அத்தியாயம்– ௨௪
௧ சர்வவல்லவருக்குக் காலங்கள் மறைக்கப்படாதிருக்க, அவரை அறிந்தவர்கள் அவர் நியமித்த நாட்களை அறியாதிருக்கிறதென்ன? ௨ சிலர் எல்லைக்குறிப்புகளை மாற்றி, மந்தைகளைப் பலாத்காரமாகக் கொண்டுபோய் தங்கள் மந்தையில் சேர்க்கிறார்கள். ௩ தாய் தகப்பன் இல்லாதவர்களின் கழுதையை ஓட்டிக்கொண்டுபோய், விதவையின் மாட்டை ஈடாக எடுத்துக்கொள்ளுகிறார்கள். ௪ தேசத்தில் சிறுமைப்பட்டவர்கள் எல்லோரும் ஒளித்துக்கொள்ளுமளவுக்கு, எளிமையானவர்களை வழியை விட்டு விலக்குகிறார்கள். ௫ இதோ, அவர்கள் காட்டுக்கழுதைகளைப்போல இரைதேட அதிகாலமே தங்கள் வேலைக்குப் புறப்படுகிறார்கள்; வனாந்திரப் பகுதிதான் அவர்களுக்கும் அவர்கள் பிள்ளைகளுக்கும் ஆகாரம் கொடுக்கவேண்டும். ௬ துன்மார்க்கருடைய வயலில் அவர்கள் அவனுக்காக அறுவடைசெய்து, அவனுடைய திராட்சைத்தோட்டத்தின் பழங்களைச் சேர்க்கிறார்கள். ௭ குளிரிலே போர்த்துக்கொள்ளுகிறதற்கு ஒன்றும் இல்லாததினால், உடையில்லாமல் இரவுதங்கி, ௮ மலைகளிலிருந்துவரும் மழையில் நனைந்து, ஒதுங்க இடமில்லாததினால் கன்மலையிலே ஒதுங்கிக்கொள்ளுகிறார்கள். ௯ அவர்களோ தகப்பனில்லாத பிள்ளையை முலையைவிட்டுப்பறித்து, தரித்திரன் போர்த்துக்கொண்டிருக்கிறதை அடகு வாங்குகிறார்கள். ௧௦ அவனை உடையில்லாமல் நடக்கவும், பட்டினியாக அரிக்கட்டுகளைச் சுமக்கவும், ௧௧ தங்கள் மதில்களுக்குள்ளே செக்காட்டவும், தாகமுள்ளவர்களாக ஆலையாட்டவும் செய்கிறார்கள். ௧௨ ஊரில் மனிதர் தவிக்கிறார்கள், குற்றுயிராய்க்கிடக்கிறவர்களின் ஆத்துமா கூப்பிடுகிறது; என்றாலும், தேவன் அதைக் குற்றமாக அவர்கள்மேல் சுமத்துகிறதில்லை. ௧௩ அவர்கள் வெளிச்சத்திற்கு விரோதமாக நடக்கிறவர்களின் கூட்டத்தார்; அவர்கள் அவருடைய வழிகளை அறியாமலும், அவருடைய பாதைகளில் தங்காமலும் இருக்கிறார்கள். ௧௪ கொலைபாதகன் பொழுது விடிகிறபோது எழுந்து, ஏழையையும் தேவையுள்ளவனைக் கொன்று, இரவுநேரத்திலே திருடனைப்போல் திரிகிறான். ௧௫ விபசாரனுடைய கண் மாலை மயங்குகிற நேரத்திற்குக் காத்திருந்து: என்னை ஒருவரும் பார்க்கமாட்டார்கள் என்று முகத்தை மூடிக்கொள்ளுகிறான். ௧௬ அவர்கள் பகலில் அடையாளம் பார்த்த வீடுகளை இரவிலே கன்னமிடுகிறார்கள்; அவர்கள் வெளிச்சத்தை அறியமாட்டார்கள். ௧௭ விடியுங்காலமும் அவர்களுக்கு மரண இருள்போல் இருக்கிறது; அப்படிப்பட்டவன் மரண இருளின் பயங்கரத்துடன் பழகியிருக்கிறான். ௧௮ நீரோட்டத்தைப்போல வேகமாகப் போவான்; தேசத்தில் அவனுடைய பங்கு சபிக்கப்பட்டுப் போகிறதினால், அவனுடைய திராட்சைத்தோட்டங்களின் வழியை இனிக்காண்பதில்லை. ௧௯ வறட்சியும் வெப்பமும் உறைந்த மழையை எரிக்கும்; அப்படியே பாதாளமானது பாவிகளை எரிக்கும். ௨௦ அவனைப் பெற்ற கர்ப்பம் அவனை மறக்கும்; புழு திருப்தியாக அவனைத் தின்னும்; அவன் அதன்பின்பு நினைக்கப்படுவதில்லை; அக்கிரமமானது பட்டமரத்தைப்போல முறிந்துவிழும். ௨௧ பிள்ளைபெறாத மலடியின் செல்வத்தை அழித்துவிட்டு, விதவைக்கு நன்மை செய்யாமல்போகிறான். ௨௨ தன் பலத்தினாலே வல்லவர்களைத் தன் பலமாக்குகிறான்; அவன் எழும்புகிறபோது ஒருவனுக்கும் உயிரைப்பற்றி நிச்சயமில்லை. ௨௩ தேவன் அவனுக்குச் சுகவாழ்வைக் கட்டளையிட்டால், அதின்மேல் உறுதியாக நம்பிக்கை வைக்கிறான்; ஆனாலும் அவருடைய கண்கள் அப்படிப்பட்டவர்களின் வழிகளுக்கு விரோதமாயிருக்கிறது. ௨௪ அவர்கள் கொஞ்சக்காலம் உயர்ந்திருந்து, பார்க்காமற்போய், தாழ்த்தப்பட்டு, மற்ற எல்லோரைப்போலும் அடக்கப்படுகிறார்கள்; கதிர்களின் நுனியைப்போல அறுக்கப்படுகிறார்கள். ௨௫ அப்படியில்லையென்று என்னைப் பொய்யனாக்கி, என் வார்த்தைகளைப் பொய்யாக்கக்கூடியவன் யார் என்றான்.