அத்தியாயம்– ௨
நடுநிலையான தேவனின் நியாயத்தீர்ப்பு
௧ ஆகவே, மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி, சாக்குப்போக்குச் சொல்லமுடியாது; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயும் செய்கிறதினால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைநீயே குற்றவாளியாக்குகிறாய். ௨ இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களுக்குத் தேவனுடைய நியாயத்தீர்ப்பு சத்தியத்தின்படியே இருக்கிறதென்று அறிந்திருக்கிறோம். ௩ இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களைக் குற்றவாளிகள் என்று தீர்த்தும், அவைகளையே செய்கிறவனே, நீ தேவனுடைய நியாயத்தீர்ப்புக்குத் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறாயோ? ௪ அல்லது தேவனுடைய தயவு நீ மனம்திரும்புவதற்கு உன்னை நடத்துகிறதென்று தெரியாமல், அவருடைய தயவு, பொறுமை, நீடிய சாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டைபண்ணுகிறாயோ? ௫ உன் மனதின் கடினத்திற்கும், மனம்திரும்பாத இருதயத்திற்கும் தகுந்தபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும். கோபத்தின் தண்டனை நாளிலே உனக்காகக் கோபத்தினைக் குவித்துக்கொள்ளுகிறாயே. ௬ தேவன் அவனவனுடைய செய்கைகளுக்குத் தகுந்தபடி அவனவனுக்குப் பலன் கொடுப்பார். ௭ சோர்ந்துபோகாமல் நல்ல செயல்களைச்செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனைக் கொடுப்பார். ௮ சண்டைக்காரர்களாக இருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ தேவனுடைய உக்கிரமான கோபம் வரும். ௯ முதலில் யூதர்களிலும் பின்பு கிரேக்கர்களிலும் பொல்லாப்பு செய்கிற எந்தவொரு மனிதனுக்கும் உபத்திரவமும், வியாகுலமும் உண்டாகும். ௧௦ முதலில் யூதர்களிலும் பின்பு கிரேக்கர்களிலும் எவன் நன்மைசெய்கிறானோ அவனுக்கு மகிமையும், கனமும், சமாதானமும் உண்டாகும். ௧௧ தேவனிடம் பட்சபாதம் இல்லை. ௧௨ எவர்கள் நியாயப்பிரமாணம் இல்லாமல் பாவம் செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணம் இல்லாமல் கெட்டுப்போவார்கள்; எவர்கள் நியாயப்பிரமாணத்திற்கு உட்பட்டவர்களாகப் பாவம் செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணத்தினாலே நியாயத்தீர்ப்பு அடைவார்கள். ௧௩ நியாயப்பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் தேவனுக்குமுன்பாக நீதிமான்களாவதில்லை, நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப்படுவார்கள். ௧௪ அன்றியும் நியாயப்பிரமாணம் இல்லாத யூதரல்லாதோர் சுபாவமாக நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணம் இல்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாக இருக்கிறார்கள். ௧௫ அவர்களுடைய மனச்சாட்சியும், சாட்சியிடுகிறதினாலும், குற்றம் உண்டு குற்றம் இல்லை என்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றை ஒன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கு தகுந்த செயல்கள் தங்களுடைய இருதயங்களில் எழுதியிருக்கிறது என்று காண்பிக்கிறார்கள். ௧௬ என்னுடைய நற்செய்தியின்படியே, தேவன் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மனிதர்களுடைய இரகசியங்களைக்குறித்து நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது விளங்கும்.
யூதர்களும் நியாயப்பிரமாணமும்
௧௭ நீ யூதனென்று பெயர்பெற்று நியாயப்பிரமாணத்தில் நிலைத்திருந்து, தேவனைக்குறித்து மேன்மைபாராட்டி, ௧௮ நியாயப்பிரமாணத்தினால் உபதேசிக்கப்பட்டவனாக, அவருடைய விருப்பத்தை அறிந்து, நன்மை எது, தீமை எது, என்று தெரிந்துகொள்கிறாயே. ௧௯ நீ உன்னைக் குருடர்களுக்கு வழிகாட்டியாகவும், இருளில் இருப்பவர்களுக்கு வெளிச்சமாகவும், ௨௦ பேதைகளுக்குப் போதகனாகவும், குழந்தைகளுக்கு ஆசிரியராகவும், நியாயப்பிரமாணத்தின் அறிவையும் சத்தியத்தையும் காட்டிய சட்டமுடையவனாகவும் நினைக்கிறாயே. ௨௧ இப்படியிருக்க, மற்றவனுக்குப் போதிக்கிற நீ உனக்கு நீயே போதிக்காமல் இருக்கலாமா? திருடக்கூடாது என்று பிரசங்கம் பண்ணுகிற நீ திருடலாமா? ௨௨ விபசாரம் செய்யக்கூடாது என்று சொல்லுகிற நீ விபசாரம் செய்யலாமா? விக்கிரகங்களை அருவருக்கிற நீ கோவில்களைக் கொள்ளையடிக்கலாமா? ௨௩ நியாயப்பிரமாணத்தைக்குறித்து மேன்மைபாராட்டுகிற நீ நியாயப்பிரமாணத்தை மீறி நடந்து, தேவனைக் கனவீனம்பண்ணலாமா? ௨௪ எழுதியிருக்கிறபடி, தேவனுடைய நாமம் யூதரல்லாதவர்களுக்குள்ளே உங்கள் மூலமாக அவமதிக்கப்படுகிறதே. ௨௫ நீ நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படிந்து நடந்தால் விருத்தசேதனம் பிரயோஜனமுள்ளதுதான்; நீ நியாயப்பிரமாணத்தை மீறிநடந்தால் உன் விருத்தசேதனம் விருத்தசேதனமில்லையே. ௨௬ மேலும் விருத்தசேதனமில்லாதவன் நியாயப்பிரமாணத்திற்குரிய நீதிகளைக் கைக்கொண்டு நடந்தால், அவனுடைய விருத்தசேதனமில்லாமை, விருத்தசேதனம் என்று எண்ணப்படுமல்லவா? ௨௭ சுபாவத்தின்படி விருத்தசேதனமில்லாதவனாக இருந்தும் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறவனாக இருந்தால், அவன் வேத எழுத்தும் விருத்தசேதனமும் உள்ளவனாக இருந்தும், நியாயப்பிரமாணத்தை மீறுகிற உன்னைக் குற்றப்படுத்துவானே? ௨௮ எனவே, வெளிப்புறமாக யூதனானவன் யூதன் இல்லை, வெளிப்புறமாக சரீரத்தில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனம் இல்லை. ௨௯ உள்ளத்திலே யூதனானவனே யூதன்; எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின்படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்; இப்படிப்பட்டவனுக்கு வரும் புகழ்ச்சி மனிதராலே உண்டாகவில்லை, தேவனாலே உண்டாயிருக்கிறது.