சரிக்கையோடு இருந்தால் அது அவன் வாழ்வைக் காப்பாற்றும். ஆனால் சிந்தித்துப் பார்க்காமல் பேசுகின்றவர்களின் வாழ்க்கை அழிந்துப்போகும்.
௪ சோம்பேறி பலவற்றை விரும்புவான், ஆனால் அவனால் அவற்றை அடைய முடிவதில்லை. ஆனால் கடின மாக உழைக்கிறவர்கள் தாம் விரும்புவதைப் பெற் றுக்கொள்வார்கள்.
௫ நல்லவர்கள் பொய்யை வெறுக்கிறார்கள். தீயவர்களோ அவமானமடைவார்கள்.
௬ நல்ல குணமானது நேர்மையானவர்களைக் காப்பாற்றுகிறது. ஆனால் தீமையோ பாவங்களை நேசிக்கிறவர்களைத் தோற்கடிக்கும்.
௭ சிலர் செல்வந்தர்களைப்போன்று நடிக்கிறார்கள். ஆனால் அவர்களிடம் எதுவுமில்லை. மற்றும் சிலரோ ஏழையைப் போன்று நடிக்கிறார்கள். ஆனால் அவர்கள் உண்மையில் செல்வந்தர்களாக இருப்பார்கள்.
௮ செல்வமுள்ளவன் சில சமயங்களில் தன் உயிரைக் காப்பாற்ற ஒரு தொகையைச் செலுத்த வேண்டியதாயிருக்கும். ஆனால் ஏழைக்கு இதுபோன்ற மிரட்டல்கள் எதுவும் ஏற்படாமல் இருக்கும்.
௯ ஒரு நல்லவன் பிரகாசமாக எரிகிற விளக்கைப் போன்றவன். கெட்டவனோ இருண்டு போகிற விளக்கைப்போன்றவன்.
௧௦ மற்றவர்களைவிட தம்மைச் சிறந்தவர்களாக நினைப்பவர்கள் துன்பத்தையே உருவாக்குகிறார்கள். ஆனால் மற்றவர்கள் சொல்வதைக் கவனிப்பவர்கள் ஞானம் உடையவர்கள்.
௧௧ ஒருவன் பணம் பெறுவதற்காக மற்றவனை ஏமாற்றலாம். பிறகு அப்பணமும் அவனை விட்டு உடனடியாகப் போய்விடும். ஆனால் கடினமாக சம்பாதிக்கிறவனின் பணமானது மென்மேலும் வளர்ந்து பெருகும்.
௧௨ நம்பிக்கை எதுவும் இல்லாவிட்டால் மனம் சோர்வடையும். நீ விரும்புவதுபோல எல்லாம் நடந்தால் நீ மகிழ்ச்சியால் நிரப்பப்படுவாய்.
௧௩ மற்றவர்கள் உதவிசெய்ய முயற்சிக்கும் போது ஒருவன் அவர்களது வார்த்தைகளைக் கவனிக்காமல் புறக்கணித்தால், பிறகு அவன் தனக்குத்தானே துன்பத்தை வர வழைத்துக்கொள்கிறான். ஆனால் மற்றவர்கள் சொல்வதைக் கவனிக்கிறவன் அதற்கு தகுந்த வெகுமதியைப் பெறுகிறான்.
௧௪ ஞானம் உள்ளவனின் போதனைகள் வாழ்வைத் தரும். அந்த வார்த்தைகள் துன்ப காலத்தில் உதவும்.
௧௫ புரிந்துகொள்ளும் நல்ல உணர்வுள்ளவர்களை ஜனங்கள் விரும்புவார்கள். ஆனால் நம்ப முடியாதவர்கள் வாழ்வு கடினமாகிப்போகிறது.
௧௬ ஞானமுள்ளவர்கள் எதையும் செய்வதற்கு முன் சிந்திக்கிறார்கள். ஆனால் அறிவில்லாதவர்களோ, தம் செயல்கள் மூலம் தமது முட்டாள்தனத்தைக் காட்டிக்கொள்வார்கள்.
௧௭ ஒரு தூதுவனை நம்ப முடியாவிட்டால் அவனைச் சுற்றிலும் துன்பங்களே ஏற்படும். ஆனால் ஒருவன் நம்பிக்கைக்கு உரியவனாக இருந்தால் சமாதானம் உண்டாகும்.
௧௮ ஒருவன் தன் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள மறுத்தால், அவன் ஏழையாகவும் அவமானத்துக்குரியவனாகவும் இருப்பான். ஆனால் தான் விமர்சிக்கப்படும்போதும் தண்டனைக்குட்படும் போதும் கவனிக்கிறவன் பயன் அடைகிறான்.
௧௯ ஒருவன் ஒன்றை விரும்பி, அதனைப் பெற்றுக்கொண்டால் அவன் மகிழ்ச்சி அடைகிறான். ஆனால் முட்டாள்களோ தீயதை விரும்பி, மாற மறுக்கிறார்கள்.
௨௦ ஞானமுள்ளவர்களோடு நட்பாக இரு, நீயும் ஞானம் அடைவாய். ஆனால் நீ முட்டாள்களை நண்பர்களாக்கினால் உனக்குத் துன்பங்கள் ஏற்படும்.
௨௧ பாவிகள் எங்கே போனாலும் துன்பங்கள் அவர்களைத் துரத்தும். ஆனால் நல்லவர்களுக்கு நல்லவையே நடக்கும்.
௨௨ நல்லவர்களுக்குத் தம் பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் கொடுக்கிற அளவிற்குச் செல்வம் இருக்கும். தீயவர்களிடம் உள்ள அனைத்தையும் முடிவில் நல்லவர்கள் பெற்றுக்கொள்வார்கள்.
௨௩ ஒரு ஏழை, ஏராளமான விளைச்சலைத் தரும் நல்ல நிலத்தை வைத்திருக்கலாம், ஆனால் அவன் தவறான தீர்மானங்கள் செய்தால் பட்டினியாக இருப்பான்.
௨௪ ஒருவன் உண்மையாகவே தன் பிள்ளைகளை நேசித்தால், அவர்கள் தவறு செய்யும் போது அவற்றைத் திருத்தவேண்டும். நீ உன் மகனை நேசித்தால் அவனுக்குச் சரியான பாதையைப் போதிக்க வேண்டும்.
௨௫ நல்லவர்கள், தமக்கு எது தேவையோ அவற்றைப் பெற்றுக்கொள்வார்கள். ஆனால் தீயவர்களோ, முக்கியமானவற்றைப் பெறாமலேயே இருப்பார்கள்.