௫௭
“அழிக்காதே” என்னும் பாடலின் இசைத் தலைவனுக்கு தாவீது அளித்த மிக்தாம் என்னும் பாடல். சவுலிடமிருந்து தப்பி தாவீது குகையில் ஒளிந்திருந்தபோது பாடியது.
௧ தேவனே, என்னிடம் இரக்கமாயிரும்.
என் ஆத்மா உம்மை நம்புவதால் என்னிடம் இரக்கமாயிரும்.
துன்பங்கள் என்னைக் கடந்து செல்கையில்,
பாதுகாப்பிற்காக நான் உம்மிடம் வந்துள்ளேன்.
௨ மிக உன்னதமான தேவனிடம் உதவி வேண்டி நான் ஜெபிக்கிறேன்.
தேவன் என்னை முற்றிலும் கண்காணித்துக்கொள்கிறார்.
௩ பரலோகத்திலிருந்து அவர் எனக்கு உதவி செய்து, என்னைக் காப்பாற்றுகிறார்.
எனக்குத் தொல்லை தரும் ஜனங்களை தோல்வி காணச் செய்கிறார்.
தேவன் தனது உண்மையான அன்பை எனக்குக் காட்டுகிறார்.
௪ என் வாழ்க்கை ஆபத்தில் சிக்கியிருக்கிறது.
என் பகைவர்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறார்கள்.
அவர்கள் மனிதரை உண்ணும் சிங்கங்களைப் போலிருக்கிறார்கள்.
அவர்கள் பற்கள் ஈட்டிகளைப் போலவும்.
அம்புகளைப் போலவும் கூர்மையானவை.
அவர்கள் நாவுகள் வாளைப் போன்று கூரியவை.
 
௫ தேவனே, நீர் வானங்களின்மேல் மிக உயரத்தில் இருக்கிறீர்.
உமது மகிமை பூமியை மூடிக் கொள்கிறது.
௬ அவர்கள் எனக்கு கண்ணி வைத்துப் பிடிக்க விரும்புகின்றனர்.
நான் விழுவதற்காக அவர்கள் ஒரு ஆழமான குழியை வெட்டினார்கள்.
ஆனால் தாங்களே அக்கண்ணியில் விழுந்தார்கள்.
 
௭ ஆனால் தேவன் என்னைப் பத்திரமாக காப்பார்.
அவர் என்னைத் துணிவுடனிருக்கச் செய்கிறார்.
நான் அவரைத் துதித்துப் பாடுவேன்.
௮ என் ஆத்துமாவே, எழுந்திரு.
வீணையே, சுரமண்டலமே இசைக்கத் தொடங்குங்கள். அதிகாலையை விழித்தெழச் செய்வோமாக!
௯ என் ஆண்டவரே, ஒவ்வொருவரிடமும் உம்மைத் துதிப்பேன்.
ஒவ்வொரு தேசத்திலும் உம்மைப்பற்றியத் துதிப்பாடல்களைப் பாடுவேன்.
௧௦ உமது உண்மையான அன்பு
வானத்தின் உயர்ந்த மேகங்களைக் காட்டிலும் உயர்ந்தது.
௧௧ தேவன் வானங்களுக்கு மேலாக எழுந்தருளியிருக்கிறார்.
அவரது மகிமை பூமியை மூடிக் கொள்கிறது.