௩௬
இராகத் தலைவனுக்கு, கர்த்தருடைய ஊழியனாகிய தாவீது கொடுத்த பாடல்
௧ தீயவன் ஒருவன் தனக்குள், “நான் தேவனுக்கு பயப்படவோ, அவரை மதிக்கவோமாட்டேன்” எனக் கூறும்போது
அவன் மிகத்தீமையான காரியத்தைச் செய்கிறான்.
௨ அம்மனிதன் தனக்குத்தானே பொய் பேசுகிறான்.
அம்மனிதன் தனது சொந்த தவறுகளைப் பார்ப்பதில்லை.
எனவே அவன் மன்னிப்பும் கேட்பதில்லை.
௩ அவன் வார்த்தைகள் பயனற்ற பொய்களாகும்.
அவன் ஞானம் பெறவுமில்லை, நல்லதைச் செய்யக் கற்றுக்கொள்ளவுமில்லை.
௪ இரவில், அவன் தீய செயல்களைத் திட்டமிடுகிறான்.
எழுந்து, நல்லவற்றைச் செய்வதில்லை.
ஆனால் தீயவற்றைச் செய்வதற்கு அவன் மறுப்பதில்லை.
 
௫ கர்த்தாவே, உமது உண்மை அன்பு வானத்திலும் உயர்ந்தது.
உம் நேர்மை மேகங்களிலும் உயர்ந்தது.
௬ கர்த்தாவே, உமது நன்மை உயரமான மலைகளைக் காட்டிலும் உயர்ந்தது.
உமது நியாயம் ஆழமான சமுத்திரத்திலும் ஆழமானது.
கர்த்தாவே, நீர் மனிதனையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர்.
௭ உமது அன்பான இரக்கத்தைக் காட்டிலும் விலையுயர்ந்தது எதுவுமில்லை.
ஜனங்கள் உம்மிடத்தில் அடைக்கலம் புகுகின்றனர்.
உமது கருணையான பாதுகாப்பில் மகிழ்கிறார்கள்.
௮ கர்த்தாவே, உம் வீட்டின் நற்காரியங்களால் அவர்கள் புதுவலிமை பெறுகிறார்கள்.
அற்புதமான நதியிலிருந்து அவர்களைப் பருகப்பண்ணுவீர்.
௯ கர்த்தாவே, ஜீவஊற்று உம்மிடமிருந்து புறப்படுகிறது.
உமது வெளிச்சம் நாங்கள் ஒளியைக் காண உதவுகிறது.
௧௦ கர்த்தாவே, உம்மை உண்மையில் அறியும் ஜனங்களைத் தொடர்ந்து நேசியும்.
உமக்கு உண்மையாயிருக்கிற அந்த ஜனங்களுக்கு உமது நன்மை எப்போதும் இருக்கட்டும்.
௧௧ கர்த்தாவே, பெருமை நிரம்பியோர் என்னை அகப்படுத்தாதிருக்கட்டும்.
தீயவர்கள் என்னைப் பிடிக்கவிடாதிரும்.
௧௨ “துன்மார்க்கர் இங்கே விழுந்து நசுக்கப்பட்டனர்.
அவர்கள் மீண்டும் எழுந்திருப்பதில்லை” என்பதை அவர்கள் கல்லறைகளில் பொறித்து வையுங்கள்.