அத்தியாயம்– ௨௦
யோசபாத் மோவாபியர்களையும் அம்மோனியர்களையும் தோற்கடித்தல்
௧ இதற்குப்பின்பு மோவாப் மற்றும் அம்மோன் மக்களும், அவர்களோடு அம்மோனியர்களுக்கு அப்புறத்திலுள்ள மனிதர்களும்கூட யோசபாத்திற்கு விரோதமாக போர்செய்ய வந்தார்கள். ௨ சிலர் வந்து, யோசபாத்தை நோக்கி: உமக்கு விரோதமாக ஏராளமான மக்கள் கடலுக்கு அக்கரையிலிருக்கிற சீரியாவிலிருந்து வருகிறார்கள்; இதோ, அவர்கள் எங்கேதியாகிய ஆசாசோன் தாமாரில் இருக்கிறார்கள் என்று அறிவித்தார்கள். ௩ அப்பொழுது யோசபாத் பயந்து, கர்த்தரைத் தேடுகிறதற்கு ஆயத்தப்படுத்த, யூதாமுழுவதும் உபவாசத்தை அறிவித்தான். ௪ அப்படியே யூதா மக்கள் கர்த்தரிடத்தில் உதவிபெறக் கூடினார்கள்; யூதாவிலுள்ள எல்லாப் பட்டணங்களிலுமிருந்து அவர்கள் கர்த்தரைத் தேட வந்தார்கள். ௫ அப்பொழுது யோசபாத் கர்த்தருடைய ஆலயத்திலே புதுப்பிராகாரத்து முகப்பிலே, யூதா மற்றும் எருசலேம் மக்களும் கூடின சபையிலே நின்று: ௬ எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தாவே, பரலோகத்திலிருக்கிற நீர் அல்லவோ தேவன்; தேவரீர் மக்களுடைய தேசங்களையெல்லாம் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே வல்லமையும் பராக்கிரமமும் இருக்கிறது, ஒருவரும் உம்மோடு எதிர்த்து நிற்கமுடியாது. ௭ எங்கள் தேவனாகிய நீர் உம்முடைய மக்களாகிய இஸ்ரவேலுக்கு முன்பாக இந்த தேசத்துக் குடிமக்களைத் துரத்திவிட்டு இதை உம்முடைய சிநேகிதனாகிய ஆபிரகாமுடைய சந்ததிக்கு நிலையாக இருக்கக் கொடுக்கவில்லையா? ௮ ஆதலால் அவர்கள் இங்கே குடியிருந்து, இதிலே உம்முடைய நாமத்திற்கென்று ஒரு பரிசுத்த ஸ்தலத்தைக் கட்டினார்கள். ௯ எங்கள்மேல் பட்டயம், நியாயதண்டனை, கொள்ளைநோய், பஞ்சம் முதலான தீமைகள் வந்தால், அப்பொழுது உம்முடைய நாமம் இந்த ஆலயத்தில் விளங்குகிறபடியால், நாங்கள் இந்த ஆலயத்திலும் உமது சந்நிதியிலும் வந்து நின்று, எங்கள் துன்பத்தில் உம்மை நோக்கிக் கூப்பிடும்போது, தேவரீர் கேட்டு இரட்சிப்பீர் என்று சொல்லியிருக்கிறார்கள். ௧௦ இப்போதும், இதோ, இஸ்ரவேலர்கள் எகிப்து தேசத்திலிருந்து வருகிறபோது, அம்மோனியர்கள், மோவாபியர்கள், சேயீர் மலைத்தேசத்தாருடைய எல்லைகள் வழியாகப் போக நீர் உத்திரவு கொடுக்கவில்லை; ஆகையால் அவர்களைவிட்டு விலகி, அவர்களை அழிக்காமல் இருந்தார்கள். ௧௧ இப்போதும், இதோ, அவர்கள் எங்களுக்கு நன்மைக்குத் தீமையைச் சரிக்கட்டி, தேவரீர் நீர் எங்களுக்குக் கொடுத்த உம்முடைய தேசத்திலிருந்து எங்களைத் துரத்திவிட வருகிறார்கள். ௧௨ எங்கள் தேவனே, அவர்களை நீர் நியாயந்தீர்க்கமாட்டீரோ? எங்களுக்கு விரோதமாக வந்த இந்த ஏராளமான கூட்டத்திற்கு முன்பாக நிற்க எங்களுக்கு பெலனில்லை; நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று எங்களுக்குத் தெரியவில்லை; ஆகையால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக்கொண்டிருக்கிறது என்றான். ௧௩ யூதா மக்கள் அனைவரும், அவர்களுடைய குழந்தைகளும், மனைவிகளும், மகன்களும்கூட கர்த்தருக்கு முன்பாக நின்றார்கள். ௧௪ அப்பொழுது சபையின் நடுவிலிருக்கிற மத்தனியாவின் மகனாகிய ஏயெலின் மகனான பெனாயாவுக்குப் பிறந்த சகரியாவின் மகன் யகாசியேல் என்னும் ஆசாப்பின் மகன்களில் ஒருவனான லேவியன்மேல் கர்த்தருடைய ஆவி இறங்கினதால் அவன் சொன்னது: ௧௫ சகல யூதா மக்களே, எருசலேமின் குடிமக்களே, ராஜாவாகிய யோசபாத்தே, கேளுங்கள்; நீங்கள் அந்த ஏராளமான கூட்டத்திற்கு பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள் என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிறார்; இந்தப் போர் உங்களுடையதல்ல, தேவனுடையது. ௧௬ நாளைக்கு நீங்கள் அவர்களுக்கு விரோதமாகப் போங்கள்; இதோ, அவர்கள் சிஸ் என்னும் மேட்டுவழியாக வருகிறார்கள்; நீங்கள் அவர்களை யெருவேல் வனாந்திரத்திற்கு எதிரான பள்ளத்தாக்கின் கடைசியிலே கண்டு சந்திப்பீர்கள். ௧௭ இந்தப் போர் செய்கிறவர்கள் நீங்கள் அல்ல; யூதா மனிதர்களே, எருசலேம் மக்களே, நீங்கள் பொறுத்து நின்று கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள்; நாளைக்கு அவர்களுக்கு எதிராகப் புறப்படுங்கள; கர்த்தர் உங்களோடு இருக்கிறார் என்றான். ௧௮ அப்பொழுது யோசபாத் தரைவரை முகங்குனிந்தான்; சகல யூதா மக்களும், எருசலேமின் குடிமக்களும் கர்த்தரைப் பணிந்துகொள்ளக் கர்த்தருக்கு முன்பாகத் தாழவிழுந்தார்கள். ௧௯ கோகாத்தியர்கள் மற்றும் கோராகியரின் சந்ததியிலும் இருந்த லேவியர்கள் எழுந்திருந்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை மகா சத்தத்தோடு கெம்பீரமாகத் துதித்தார்கள். ௨௦ அவர்கள் அதிகாலமே எழுந்திருந்து, தெக்கொவாவின் வனாந்திரத்திற்குப் போகப் புறப்பட்டார்கள்; புறப்படும்போது யோசபாத் நின்று: யூதாவே, எருசலேமின் குடிகளே, கேளுங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புங்கள், அப்பொழுது நிலைப்படுவீர்கள்; அவருடைய தீர்க்கதரிசிகளை நம்புங்கள், அப்பொழுது வெற்றிபெறுவீர்கள் என்றான். ௨௧ பின்பு அவன் மக்களோடு ஆலோசனைசெய்து, பரிசுத்தமுள்ள மகத்துவத்தைத் துதிக்கவும், ஆயுதம் அணிந்தவர்களுக்கு முன்பாக நடந்துபோய், கர்த்தரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றும் உள்ளதென்று கர்த்தரைப் பாடவும், பாடகர்களை நிறுத்தினான். ௨௨ அவர்கள் பாடித் துதிசெய்யத் தொடங்கினபோது, யூதாவுக்கு விரோதமாக வந்து மறைந்திருந்த அம்மோனியர்களையும், மோவாபியர்களையும், சேயீர் மலைத்தேசத்தாரையும், ஒருவருக்கு விரோதமாக ஒருவரைக் கர்த்தர் எழும்பச்செய்ததால் அவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள். ௨௩ எப்படியென்றால், அம்மோனியரும் மோவாபியரும், சேயீர் மலைத்தேசத்தாரைக் கொல்லவும் அழிக்கவும் அவர்களுக்கு விரோதமாக எழும்பினார்கள்; சேயீர் குடிமக்களை அழித்த பின்பு, தாங்களும் தங்களில் ஒருவரையொருவர் அழிக்கத்தக்கதாகக் கைகலந்தார்கள். ௨௪ யூதா மனிதர்கள் வனாந்திரத்திலுள்ள மேடான பகுதிக்கு வந்து, அந்த ஏராளமான கூட்டம் இருக்கும் திசையைப் பார்க்கிறபோது, இதோ, அவர்கள் தரையிலே விழுந்துகிடக்கிற பிரேதங்களாகக் கண்டார்கள்; ஒருவரும் தப்பவில்லை. ௨௫ யோசபாத்தும் அவனுடைய மக்களும் அவர்களுடைய உடைமைகளைக் கொள்ளையிட வந்தபோது, அவர்கள் கண்ட ஏராளமான பொருட்களும் பிரேதங்களிலிருந்து உரிந்துபோட்ட ஆடை ஆபரணங்களும், தாங்கள் எடுத்துக்கொண்டு போகமுடியாமலிருந்தது; மூன்று நாட்களாகக் கொள்ளையிட்டார்கள்; அது அவ்வளவு மிகுதியாயிருந்தது. ௨௬ நான்காம் நாளில் பெராக்காவிலே கூடினார்கள்; அங்கே கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்தினார்கள்; ஆதலால் அவ்விடத்திற்கு இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி பெராக்கா என்று பெயரிட்டார்கள். ௨௭ பின்பு கர்த்தர் அவர்களை அவர்களுடைய எதிரிகள்பேரில் மகிழச் செய்ததால் யூதா மனிதர்களும் எருசலேம் மக்களும், அவர்களுக்கு முன்னே யோசபாத்தும் மகிழ்ச்சியோடு எருசலேமுக்குத் திரும்பினார்கள். ௨௮ அவர்கள் தம்புருக்களோடும் சுரமண்டலங்களோடும் பூரிகைகளோடும் எருசலேமிலிருக்கிற கர்த்தருடைய ஆலயத்திற்கு வந்தார்கள். ௨௯ கர்த்தர் இஸ்ரவேலின் எதிரிகளோடு போர்செய்தார் என்று கேள்விப்பட்ட அந்தந்த தேசத்தார்மேல் தேவனால் உண்டான பயங்கரம் வந்தது. ௩௦ இந்தவிதமாக தேவன் சுற்றுப்புறத்தாரால் போர் இல்லாத இளைப்பாறுதலை அவனுக்குக் கட்டளையிட்டதால், யோசபாத்தின் ஆட்சி அமைதலாயிருந்தது.
யோசபாத்துடைய அரசாட்சியின் முடிவு
௩௧ யோசபாத் யூதாவை ஆட்சிசெய்தான்; அவன் ராஜாவாகிறபோது, முப்பத்தைந்து வயதாயிருந்து, இருபத்தைந்து வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்; சில்கியின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் அசுபாள். ௩௨ அவன் தன் தகப்பனாகிய ஆசாவின் வழியிலே நடந்து, அதைவிட்டு விலகாதிருந்து, கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான். ௩௩ ஆனாலும் மேடைகள் தகர்க்கப்படவில்லை; மக்கள் தங்கள் இருதயத்தைத் தங்கள் பிதாக்களின் தேவனுக்கு இன்னும் நேராக்காதிருந்தார்கள். ௩௪ யோசபாத்தின் ஆரம்பம்முதல் கடைசிவரையுள்ள மற்ற செயல்பாடுகள் இஸ்ரவேல் ராஜாக்களின் புத்தகத்தில் உள்ளபடி ஆனானியின் மகனாகிய யெகூவின் வசனங்களிலும் எழுதப்பட்டிருக்கிறது.
௩௫ அதற்குப்பின்பு யூதாவின் ராஜாவாகிய யோசபாத் பொல்லாப்புச் செய்கிறவனான அகசியா என்னும் இஸ்ரவேலின் ராஜாவோடு நட்புகொண்டான். ௩௬ தர்ஷீசுக்குப் போகும்படிக்குக் கப்பல்களைச் செய்ய அவனோடு கூடிக்கொண்டான்; அப்படியே எசியோன்கேபேரிலே கப்பல்களைச் செய்தார்கள். ௩௭ மரேசா ஊரானாகிய தொதாவாவின் மகனான எலியேசர் யோசபாத்திற்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லி: நீர் அகசியாவோடு இணைந்துகொண்டதால், கர்த்தர் உம்முடைய செயல்களை முறித்துப்போட்டார் என்றான்; அந்தக் கப்பல்கள் உடைந்துபோனது, அவர்கள் தர்ஷீசுக்குப் போகமுடியாமற்போனது.