௧௫
தாவீதின் பாடல்
௧ கர்த்தாவே, உமது பரிசுத்த கூடாரத்தில் யார் வாழக்கூடும்?
உமது பரிசுத்த மலைகளில் யார் வாழக்கூடும்?
௨ தூய வாழ்க்கை வாழ்ந்து, நற்செயல்களை செய்பவனும்,
உள்ளத்திலிருந்து உண்மையைப் பேசுபவனும் உமது மலையில் வாழமுடியும்.
௩ அம்மனிதன் பிறரைக் குறித்துத் தீமை கூறான்.
அம்மனிதன் அயலானுக்குத் தீங்கு செய்யான்.
அம்மனிதன் அவன் குடும்பத்தைக் குறித்து வெட்கம் தரும் மொழிகளைச் சொல்லான்.
௪ தேவனை வெறுப்போரை அவன் மதியான்.
ஆனால் கர்த்தரைச் சேவிப்போரையெல்லாம் அம்மனிதன் மதிப்பான்.
அவன் அயலானுக்கு வாக்களித்தால்
அவற்றைச் சரியாகக் கடைப்பிடிப்பான்.
௫ அவன் கடன் கொடுத்தால், வட்டி கேளான்.
குற்றமற்ற மனிதருக்குத் தீங்கிழைப்பதற்கு அவன் பணம் பெறான்.
 
அந்த நல்ல மனிதனைப்போல வாழும் ஒருவன் எப்போதும் நீங்காது தேவனுடைய அருகே இருப்பான்.