யூதாவில் மனாசே தனது கெட்ட ஆட்சியைத் துவங்குகிறான்
மனாசே ஆட்சிக்கு வந்தபோது அவனுக்கு 12 வயது. அவன் எருசலேமில் 55 ஆண்டுகள் அரசாண்டான். அவனது தாயின் பெயர் எப்சிபாள்.
கர்த்தரால் தவறு என்று சொல்லப்பட்ட காரியங்களையே மனாசே செய்துவந்தான். மற்ற தேசத்தினர் செய்த பயங்கரச் செயல்களையே இவனும் செய்தான். (இஸ்ரவேலர்கள் வந்தபோது அத்தகைய தேசத்தினரைக் கர்த்தர் நாட்டைவிட்டுத் துரத்தினார்) தன் தந்தை எசேக்கியா அழித்த மேடைகளை பொய்த் தெய்வங்களின் கோவில்களை இவன் மீண்டும் கட்டினான். இவன் பாகாலின் பலிபீடங்களையும் அசெரியாவின் உருவத்தூண்களையும் இஸ்ரவேல் அரசன் ஆகாப் செய்தது போன்றே கட்டினான். இவன் வானில் உள்ள நட்சத்திரங்களையும் தொழுதுகொண்டு வந்தான். கர்த்தருக்கான ஆலயங்களில் இவன் (பொய்த் தெய்வங்களுக்கான) பலிபீடங்களைக் கட்டினான். (“என் நாமத்தை எருசலேமில் வைப்பேன்” என்று இந்த இடத்தைத்தான் கர்த்தர் சொல்லியிருந்தார்) கர்த்தருடைய ஆலயத்தின் இரு முற்றங்களிலும் வானில் உள்ள கோளங்களுக்கு (நட்சத்திரங்களுக்கு) பலி பீடங்களைக் கட்டினான். தன் சொந்த மகனைப் பலியிட்டு நெருப்பில் தகனம் செய்தான். இவன் எதிர்காலத்தை அறிந்து கொள்ள பலவழிகளில் முயன்றான். அவன் மத்திரவாதிகளையும் குறிச் சொல்லுகிறவர்களையும் அணுகினான்.
இவ்வாறு கர்த்தர் தவறென்று சொன்ன பல செயல்களை மனாசே செய்துவந்தான். இது கர்த்தருக்கு கோபத்தைக் கொடுத்தது. அசெராவின் உருவம் செதுக்கிய சிலை ஒன்றை அவன் உருவாக்கினான். அதனை ஆலயத்தில் நிறுவினான். கர்த்தர் இந்த ஆலயத்தைப்பற்றி தாவீதிடமும் அவன் மகன் சாலொமோனிடமும், “இஸ்ரவேலிலுள்ள மற்ற நகரங்களை எல்லாம் விட்டு விட்டு எருசலேமைத் தேர்ந்தெடுத்தேன். இந்நகரத்திலுள்ள ஆலயத்தில் என் பெயரை எப்போதும் விளங்கவைப்பேன். இஸ்ரவேலர்கள் தங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுக்கப்பட்ட நாட்டிலிருந்து வெளியேற வைக்கமாட்டேன். எனது கட்டளைகளுக்கும் என் தாசனாகிய மோசே மூலம் கொடுத்த போதனைகளின்படியும் கீழ்ப்படிந்து நடப்பவர்களை இங்கே தங்கச் செய்வேன்” என்று சொல்லியிருந்தார். ஆனால் ஜனங்கள் தேவன் சொன்னதைக் கவனிக்கவில்லை. இஸ்ரவேலர்கள் வருவதற்கு முன்னதாக கானானில் வாழ்ந்த தேசத்தவர்கள் செய்ததைவிடவும் மனாசே அதிகமாகத் தீய காரியங்களைச் செய்தான். இஸ்ரவேலர்கள் தங்கள் நிலத்திற்கு வந்தபொழுது கர்த்தர் அந்த தேசத்தவர்களை அழித்தார்.
௧௦தனது ஊழியக்காரரான தீர்க்கதரிசிகளைப் பயன்படுத்தி, கீழ்க்கண்ட செய்தியை கர்த்தர் சொல்லச்செய்தார்: ௧௧“யூத அரசனான மனாசேயின் செயல்கள் வெறுக்கத்தக்கவை (மிக அருவருப்பானவை) இவன் இவனுக்கு முன்பு செய்த எமோரியர்களைவிட கெட்ட செயல்களைச் செய்கிறான். தனது விக்கிரகங்கள் மூலம் யூதர்களையும் பாவத்துக்குள்ளாக்குகிறான். ௧௨எனவே இஸ்ரவேலர்களின் கர்த்தர், ‘பார்! நான் எருசலேமிற்கும் யூதாவிற்கும் எதிராகப் பெருந்துன்பத்தைத் தருவேன். இதைப்பற்றிக் கேட்கும் ஒவ்வொருவரும் அதிர்ச்சி அடைவார்கள். ௧௩எனவே எருசலேமின் மேல் சமாரியாவின் மட்டநூலையும் ஆகாப் வீட்டின் தூக்கு நூலையும் பிடிப்பேன். ஒருவன் ஒரு தட்டை கழுவி துடைத்து கவிழ்த்து வைப்பது போன்று எருசலேமைச் செய்வேன். ௧௪இங்கே இன்னும் எனக்கு வேண்டிய சிலர் இருக்கிறார்கள். அதனால் அவர்களை விட்டுவிடுவேன். மற்றவர்களைப் பகைவர்களிடம் ஒப்படைப்பேன். பகைவர்கள் அவர்களைக் கைதிகளாகச் சிறைபிடித்துச் செல்வார்கள். போரில் வீரர்கள் எடுத்துச்செல்லும் விலைமதிப்புடைய பொருட்களைப்போல அவர்கள் இருப்பார்கள். ௧௫ஏனென்றால் என்னுடைய ஜனங்களாகிய இவர்கள் நான் தவறென்று சொன்னவற்றைச் செய்தார்கள். இவர்களின் முற்பிதாக்கள் எகிப்திலிருந்து வெளிவந்த நாள் முதலாகவே எனக்குக் கோபமூட்டும்படி செய்து வருகிறார்கள். ௧௬மனாசே பல அப்பாவி ஜனங்களைக் கொன்றுவிட்டான். அவன் எருசலேமை ஒரு மூலையில் இருந்து இன்னொரு மூலைக்கு இரத்தத்தாலேயே நிரப்பினான். இப்பாவங்கள் எல்லாம் யூதாவிலுள்ள ஜனங்களை இன்னும் பாவம் செய்ய சேர்க்கையாக இருந்தது. கர்த்தர் தவறென்று சொன்னதை யூதர்கள் செய்வதற்கு மனாசே காரணமானான்.’ ”
௧௭மனாசே செய்த மற்ற அனைத்து செயல்களும் அவன் செய்த பாவங்கள் உட்பட யூத அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. ௧௮மனாசே மரித்ததும், தன் முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். அவனை வீட்டுத் தோட்டத்திலேயே அடக்கம் செய்தனர். அத்தோட்டத்தின் பெயர் “ஊசா தோட்டம்” மனாசேயின் மகனான ஆமோன் புதிய அரசன் ஆனான்.
ஆமோனின் குறுகிய கால ஆட்சி
௧௯ஆமோன் ஆட்சிக்கு வந்தபோது அவனுக்கு 22 வயது. அவன் எருசலேமில் இரண்டு ஆண்டுகள் அரசாண்டான். அவனது தாயின் பெயர் மெகல்லேமேத். இவள் யோத்பா ஊரானாகிய ஆருத்சியின் மகள்.
௨௦இவனும் தன் தந்தை மனாசேயைப் போல், கர்த்தருக்கு வேண்டாததையே செய்துவந்தான். ௨௧அவன் தன் தந்தையைப் போலவே வாழ்ந்தான். தன் தந்தை செய்த விக்கிரகங்களையே தொழுதுகொண்டான். ௨௨இவன் தன் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைவிட்டு விலகி அவருக்கு விருப்பமான வழியில் வாழாமல் போனான்.
௨௩ஆமோனின் வேலைக்காரர்கள் இவனுக்கெதிராகச் சதி செய்து இவனை வீட்டிலேயே கொன்றுவிட்டனர். ௨௪பொது ஜனங்களோ அரசன் ஆமோனைக் கொன்றவர்களைக் கொன்றனர். பிறகு ஜனங்கள் இவனது மகனான யோசியா என்பவனை அரசனாக்கினார்கள்.
௨௫ஆமோன் செய்த மற்ற அனைத்து செயல்களும் யூத அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. ௨௬ஆமோன் ஊசா தோட்டத்தில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டான். ஆமோனின் மகனான யோசியா என்பவன் புதிய அரசனானான்.