33
அசீரியாவைப் பற்றிய செய்தி 
 1 அழிக்கப்படாதிருக்கும் அழிவுகாரனே, 
ஐயோ உனக்குக் கேடு! 
காட்டிக்கொடுக்கப்படாதிருந்த துரோகியே, 
ஐயோ உனக்குக் கேடு! 
நீ அழிப்பதை நிறுத்தும்போது, 
நீ அழிக்கப்படுவாய்; 
நீ காட்டிக்கொடுப்பதை நிறுத்தும்போது, 
நீ காட்டிக்கொடுக்கப்படுவாய். 
 2 யெகோவாவே, எங்கள்மேல் கிருபையாயிரும்; 
நாங்கள் உமக்குக் காத்திருக்கிறோம். 
காலைதோறும் எங்கள் பெலனாயும், 
துயரப்படும் வேளையில் எங்கள் மீட்பருமாயிரும். 
 3 உமது குரலின் முழக்கத்தின்போது மக்கள் பயந்து ஓடுகிறார்கள்; 
நீர் எழும்பும்போது நாடுகள் சிதறுண்டு போகிறார்கள். 
 4 நாடுகளே, இளம் வெட்டுக்கிளிகள் வெட்டுவதுபோல, 
உங்கள் கொள்ளைப்பொருள் அழிக்கப்படுகிறது; 
வெட்டுக்கிளிக் கூட்டம்போல மனிதர் அவைகளின்மேல் பாய்கிறார்கள். 
 5 யெகோவா புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறார், 
ஏனென்றால் அவர் உன்னதத்தில் வாழ்கிறார். 
அவர் சீயோனை நீதியாலும் நியாயத்தாலும் நிரப்புவார். 
 6 அவரே உங்கள் வாழ்நாட்களுக்கு உறுதியான அஸ்திபாரமாயிருப்பார்; 
அவர் இரட்சிப்பும், ஞானமும், அறிவும் நிறைந்த ஒரு செல்வக் களஞ்சியமுமாயிருப்பார். 
யெகோவாவுக்குப் பயந்து நடத்தலே இந்தத் திரவியத்தை அடைவதற்கான திறவுகோல். 
 7 இதோ, அவர்களுடைய தைரியமுள்ள மனிதர் தெருக்களில் சத்தமிட்டு அழுகிறார்கள்; 
சமாதானத் தூதுவர்கள் மனங்கசந்து அழுகிறார்கள். 
 8 பிரதான வீதிகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன; 
தெருக்களிலே பிரயாணிகளைக் காணவில்லை. 
உடன்படிக்கை மீறப்பட்டிருக்கிறது, 
அதன் சாட்சிகள்* 33:8 சாட்சிகள் அல்லது பட்டணங்கள் எனப்படும் அவமதிக்கப்பட்டார்கள், 
மதிக்கப்படுவார் ஒருவரும் இல்லை. 
 9 நாடு துக்கப்பட்டு சோர்ந்துபோகிறது, 
லெபனோன் வெட்கப்பட்டு வாடுகிறது. 
சாரோன் சமவெளி வனாந்திரத்தைப் போலிருக்கிறது, 
பாசானும், கர்மேலும் தங்கள் இலைகளை உதிர்க்கின்றன. 
 10 “இப்பொழுது நான் எழும்புவேன், 
இப்பொழுது நான் உயர்த்தப்படுவேன். 
இப்பொழுது நான் மேன்மைப்படுத்தப்படுவேன்” என்று யெகோவா சொல்கிறார். 
 11 “நீங்கள் பதரைக் கருப்பந்தரித்து, 
வைக்கோலைப் பெற்றெடுப்பீர்கள்; 
உங்களது சுவாசம் உங்களைச் சுட்டெரிக்கும் நெருப்பாய் இருக்கும். 
 12 மக்கள் கூட்டங்கள் சுண்ணாம்பைப்போல் எரித்து நீறாக்கப்படுவார்கள்; 
அவர்கள் வெட்டப்பட்ட முட்செடிகள்போல் நெருப்புச் சுவாலையில் எரிக்கப்படுவார்கள்.” 
 13 தொலைவில் இருப்போரே, நான் செய்தவற்றைக் கேளுங்கள்; 
அருகில் உள்ளோரே, எனது வல்லமையை ஏற்றுக்கொள்ளுங்கள்! 
 14 சீயோனின் பாவிகள் திகில் அடைகிறார்கள்; 
இறைவனை மறுதலிக்கிறவர்களை நடுக்கம் பற்றிக்கொள்கிறது: 
“சுட்டெரிக்கும் நெருப்புடன் நம்மில் எவர் வாழமுடியும்? 
நித்தியமாய் எரியும் நெருப்புடன் நம்மில் எவர் குடியிருக்க முடியும்?” 
 15 நீதியுடன் நடப்பவரும், 
சரியானதைப் பேசுபவரும், 
தட்டிப் பறித்த இலாபத்தை வெறுப்பவரும், 
இலஞ்சம் வாங்க தன் கைகளை நீட்டாதவரும், 
கொலைசெய்வதற்கான சதித்திட்டங்களைக் கேட்காமல் தன் காதை அடைத்துக்கொள்பவரும், 
தீயவற்றைப் பாராமல் தன் கண்களை மூடுகிறவரும், 
 16 அவர்கள் உயர்ந்த இடங்களில் வசிப்பார்கள்; 
கன்மலைகளின் கோட்டையே அவர்களுடைய புகலிடமாய் இருக்கும். 
அவர்களுக்கு உணவு கொடுக்கப்படும், 
அவர்களுக்குத் தண்ணீரும் குறைவில்லாமல் இருக்கும். 
 17 உன் கண்கள் அரசனை அவர் அழகில் காணும்; 
வெகுதூரத்தில் விசாலமாகப் பரந்திருக்கும் நாட்டையும் காணும். 
 18 நீங்கள் உங்கள் சிந்தைனையில் பழைய பயங்கரத்தை நினைவுகூர்ந்து: 
“அந்த பிரதான அதிகாரி எங்கே? 
வருமானத்தை எடுத்தவன் எங்கே? 
கோபுரங்களுக்குப் பொறுப்பான அதிகாரி எங்கே?” என்று கேட்பீர்கள். 
 19 விளங்காத பேச்சும், 
புரிந்துகொள்ள முடியாத அந்நிய மொழியும் உள்ள 
அந்த கொடூரமான மக்களை நீங்கள் இனி காணமாட்டீர்கள். 
 20 நமது பண்டிகைகளின் பட்டணமான சீயோனைப் பாருங்கள்; 
உங்கள் கண்கள் அமைதி நிறைந்த இருப்பிடமும், 
அசைக்கப்படாத கூடாரமுமாகிய எருசலேமைக் காணும். 
அதன் முளைகள் ஒருபோதும் பிடுங்கப்படமாட்டாது, 
அதன் கயிறுகள் ஒன்றாவது அறுக்கப்படவுமாட்டாது. 
 21 யெகோவாவே அங்கு நமது வல்லவராயிருப்பார். 
அது அகன்ற ஆறுகளும், நீரோடைகளும் உள்ள இடத்தைப் போலிருக்கும். 
துடுப்புகளால் வலித்து ஒட்டப்படும் மரக்கலங்களோ, 
பெரிய கப்பல்களோ அதில் செல்வதில்லை. 
 22 யெகோவாவே நமது நீதிபதி, 
யெகோவாவே நமக்கு சட்டம் வழங்குபவர். 
யெகோவாவே நமது அரசர்; 
நம்மைக் காப்பாற்றுபவரும் அவரே. 
 23 உங்கள் பாய்மரக் கட்டுகள் தளர்ந்து தொங்குகின்றன, 
பாய்மரங்கள் இறுக்கமாகக் கட்டப்படவில்லை, 
பாய்களும் விரிக்கப்படவில்லை. 
அப்பொழுது ஏராளமான கொள்ளைப்பொருட்கள் பங்கிடப்படும்; 
முடவர்கள்கூட கொள்ளைப்பொருட்களைத் தூக்கிக்கொண்டு போவார்கள். 
 24 சீயோனில் வாழும் ஒருவராவது, “நான் நோயாளி” என்று சொல்லமாட்டார்கள்; 
அங்கு வாழ்பவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படும்.