அத்தியாயம்– ௧௮
பாபிலோனின் வீழ்ச்சி
௧ இவைகளுக்குப் பின்பு, வேறொரு தூதன் மிகுந்த அதிகாரமுடையவனாக, வானத்திலிருந்து இறங்கி வருவதைப் பார்த்தேன்; அவனுடைய மகிமையினால் பூமி பிரகாசமாக இருந்தது. ௨ அவன் அதிக சத்தமிட்டு: மகா பாபிலோன் விழுந்தது! விழுந்தது! அது பேய்களுடைய குடியிருப்பும், எல்லாவித அசுத்தஆவிகளுக்கும் காவல் வீடும், அசுத்தமும் அருவருப்புமுள்ள எல்லாவித பறவைகளுடைய கூடுமானது. ௩ அவளுடைய வேசித்தனத்தின் கோபமான மதுவை எல்லா தேசத்து மக்களும் குடித்தார்கள்; பூமியின் ராஜாக்கள் அவளோடு வேசித்தனம் செய்தார்கள்; பூமியிலிருந்த வியாபாரிகள் அவளுடைய செல்வச்செழிப்பினால் செல்வந்தர்களானார்கள் என்று சொன்னான். ௪ பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: என் மக்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நடக்கும் வாதைகளில் சிக்காமலும் இருக்கும்படி அவளைவிட்டு வெளியே வாருங்கள். ௫ அவளுடைய பாவம் வானம்வரை எட்டியது, அவளுடைய அநியாயங்களை தேவன் நினைத்தார். ௬ அவள் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் அவளுக்குச் செய்யுங்கள்; அவளுடைய செய்கைகளுக்கு தகுந்தவாறு அவளுக்கு இரண்டுமடங்காகக் கொடுங்கள்; அவள் உங்களுக்குக் கலந்துகொடுத்த பாத்திரத்திலே இரண்டுமடங்காக அவளுக்குக் கலந்துகொடுங்கள். ௭ அவள் தன்னை மகிமைப்படுத்தி, எவ்வளவு செல்வச்செழிப்பாய் வாழ்ந்தாளோ அந்த அளவுக்கே வாதையையும் துக்கத்தையும் அவளுக்குக் கொடுங்கள். நான் அரசியாக இருக்கிறேன்; நான் விதவைப் பெண் இல்லை, நான் துக்கத்தைப் பார்ப்பதில்லை என்று அவள் தன் இருதயத்திலே நினைத்தாள். ௮ எனவே அவளுக்கு வரும் வாதைகளாகிய மரணமும் துக்கமும் பஞ்சமும் ஒரே நாளிலே வரும்; அவள் அக்கினியினாலே சுட்டெரிக்கப்படுவாள்; அவளுக்கு நியாயத்தீர்ப்பு கொடுக்கும் தேவனாகிய கர்த்தர் வல்லமை உள்ளவர். ௯ அவளுடன் வேசித்தனம்செய்து செல்வச்செழிப்பாய் வாழ்ந்த பூமியின் ராஜாக்களும் அவள் அக்கினியில் வேகிறதினால் உண்டான புகையைப் பார்க்கும்போது அவளுக்காக அழுது புலம்பி, ௧௦ அவளுக்கு உண்டான வாதையினால் பயந்து, தூரத்திலே நின்று: ஐயோ! பாபிலோன், மகா நகரமே! பலமான பட்டணமே! ஒருமணிநேரத்தில் உனக்கு தண்டனை வந்ததே! என்பார்கள். ௧௧ பூமியின் வியாபாரிகளும் தங்களுடைய பொருட்களான பொன்னையும், வெள்ளியையும், இரத்தினங்களையும், முத்துக்களையும், மெல்லிய ஆடைகளையும், இரத்தாம்பரத்தையும், பட்டு ஆடைகளையும், சிவப்பு ஆடைகளையும், ௧௨ எல்லாவிதமான வாசனைக் கட்டைகளையும், தந்தத்தினால் செய்த பொருள்களையும், விலையுயர்ந்த மரத்தினாலும் வெண்கலத்தினாலும் இரும்பினாலும் வெள்ளைக் கல்லினாலும் செய்திருக்கிற பொருள்களையும், ௧௩ இலவங்கப்பட்டையையும், தூபவர்க்கங்களையும், தைலங்களையும், சாம்பிராணியையும், திராட்சைரசத்தையும், எண்ணெயையும், மெல்லிய மாவையும், கோதுமையையும், மாடுகளையும், ஆடுகளையும், குதிரைகளையும், இரதங்களையும், அடிமைகளையும், மனிதர்களுடைய ஆத்துமாக்களையும் இனி வாங்குகிறவர்கள் இல்லை என்பதால் அவளுக்காக அழுது புலம்புவார்கள். ௧௪ உன் ஆத்துமா விரும்பிய பழவகைகள் உன்னைவிட்டு நீங்கிப்போனது; ஆடம்பரங்களும், செல்வச்செழிப்பும் உன்னைவிட்டு நீங்கிப்போனது; நீ அவைகளை இனிப் பார்ப்பதில்லை. ௧௫ இப்படிப்பட்டவைகளினால் வியாபாரம் செய்து அவளால் செல்வந்தர்களாக மாறியவர்கள் அவளுக்கு உண்டான வாதையைப் பார்த்து பயந்து, தூரத்திலே நின்று; ௧௬ ஐயோ! மெல்லிய ஆடையும் இரத்தாம்பரமும் சிவப்பாடையும் அணிந்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டிருந்த மகா நகரமே! ஒரே மணிநேரத்தில் எல்லாச் செல்வமும் அழிந்துபோனதே! என்று சொல்லி, அழுது துக்கத்தோடு இருப்பார்கள். ௧௭ கப்பல்களில் பயணம்செய்கிறவர்களும், மாலுமிகள் அனைவரும், கப்பலில் வேலை செய்கிறவர்களும், கடலில் தொழில்செய்கிற அனைவரும் தூரத்திலே நின்று, ௧௮ அவள் வேகிறதினால் உண்டான புகையைப் பார்த்து: இந்த மகா நகரத்திற்கு ஒப்பான நகரம் உண்டோ என்று சத்தமிட்டு, ௧௯ தங்களுடைய தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டு: ஐயோ, மகா நகரமே! கடலிலே கப்பல்களை உடையவர்கள் எல்லோரும் இவளுடைய செல்வத்தினால் செல்வந்தர்களானார்களே! ஒருமணி நேரத்திலே இவள் அழிந்துபோனாளே! என்று அழுது துக்கத்தோடு ஓலமிடுவார்கள். ௨௦ பரலோகமே! பரிசுத்தவான்களாகிய அப்போஸ்தலர்களே! தீர்க்கதரிசிகளே! அவளைக்குறித்துக் களிகூருங்கள். உங்களுக்காக தேவன் அவளை நியாயந்தீர்த்தாரே! என்று தூதன் சொன்னான். ௨௧ அப்பொழுது, பலமுள்ள தூதன் ஒருவன் பெரிய எந்திரக்கல்லுக்கு சமமான ஒரு கல்லை எடுத்துக் கடலிலே தூக்கியெறிந்து: இப்படியே பாபிலோன் மகா நகரம் வேகமாகத் தள்ளப்பட்டு, இனி ஒருபோதும் பார்க்கமுடியாமல்போகும். ௨௨ சுரமண்டலக்காரர்களும், கீதவாத்தியக்காரர்களும், நாகசுரக்காரர்களும், எக்காளக்காரர்களுமானவர்களுடைய சத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை; எந்தக் கைவினைத் தொழிலாளியும் இனி உன்னிடத்தில் இருக்கமாட்டார்கள்; எந்திரசத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை. ௨௩ விளக்குவெளிச்சம் இனி உன்னிடத்தில் பிரகாசிப்பதுமில்லை; மணமகன் மற்றும் மணமகளுடைய சத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை. உன்னுடைய வியாபாரிகள் உலகத்தின் முக்கிய நபர்களாக இருந்தார்களே; உன் சூனியத்தால் எல்லா நாட்டு மக்களும் மோசம்போனார்களே. ௨௪ தீர்க்கதரிசிகளுடைய இரத்தமும் பரிசுத்தவான்களுடைய இரத்தமும் பூமியில் கொல்லப்பட்ட அனைவருடைய இரத்தமும் அவளிடத்தில் காணப்பட்டது என்று சொன்னான்.