அத்தியாயம்– ௨௪
இயேசுவின் உயிர்த்தெழுதல்
௧ வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே தாங்கள் ஆயத்தம்செய்த கந்தவர்க்கங்களை அந்த பெண்கள் எடுத்துக்கொண்டு வேறு சில பெண்களோடுகூடக் கல்லறைக்கு வந்தார்கள். ௨ கல்லறையை அடைத்திருந்த கல் புரட்டித் தள்ளப்பட்டிருக்கிறதைப் பார்த்து, ௩ உள்ளே நுழைந்து, கர்த்தராகிய இயேசுவின் சரீரத்தைக் காணாமல், ௪ அதைக்குறித்து மிகுந்த கலக்கமடைந்திருக்கும்போது, பிரகாசமுள்ள ஆடை அணிந்திருந்த இரண்டுபேர் அவர்கள் அருகே நின்றார்கள். ௫ அந்த பெண்கள் பயப்பட்டு தலைகுனிந்து தரையைப் பார்த்து நிற்கும்போது, அந்த இரண்டுபேரும் அவர்களைப் பார்த்து: உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன? ௬ அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார். ௭ மனிதகுமாரன் பாவிகளான மனிதர்கள் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படவும், சிலுவையில் அறையப்படவும், மூன்றாம்நாளில் உயிரோடு எழுந்திருக்கவும் வேண்டுமென்பதாக அவர் கலிலேயாவிலிருந்த காலத்தில் உங்களுக்குச் சொன்னதை நினைத்துப்பாருங்கள் என்றார்கள். ௮ அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை ஞாபகப்படுத்தி, ௯ கல்லறையைவிட்டுத் திரும்பிப்போய், இந்தச் செய்திகளெல்லாவற்றையும் பதினொரு பேருக்கும் மற்றெல்லோருக்கும் தெரிவித்தார்கள். ௧௦ இவைகளை அப்போஸ்தலர்களுக்குச் சொன்னவர்கள் மகதலேனா மரியாளும், யோவன்னாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், இவர்களுடனேகூட இருந்த மற்ற பெண்களுமே. ௧௧ இவர்களுடைய வார்த்தைகள் அவர்களுக்கு வீண்பேச்சாகத் தோன்றினதினால், அவர்கள் இவர்களை நம்பவில்லை. ௧௨ பேதுருவோ எழுந்திருந்து, கல்லறையினிடத்திற்கு ஓடி, அதற்குள்ளே குனிந்துபார்க்கும்போது, துணிகளைத் தனியே வைத்திருக்கக்கண்டு, சம்பவித்ததைக்குறித்துத் தனக்குள்ளே ஆச்சரியப்பட்டுக்கொண்டுபோனான்.
எம்மாவூருக்குச் சென்ற இருவர்
௧௩ அன்றைய தினமே அவர்களில் இரண்டுபேர் எருசலேமுக்கு ஏழு அல்லது எட்டுமைல் தொலைவிலுள்ள எம்மாவு என்னும் கிராமத்திற்குப் போனார்கள். ௧௪ போகும்போது இந்தச் சம்பவங்கள் எல்லாவற்றையுங்குறித்து அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டார்கள். ௧௫ இப்படி அவர்கள் பேசி, உரையாடிக்கொண்டிருக்கும்போது, இயேசு தாமே சேர்ந்து அவர்களோடு நடந்துபோனார். ௧௬ ஆனாலும் அவரை அறியாதபடிக்கு அவர்களுடைய கண்கள் மறைக்கப்பட்டிருந்தது. ௧௭ அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் துக்கமுகமுள்ளவர்களாக நடந்துகொண்டே, ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளுகிற காரியங்கள் என்னவென்று கேட்டார். ௧௮ அவர்களில் ஒருவனாகிய கிலெயோப்பா என்பவன் மறுமொழியாக: இந்நாட்களில் எருசலேமிலே நடந்தவைகளை அறியாதபடிக்கு நீர் அந்நியராக இருக்கிறீரோ என்றான். ௧௯ அவர்: எவைகள் என்றார். அதற்கு அவர்கள்: நசரேயனாகிய இயேசுவைக்குறித்தவைகளே; அவர் தேவனுக்கு முன்பாகவும் மக்களெல்லோருக்கு முன்பாகவும் செயலிலும் சொல்லிலும் வல்லமையுள்ள தீர்க்கதரிசியாக இருந்தார். ௨௦ நம்முடைய பிரதான ஆசாரியர்களும் அதிகாரிகளும் அவரை மரணதண்டனைக்குட்படுத்தி, சிலுவையில் அறைந்தார்கள். ௨௧ அவரே இஸ்ரவேலை மீட்டு இரட்சிப்பவர் என்று நாங்கள் நம்பியிருந்தோம். இவைகள் சம்பவித்து இன்று மூன்று நாட்களாகிறது. ௨௨ ஆனாலும் எங்களுடைய கூட்டத்தைச் சேர்ந்த சில பெண்கள் அதிகாலமே கல்லறையினிடத்திற்குப்போய், ௨௩ அவருடைய சரீரத்தைக் காணாமல், திரும்பிவந்து, அவர் உயிரோடிருக்கிறார் என்று சொன்ன தேவதூதர்களைத் தரிசித்தோம் என்று சொல்லி, எங்களைப் பிரமிக்கச்செய்தார்கள். ௨௪ அப்பொழுது எங்களிலே சிலர் கல்லறையினிடத்திற்குப்போய், பெண்கள் சொன்னபடியே கண்டார்கள்; அவரையோ காணவில்லை என்றார்கள். ௨௫ அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் நம்புகிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே, ௨௬ கிறிஸ்து இவ்விதமாகப் பாடுபடவும், தமது மகிமையில் பிரவேசிக்கவும் வேண்டியதில்லையா என்று சொல்லி, ௨௭ மோசே முதல் எல்லாத் தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்கள் எல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார். ௨௮ அந்த சமயத்தில் தாங்கள் போகிற கிராமத்திற்கு அருகில் வந்தார்கள். அப்பொழுது அவர் தொடர்ந்து போகிறவர்போலக் காண்பித்தார். ௨௯ அவர்கள் அவரைப் பார்த்து: நீர் எங்களுடனே தங்கியிரும், மாலைநேரமானது, பொழுதும்போனது, என்று அவரை வருந்திக் கேட்டுக்கொண்டார்கள். அப்பொழுது அவர் அவர்களோடு தங்கும்படி உள்ளே போனார். ௩௦ அவர்களோடு அவர் உணவருந்தும்போது, அவர் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்தார். ௩௧ அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவரை அறிந்தார்கள். உடனே அவர் அவர்களுக்கு மறைந்துபோனார். ௩௨ அப்பொழுது அவர்கள் ஒருவரையொருவர் பார்த்து: வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளக்கிக்காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா என்று சொல்லிக்கொண்டு, ௩௩ அந்த நேரமே எழுந்திருந்து, எருசலேமுக்குத் திரும்பிப்போய், பதினொருபேரும் அவர்களோடிருந்தவர்களும் கூடியிருக்கக்கண்டு: ௩௪ கர்த்தர் மெய்யாகவே உயிர்த்தெழுந்து சீமோனுக்குக் காட்சியளித்தார் என்று அவர்கள் சொல்லக்கேட்டு, ௩௫ வழியில் நடந்தவைகளையும், அவர் அப்பத்தைப் பிட்கும்போது தாங்கள் அவரை அறிந்துகொண்டதையும் விவரித்துச் சொன்னார்கள்.
இயேசு சீடர்களுக்கு தரிசனமாகுதல்
௩௬ இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். ௩௭ அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள். ௩௮ அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்களுடைய இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன? ௩௯ நான்தான் என்று அறியும்படி, என் கரங்களையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும், எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி, ௪௦ தம்முடைய கரங்களையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். ௪௧ ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் நம்பாமல் ஆச்சரியப்படும்போது: சாப்பிடுவதற்கு ஏதாவது இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார். ௪௨ அப்பொழுது பொரித்த மீன் துண்டையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள். ௪௩ அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாக சாப்பிட்டார், ௪௪ அவர்களைப் பார்த்து: மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த செய்திகள் இவைகளே என்றார். ௪௫ அப்பொழுது வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய மனதை அவர் திறந்து அவர்களைப் பார்த்து: ௪௬ எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து பாடுபடவும், மூன்றாம்நாளில் மரித்த நிலையிலிருந்து உயிரோடு எழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது; ௪௭ அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கி எல்லாதேசத்தினர்களுக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது. ௪௮ நீங்கள் இவைகளுக்குச் சாட்சிகளாக இருக்கிறீர்கள். ௪௯ என் பிதா வாக்குத்தத்தம் செய்ததை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் நிரப்பப்படும்வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள் என்றார்.
இயேசுகிறிஸ்து பரமேறுதல்
௫௦ பின்பு அவர் பெத்தானியாவரைக்கும் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், தம்முடைய கரங்களை உயர்த்தி. அவர்களை ஆசீர்வதித்தார். ௫௧ அவர்களை ஆசீர்வதிக்கும்போது, அவர்களைவிட்டுப் பிரிந்து, பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். ௫௨ அவர்கள் அவரைப் பணிந்துகொண்டு, மிகுந்த சந்தோஷத்தோடு எருசலேமுக்குத் திரும்பிவந்து, ௫௩ நாள்தோறும் தேவாலயத்திலே தேவனைப் புகழ்ந்து ஆராதித்துக்கொண்டிருந்தார்கள். ஆமென்.