௪௭
கோராகின் குடும்பத்தின் இராகத் தலைவனுக்கு அளிக்கப்பட்ட ஒரு பாடல்
௧ சகல ஜனங்களே, கைகளைத் தட்டுங்கள்,
தேவனை நோக்கி மகிழ்ச்சியால் சத்தமிடுங்கள்.
௨ உன்னதமான கர்த்தர் நமது பயத்திற்குரியவர்.
பூமியெங்கும் அவர் பேரரசர்.
௩ பிறரைத் தோற்கடிக்க அவர் நமக்கு உதவுகிறார்.
அத்தேசங்களை நம் ஆளுகைக்குட்படுத்துகிறார்.
௪ தேவன் நம் தேசத்தை நமக்காகத் தேர்ந்தெடுத்தார்.
தான் நேசித்த யாக்கோபிற்காக அந்த அதிசய தேசத்தைத் தேர்ந்தெடுத்தார்.
 
௫ எக்காளமும் கொம்பும் முழங்க,
கர்த்தர் அவரது சிங்காசனத்தில் ஏறுகிறார்.
௬ தேவனைத் துதித்துப் பாடுங்கள், துதித்துப் பாடுங்கள்.
நம் அரசரைத் துதித்துப் பாடுங்கள், துதித்துப் பாடுங்கள்.
௭ அகில உலகத்திற்கும் தேவனே அரசர்.
துதிப் பாடல்களைப் பாடுங்கள்.
௮ பரிசுத்த சிங்காசனத்தில் தேவன் அமருகிறார்.
எல்லாத் தேசங்களையும் தேவன் ஆளுகிறார்.
௯ ஆபிரகாமின் தேவனுடைய ஜனங்களைத்
தேசங்களின் தலைவர்கள் சந்திப்பார்கள்.
எல்லாத் தேசங்களின் எல்லாத் தலைவர்களும் தேவனுக்குரியவர்கள்.
தேவனே எல்லோரிலும் மேன்மையானவர்.