1 Timothy
I தீமோத்தேயு
அத்தியாயம்– ௧
௧ நம்முடைய இரட்சகராக இருக்கிற தேவனும், நம்முடைய நம்பிக்கையாக இருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் கட்டளையிட்டபடியே, இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுல், ௨ விசுவாசத்தில் உத்தம குமாரனாகிய தீமோத்தேயுவிற்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினாலும் கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக.
தவறான உபதேசத்தைக்குறித்த எச்சரிக்கை
௩ மாறுபாடான உபதேசங்களைப் போதிக்காதபடிக்கும், விசுவாசத்தினால் விளங்கும் தெய்வீக பக்திவளர்ச்சிக்கு ஏதுவாக இல்லாமல், வாக்குவாதங்களுக்கு ஏதுவாக இருக்கிற கட்டுக்கதைகளையும் முடிவில்லாத வம்சவரலாறுகளையும் கவனிக்காதபடிக்கும், நீ சிலருக்குக் கட்டளையிடும்படி, ௪ நான் மக்கெதோனியாவிற்குப் போகும்போது, உன்னை எபேசு பட்டணத்தில் இருக்கக் கேட்டுக்கொண்டபடியே செய். ௫ இந்த கட்டளையின் பொருள் என்னவென்றால், சுத்தமான இருதயத்திலும் நல்லமனச்சாட்சியிலும் மாயமில்லாத விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே. ௬ இவைகளைச் சிலர் பார்க்காமல் வீண்பேச்சுக்கு இடம்கொடுத்து விலகிப்போனார்கள். ௭ தாங்கள் சொல்லுகிறதும், தாங்கள் உறுதியாக நம்புகிறதும் என்னவென்றும் தெரியாமல், வேதபண்டிதர்களாக இருக்க விரும்புகிறார்கள். ௮ ஒருவன் நியாயப்பிரமாணத்தை நியாயப்படி கடைபிடித்தால், நியாயப்பிரமாணம் நல்லது என்று அறிந்திருக்கிறோம். ௯ எங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் நீதிமானுக்கு விதிக்கப்படாமல், அக்கிரமக்காரர்களுக்கும், அடங்காதவர்களுக்கும், பக்தியில்லாதவர்களுக்கும், பாவிகளுக்கும், அசுத்தமானவர்களுக்கும், சீர்கெட்டவர்களுக்கும், தகப்பனையும் தாயையும் கொலை செய்கிறவர்களுக்கும், கொலைபாதகர்களுக்கும், ௧௦ வேசிக்கள்ளர்களுக்கும், ஆண்புணர்ச்சிக்காரர்களுக்கும், கொத்தடிமைகளாக விற்க மனிதர்களைத் திருடுகிறவர்களுக்கும், பொய்யர்களுக்கும், பொய்யாணை இடுகிறவர்களுக்கும், ஆரோக்கியமான உபதேசத்திற்கு எதிராக போதிக்கிறவர்களுக்கும், ௧௧ ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனுடைய மகிமையான நற்செய்தியின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிறது.
பவுலுக்குக் கர்த்தருடைய கிருபை
௧௨ என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னை உண்மையானவன் என்று நினைத்து, இந்த ஊழியத்திற்கு நியமித்தபடியால் அவருக்கு நன்றி செலுத்துகிறேன். ௧௩ கடந்த காலத்தில் நான் நிந்திக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும், கொடுமைப்படுத்துகிறவனுமாக இருந்தேன்; அப்படி இருந்தும், நான் தெரியாமல், விசுவாசம் இல்லாமல் அப்படிச் செய்ததினால் இரக்கம்பெற்றேன். ௧௪ நம்முடைய கர்த்தரின் கிருபை கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள விசுவாசத்தோடும் அன்போடும் சேர்ந்து என்னிடத்தில் பரிபூரணமாகப் பெருகியது. ௧௫ பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்திற்கு வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கீகரிப்புக்கும் தகுதியுள்ளதாக இருக்கிறது; அவர்களில் மோசமான பாவி நான். ௧௬ அப்படி இருந்தும், நித்தியஜீவனை அடைவதற்காக இனிமேல் இயேசுகிறிஸ்துவிடம் விசுவாசமாக இருப்பவர்களுக்கு மாதிரியாக இருக்கும்படிக்கு மோசமான பாவியாகிய என்னிடத்தில் அவர் எல்லா நீடிய பொறுமையையும் காண்பிக்கும்படி இரக்கம்பெற்றேன். ௧௭ நித்தியமாக நிலைத்திருக்கிற அழிவில்லாத கண்ணுக்குத் தெரியாத ராஜனுமாக, தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாக இருக்கிறவருக்கு, கனமும் மகிமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். ௧௮ என் குமாரனாகிய தீமோத்தேயுவே, உன்னைக்குறித்து முன்னமே சொன்ன தீர்க்கதரிசனங்களின்படியே, நீ விசுவாசத்தையும் மனசாட்சியையும் பற்றிக்கொண்டு நல்லப் போராட்டத்தைப் போராடும்படி, இந்தக் கட்டளையை உனக்கு ஒப்புவிக்கிறேன். ௧௯ இந்த நல்ல மனச்சாட்சியைச் சிலர் தள்ளிவிட்டு, விசுவாசமாகிய கப்பலைச் சேதப்படுத்தினார்கள். ௨௦ இமெனேயும் அலெக்சந்தரும் அப்படிப்பட்டவர்கள்; அவர்கள் கர்த்தரை அவமதிக்காமல் இருக்கக் கற்றுக்கொள்ள அவர்களை சாத்தானிடத்தில் ஒப்புக்கொடுத்தேன்.