சங்கீதம் 21
பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். 
 1 யெகோவாவே, அரசன் உமது பெலத்தில் களிகூருகிறார். 
நீர் கொடுக்கும் வெற்றிகளில் அவருடைய மகிழ்ச்சி எவ்வளவு பெரிதாயிருக்கிறது. 
 2 அவருடைய இருதயத்தின் வாஞ்சையை நீர் அவருக்குக் கொடுத்திருக்கிறீர்; 
அவருடைய உதடுகளின் வேண்டுதலை நீர் புறக்கணிக்கவில்லை. 
 3 நிறைவான ஆசீர்வாதங்களுடன் நீர் அவரை வரவேற்று, 
சுத்தத் தங்கத்தினாலான மகுடத்தை நீர் அவர் தலையின்மேல் வைத்தீர். 
 4 அவர் உம்மிடம் ஆயுளைக் கேட்டார், அதை நீர் அவருக்குக் கொடுத்தீர்; 
அவர் என்றென்றும் வாழ, நீடித்த ஆயுளைக் கொடுத்தீர். 
 5 நீர் கொடுத்த வெற்றிகளின் மூலம் அவருடைய மகிமை பெரியதாயிருக்கிறது; 
நீர் அவரை மகிமையாலும் மகத்துவத்தாலும் நிரப்பியிருக்கிறீர். 
 6 நிச்சயமாகவே நீர் அவருக்கு நித்திய ஆசீர்வாதங்களைக் கொடுத்திருக்கிறீர்; 
உமது சமுகத்தின் ஆனந்தத்தால், அவரை மகிழ்ச்சியாக்கினீர். 
 7 ஏனெனில் அரசன் யெகோவாவிலேயே நம்பிக்கை வைக்கிறார்; 
உன்னதமானவரின் உடன்படிக்கையின் அன்பினிமித்தம் 
அவர் அசைக்கப்படமாட்டார். 
 8 உமது கரம் உம்முடைய பகைவர் எல்லோரையும் பிடிக்கும்; 
உமது வலதுகரம் உம்முடைய எதிரிகளைப் பிடித்துக்கொள்ளும். 
 9 நீர் வரும் நேரத்தில் 
அவர்களை ஒரு நெருப்புச் சூளையைப்போல் ஆக்கிவிடுவீர். 
யெகோவா தமது கடுங்கோபத்தில் அவர்களை அழித்துவிடுவார்; 
அவருடைய நெருப்பு அவர்களைச் சுட்டெரிக்கும். 
 10 நீர் அவர்களுடைய சந்ததிகளைப் பூமியிலிருந்து அழிப்பீர், 
அவர்களுடைய சந்ததிகளை மனுக்குலத்திலிருந்து அழிப்பீர். 
 11 உமது பகைவர் உமக்கு எதிராக தீமையான சதி செய்தார்கள், 
பொல்லாத சதித்திட்டங்களை வகுத்தார்கள்; ஆனாலும் அவர்களால் வெற்றி பெறமுடியாது. 
 12 நீர் வில்லை நாணேற்றி அவர்களை குறிபார்த்து எய்யும்போது, 
அவர்களை புறமுதுகு காட்டப்பண்ணுவீர். 
 13 யெகோவாவே, உமது பெலத்தில் நீர் உயர்த்தப்பட்டிருப்பீராக; 
நாங்கள் உமது வல்லமையைப் பாடித் துதிப்போம்.