சர்தை சபைக்கு இயேசுவின் நிருபம்
௧ “சர்தை சபையின் தூதனுக்கு எழுத வேண்டியது:
“ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் கொண்டிருக்கிறவர் இவைகளை உனக்கு கூறுகிறார்.
“நீங்கள் செய்பவற்றை நான் அறிவேன். நீங்கள் உயிர் வாழ்வதாக மக்கள் கூறுகிறார்கள். ஆனால் உண்மையில் நீங்கள் செத்துப் போனவர்களே. ௨ எழும்புங்கள். செத்துப்போகிற நிலையில் உள்ளவற்றை வலிமையுள்ளதாய் ஆக்குங்கள். முழுமையாய் சாகும் முன் பலப்படுத்திக்கொள்ளுங்கள். தேவனுக்கு நீ செய்ததெல்லாம் போதுமானதாக இல்லை என நான் காண்கின்றேன். ௩ எனவே நீங்கள் பெற்றவற்றையும், கேள்விப்பட்டவற்றையும் மறவாதீர்கள். அவற்றுக்கு அடிபணியுங்கள். உங்கள் மனதையும், வாழ்வையும் மாற்றுங்கள். நீங்கள் விழித்தெழுங்கள். அல்லது நான் திருடனைப்போல வந்து உங்களை ஆச்சரியப்படுத்துவேன். எப்பொழுது நான் வருவேன் என உங்களுக்குத் தெரியாது.
௪ “ஆனால் உங்கள் குழுவில் சிலர் பரிசுத்தமானவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் என்னோடு நடப்பார்கள். அவர்கள் வெள்ளை ஆடைகளை அணிவார்கள். ஏனென்றால் அதற்கு அவர்கள் தகுதியானவர்கள். ௫ வெற்றிபெறுகிற ஒவ்வொருவரும் இவர்களைப்போல் வெண்ணிற ஆடைகளை அணிந்துகொள்வார்கள். நான் அவர்களது பெயர்களை ஜீவப் புத்தகத்திலிருந்து எடுத்துப்போட மாட்டேன். அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள். இதனை நான் என் பிதாவின் முன்பும், தூதர்களுக்கு முன்பும் சொல்வேன்.” ௬ சபைகளுக்கு ஆவியானவர் சொல்வதை கேட்கிற யாவரும் கவனிக்க வேண்டும்.
பிலதெல்பியா சபைக்கு இயேசுவின் நிருபம்
௭ “பிலதெல்பியா சபையின் தூதனுக்கு எழுத வேண்டியது:
“உண்மையுள்ளவரும் பரிசுத்தமுள்ளவரும் இவைகளை உனக்குக் கூறுகிறார். அவர் தாவீதின் திறவுகோலை உடையவராக இருக்கின்றார். அவர் ஒரு கதவைத் திறந்தால், அதை யாராலும் மூட முடியாது. மேலும் அவர் கதவை மூடினால் யாராலும் அதைத் திறக்க முடியாது.
௮ “நீ செய்பவற்றை நான் அறிவேன். நான் உங்களுக்கு முன்னால் திறந்த வாசலை வைக்கிறேன். அதனை எவராலும் அடைக்க முடியாது. நீங்கள் பலவீனமானவர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் என் உபதேசத்தை நீங்கள் பின்பற்றினீர்கள். என் பெயரைச் சொல்ல நீங்கள் பயப்படவில்லை. ௯ கவனியுங்கள். சாத்தானைச் சேர்ந்த கூட்டம் ஒன்று உள்ளது. அவர்கள் தம்மை யூதர்கள் எனக் கூறுகிறார்கள். உண்மையில் அவர்கள் பொய்யர்களே! அவர்கள் உண்மையான யூதர்கள் அல்லர். அவர்களை உங்கள் முன் அடிபணிந்து வணங்கச்செய்வேன். என்னால் நேசிக்கப்படுகிற மக்கள் நீங்கள் என்பதை அவர்கள் அறிவர். ௧௦ எனது கட்டளைகளை நீங்கள் பின்பற்றிப் பொறுமையாக இருந்தீர்கள். அதனால் துன்ப காலத்தில் உங்களைப் பாதுகாப்பேன். முழு உலகமும் துன்பப்படும்போது நீங்கள் தப்பித்துக்கொள்வீர்கள். அத்துன்பம் உலகில் வாழும் மக்களைச் சோதிக்கும்.
௧௧ “நான் விரைவில் வருகிறேன். இப்பொழுது உள்ள வழியில் தொடர்ந்து செல்லுங்கள். அப்பொழுது எவராலும் உங்கள் கிரீடத்தை எடுத்துக்கொள்ள முடியாது. ௧௨ இதில் வெற்றி பெறுகிறவன் என் தேவனின் ஆலயத்தில், சிறந்த தூணாக விளங்குவான். இதில் வெற்றி பெறுகிறவனுக்காக நான் இதனைச் செய்வேன். அவன் எப்போதும் தேவனின் ஆலயத்தை விட்டு விலகமாட்டான். அவன் மேல் எனது தேவனின் பெயரை எழுதுவேன். அவன் மேல் எனது தேவனுடயை நகரத்தின் பெயரையும் எழுதுவேன். அந்த நகரத்தின் பெயர் புதிய எருசலேம். பரலோகத்திலிருக்கின்ற என் தேவனிடமிருந்து இந்நகரம் இறங்கி வந்துகொண்டிருக்கின்றது. நான் எனது புதிய பெயரையும் அவன் மீது எழுதுவேன்.” ௧௩ சபைகளுக்கு ஆவியானவர் கூறுவதைக் கேட்கின்ற யாவரும் கவனிக்க வேண்டும்.
லவோதிக்கேயா சபைக்கு இயேசுவின் நிருபம்
௧௪ “லவோதிக்கேயா சபைக்கு எழுத வேண்டியது:
“ஆமென்* ஆமென் இயேசுவின் பெயரைப்போல இது இங்கு பயன்படுத்தப்படுகிறது. இதன் பொருள், உண்மையான சில விஷயங்களை உறுதியாய் ஒப்புக்கொள்வது. என்பவர் உங்களுக்கு இவற்றைக் கூறுகிறார். அவரே உண்மையும் சத்தியமும் உள்ள சாட்சி. தேவனால் படைக்கப்பட்டவற்றையெல்லாம் ஆள்பவர் அவர்.
௧௫ “அவர் கூறுவது: நீ செய்பவற்றை நான் அறிவேன். நீ அனலானவனும் அல்ல, குளிர்ந்தவனும் அல்ல. ஆனால் நீ குளிராகவோ அனலாகவோ இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். ௧௬ நீ வெப்பமாக மட்டுமே உள்ளாய். நீ அனலாகவோ குளிராகவோ இல்லை. எனவே உன்னைத் துப்பி விடத் தயாராக உள்ளேன். ௧௭ உன்னைச் செல்வன் என்று நீ சொல்லிக்கொள்கிறாய். உன்னிடம் எல்லாம் உள்ளது. உனக்கு எதுவும் தேவை இல்லை என்று நீ நினைக்கிறாய். ஆனால் உண்மையில் நீ பரிதாபத்திற்குரியவன், ஏழை, குருடன், நிர்வாணி. ௧௮ நெருப்பால் தூய்மையாக்கப்பட்ட தங்கத்தை என்னிடமிருந்து வாங்குமாறு உனக்கு நான் அறிவுறுத்துகிறேன். பின்னரே நீ உண்மையான செல்வந்தன் ஆவாய். வெண்ணிற ஆடையை வாங்கிக்கொள்ளுங்கள். பிறகு நீங்கள் நிர்வாணத்தை மூடிக்கொள்ளலாம். உங்கள் கண்களுக்கான மருந்தை வாங்கிக்கொள்ளுங்கள். பிறகு உங்களால் உண்மையாகப் பார்க்க முடியும்.
௧௯ “நான் நேசிக்கிற மக்களைத் திருத்துவேன், தண்டிப்பேன். எனவே கடினமாய் முயற்சி செய்யுங்கள். உங்கள் மனதையும் வாழ்வையும் மாற்றிக்கொள்ளுங்கள். ௨௦ இதோ நான் கதவருகில் நின்று தட்டுகிறேன். எனது குரலைக் கேட்டு ஒருவன் கதவைத் திறந்தால், நான் உள்ளே வந்து அவனோடு உணவு உண்பேன். அவனும் என்னோடு உணவு உண்பான்.
௨௧ “வெற்றி பெறுகிற ஒவ்வொருவனையும் என் சிம்மாசனத்தில் என்னோடு அமரச் செய்வேன். அதுபோலவே நான் வெற்றிகொண்டு என் பிதாவோடு சிம்மாசனத்தில் உட்கார்ந்தேன். ௨௨ கேட்கிற சக்திகொண்ட ஒவ்வொருவனும் ஆவியானவர் சபைகளுக்குக் கூறுவதைக் கேட்பானாக.”

*௩:௧௪: ஆமென் இயேசுவின் பெயரைப்போல இது இங்கு பயன்படுத்தப்படுகிறது. இதன் பொருள், உண்மையான சில விஷயங்களை உறுதியாய் ஒப்புக்கொள்வது.