அத்தியாயம்– ௫௭
௧ நீதிமான் இறந்துபோகிறான், ஒருவரும் அதை மனதில் வைக்கிறதில்லை; புத்திமான்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள், ஆனாலும் தீங்குவராததற்குமுன்னே நீதிமான் எடுத்துக்கொள்ளப்படுகிறான் என்பதைச் சிந்திப்பார் இல்லை. ௨ நேர்மையாக நடந்தவர்கள் சமாதானத்திற்குள் பிரவேசித்து, தங்கள் படுக்கைகளில் இளைப்பாறுகிறார்கள். ௩ நாள் பார்க்கிறவளின் பிள்ளைகளே, விபசாரனுக்கும் விபச்சாரிக்கும் பிறந்த சந்ததியாரே, நீங்கள் இங்கே நெருங்கிவாருங்கள். ௪ நீங்கள் யாரைப் பரியாசம்செய்கிறீர்கள்? யாருக்கு விரோதமாக வாயைத் திறந்து, நாக்கை நீட்டுகிறீர்கள்? நீங்கள் துரோகம்செய்கிற பிள்ளைகளும், கள்ளச் சந்ததியாருமல்லவோ? ௫ நீங்கள் பச்சையான சகல மரத்தின்கீழும், தெய்வச்சிலைகளுடன் மோக அக்கினியில் வெந்து, பள்ளத்தாக்குகளிலே கன்மலை வெடிப்புகளின் கீழ் பிள்ளைகளைக் கொன்றுபோடுகிறவர்கள். ௬ பள்ளத்தாக்குகளிலுள்ள வழவழப்பான சிலைகளிடத்தில் உன் பங்கு இருக்கிறது; அவைகள், அவைகளே உன் வீதம்; அவைகளுக்கு நீ பானபலியை ஊற்றி, போஜனபலியையும் செலுத்துகிறாய்; இவைகளின்மேல் பிரியப்படுவேனோ? ௭ நீ உயரமும் உன்னதமுமான மலைகளின்மேல் உன் படுக்கையை வைக்கிறாய்; அங்கேயும் பலியிடும்படி ஏறுகிறாய். ௮ கதவுகளுக்கும் நிலைகளுக்கும் பின்னாக உன் ஞாபகக்குறியை வைக்கிறாய்; நீ என்னைவிட்டுப்போய் மற்றவர்களுக்கு உன்னை வெளிப்படுத்தினாய்; ஏறிப்போய் உன் படுக்கையை அகலமாக்கி, அவர்களுடன் உடன்படிக்கைசெய்தாய்; அவர்களுடைய படுக்கையைக் காண்கிற எல்லா இடத்திலும் அதை நேசிக்கிறாய். ௯ நீ தைலத்தைப் பூசிக்கொண்டு ராஜாவினிடத்தில் போகிறாய்; உன் வாசனைத்திரவியங்களை மிகுதியாக்கி, உன் பிரதிநிதிகளைத் தூரத்திற்கு அனுப்பி, உன்னைப் பாதாளம்வரை தாழ்த்துகிறாய். ௧௦ வழிதூரமானதால் சோர்ந்துபோகிறாய்; அது வீணென்று நீ சொல்கிறதில்லை; உன் கைபெலத்தைக் கண்டுபிடித்தாய்; ஆகையால் நீ பெலவீனமடையவில்லை. ௧௧ நீ யாருக்கு அஞ்சிப் பயப்படுகிறாய், நீ பொய்சொல்கிறாயே; நீ என்னை நினைக்காமலும், உன் மனதிலே வைக்காமலும்போகிறாய்; நான் வெகுகாலம் மவுனமாயிருந்தேன் அல்லவா? ஆகையால் எனக்குப் பயப்படாதிருக்கிறாய். ௧௨ உன் நீதியையும் உன் செயல்களையும் நான் வெளிப்படுத்துவேன், அவைகள் உனக்கு உதவாது. ௧௩ நீ கூப்பிடும்போது, உன் தெய்வச்சிலைகளின் கூட்டம் உன்னைக் காப்பாற்றட்டும்; காற்று அவைகளையெல்லாம் பறக்கடித்து, மாயை அவைகளைக் கொண்டுபோகும்; என்னை நம்பியிருக்கிறவனோ தேசத்தைச் சொந்தமாக்கிக்கொண்டு, என் பரிசுத்த மலையிலே என்னை ஆராதிக்கிறவனாயிருப்பான்.
மனம் வருந்துபவர்களுக்கு ஆறுதல்
௧௪ வழியை உயர்த்தி உயர்த்தி, அதைச் செம்மைப்படுத்தி, தடைகளை என் மக்களின் வழியிலிருந்து எடுத்துப்போடுங்கள் என்னப்படும். ௧௫ நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்கிறார்: உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்செய்கிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்செய்கிறேன். ௧௬ நான் எப்போதும் வழக்காடமாட்டேன்; நான் என்றைக்கும் கோபமாக இருப்பதுமில்லை; ஏனென்றால், ஆவியும், நான் படைத்த ஆத்துமாக்களும், என் முகத்திற்கு முன்பாகச் சோர்ந்துபோகுமே. ௧௭ நான் அவர்கள் பொருளாசையென்னும் அக்கிரமத்தின்காரணமாக கடுங்கோபமாகி, அவர்களை அடித்தேன்; நான் மறைந்து, கடுங்கோபமாயிருந்தேன்; தங்கள் மனம்போனபோக்கிலே மாறுபாடாக நடந்தார்களே. ௧௮ அவர்களுடைய வழிகளை நான் பார்த்து, அவர்களைக் குணமாக்குவேன்; அவர்களை நடத்தி, திரும்பவும் அவர்களுக்கும் அவர்களிலே துக்கப்படுகிறவர்களுக்கும் ஆறுதல் கொடுப்பேன். ௧௯ தூரமாயிருக்கிறவர்களுக்கும் அருகில் இருக்கிறவர்களுக்கும் சமாதானம் சமாதானம் என்று கூறும் உதடுகளின் பலனை படைக்கிறேன்; அவர்களைக் குணமாக்குவேன் என்று கர்த்தர் சொல்கிறார். ௨௦ துன்மார்க்கரோ கொந்தளிக்கும் கடலைப்போலிருக்கிறார்கள்; அது அமைதலாயிருக்கமுடியாமல், அதின் தண்ணீர் சேற்றையும் அழுக்கையும் கரையில் ஒதுக்குகிறது. ௨௧ துன்மார்க்கருக்குச் சமாதானம் இல்லையென்று என் தேவன் சொல்கிறார்.